'பஸ் ரூட்டா ரயில் ரூட்டா' எது கெத்து? கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்

'பஸ் ரூட்டா ரயில் ரூட்டா' எது கெத்து? கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்
'பஸ் ரூட்டா ரயில் ரூட்டா' எது கெத்து? கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்

கல்லூரி வாசலில் கற்களை வீசி மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் தப்பியோட்டம். ஓடிய மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னை பச்சையப்பன் கல்லூரி அருகே 40க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த ரோந்து போலீசார் உடனடியாக அராஜகத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை பிடிக்கச் சென்றபோது சிதறி ஓடினர். அப்போது அங்கு நின்றிருந்த 6 மாணவர்களை மட்டும் போலீசார் பிடித்தனர்.

இந்த தாக்குதலில் ஒரு மாணவருக்கு காயம் ஏற்பட்டது. சிதறி ஓடிய மாணவர்கள் கல்லூரிக்கு அருகில் இருந்த டிரான்ஸ்பார்மரில் மறைத்து வைத்திருந்த பையை சோதனையிட்ட போது அதில், 8 பட்டாக்கத்திகள் மற்றும் காலி மதுபாட்டில்கள் இருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து பிடிப்பட்ட ஆறு மாணவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ரயிலில் செல்லும் திருத்தணி ரூட் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும், பூந்தமல்லி பஸ் ரூட் மாணவர்களுக்கும் இடையே யார் பெரியவர்கள் என்ற மோதல் கடந்த சில நாட்களாகவே நடந்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனால் திருத்தணி ரூட் மாணவர்கள் தங்களது கெத்தை காண்பிக்க பூந்தமல்லி செல்லும் பேருந்தில் அட்டகாசம் செய்துள்ளனர். பின்னர் ஹாரிங்டன் சாலையில் பச்சையப்பன் கல்லூரிக்கு அருகே திருத்தணி ரூட் மாணவர்கள் சுமார் 40க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி, பட்டாக்கத்தி மற்றும் காலி மதுபாட்டில்களை வீசி கெத்து காண்பிக்க திட்டமிட்டுள்ளனர்.

இதையடுத்து உடனடியாக போலீசார் வந்ததால் கற்களை வீசி தாக்குதல் நடத்திவிட்டு கத்திகளை விட்டு விட்டு மாணவர்கள் தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. முன்னதாக பூந்தமல்லி பேருந்தில் அட்டகாசத்தில் ஈடுபட்டபோது போலீசார் வந்ததால் சிதறி ஓடியுள்ளனர். அப்போது பச்சையப்பன் கல்லூரியில் ரகளை நடக்க வாய்ப்பிருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து பிடிபட்ட 6 மாணவர்களும் நடக்கக்கூடிய பிரச்னையை வேடிக்கை பார்த்ததும், இந்த பிரச்னைக்கு தொடர்பில்லை என போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளதால் அவர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு அழைக்கும் போது விசாரணைக்கு ஆஜராகும் படி அனுப்பி வைத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

வீடியோவை வைத்து பிரச்னையில் ஈடுபட்ட மாணவர்களின் பட்டியலை தயார் செய்து வருவதாகவும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த மாணவர்கள் சஸ்பெண்டு செய்ய கல்லூரி நிர்வாகத்திடம் பரிந்துரைக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com