Published : 14,May 2022 04:00 PM

எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’

Life-History-of-WatchMakers

காலம் பொன் போன்றது என்பார்கள். அப்படி நமக்கு காலத்தை உணர்த்திக் கொண்டே இருப்பது கடிகாரம். திட்டமிடலுக்கு முக்கிய காரணமாக இருப்பதும் கடிகாரம். நேரம் தவறாமல் நம்முடைய அன்றாட பணிகளை செய்வதற்கு காரணமாக இருப்பதும் கடிகாரம். ஒவ்வொரு வேலைகளுக்கு இடையிலும் நாம் நேரத்தை பார்ப்பதற்கு தவறுவதில்லை. நேரத்தோடு நம்முடைய வேலைகளை உருட்டிக் கொண்டே இருப்பது அந்தக் கடிகாரம்தான். கடிகாரம் ஓடாமல் நின்று விட்டால் வாழ்க்கை ஓட்டமே சற்று நின்றதுபோலத் தோன்றும்.

விதவிதமான கடிகாரங்கள் இருந்தாலும் கூட அவை பழுதாகி விட்டால் சரி செய்வதற்கு தகுந்த நபரைத் தேடி அலைய வேண்டியிருக்கும். அங்கொன்றும் இங்கொன்றுமாக எங்கோ ஒரு மூலையில் இருப்பார்கள் கடிகாரம் பழுதுபார்க்கிறவர்கள். எப்படிப்பட்ட கடிகாரமாக இருந்தாலும்கூட பழுதாகிவிட்டால் அவற்றை மிக நுணுக்கமாக சரிசெய்து கொடுப்பார்கள். அவர்களின் வாழ்நிலை எப்படி இருந்தது, இப்போது எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

ரசூல் பாஷா... வயது ஐம்பத்தி மூன்று.. செஞ்சியில் பேருந்து நிலையம் அருகே ஒரு மூலையில் 2க்கு 4 அடி அளவில் ஒரு சிறிய கண்ணாடி பெட்டியோடு உற்று பார்த்துக்கொண்டு ஏதோ வேலை செய்து கொண்டிருந்தார். ஆமாம் கைக்கடிகாரம் பழுது பார்ப்பவர்.
“முப்பத்தி ஐந்து வருஷமா இந்தக் கடிகாரம் பழுது பார்க்கிற வேலைதான் செஞ்சுகிட்டு வர்றேங்க. சின்ன வயசுல ஏதாவது வித்தியாசமான வேலையைக் கத்துக்கணும் அப்படின்னு இந்த வேலையை கத்துக்கிட்டேன்.

image

கடிகாரம் ரிப்பேர் ஒன்றுதான் ரொம்ப நுணுக்கமான வேலை. கடிகாரத்தில் டைம் பார்க்க எல்லோருக்கும் தெரியும். ஆனா அந்தக் கடிகாரம் ரிப்பேர் ஆயிடுச்சுன்னா அது எப்படி ரிப்பேர் ஆச்சுன்னு இன்னமும்கூட நிறைய பேருக்கு தெரியாது. நேராக கொண்டு வந்து எங்கள மாதிரி ரிப்பேர் பார்க்கிற ஆளுங்க கிட்ட கொடுத்துடுவாங்க. நாங்க அந்தக் கடிகாரத்தை பிடிச்சி லென்ஸ் கண்ணாடி வைச்சு, ஒவ்வொரு பாகமா சோதனை பண்ணுவோம். பெரும்பாலும் ஒரு பேட்டரி மாத்திட்டா கடிகாரம் பழையபடி ஓட ஆரம்பிச்சிடும்.

முன்னாடி எல்லாம் கீ கொடுக்கிற கடிகாரம்தான் அதிகளவு இருக்கும். சாதாரணமாக ஒரு கடிகாரம் வாங்கினால், அதை 15 வருஷம், 20 வருஷம்லாம் கட்டுவாங்க. அடிக்கடி கடிகார கைப்பட்டையை மாத்துறவங்களும், நிறைய பேர் இருப்பாங்க. மெட்டல் கைப்பட்டையும் உண்டு. ஒரு நாளைக்கு ஒரு கடிகாரமோ 2 கடிகாரமோ ரிப்பேருக்கு வரும். சாதாரணமா 10 நிமிடம், 15 நிமிடத்துக்குள்ள அதுக்குள்ள இந்தக் கடிகாரத்தில என்ன ரிப்பேர்னு கண்டுபிடிச்சுடலாம். சில கடிகாரத்தில் ரிப்பேர் கண்டுபிடிக்கிறது ரொம்ப சிரமமா இருக்கும். எந்தக் கடிகாரம் இருந்தாலும் வேலை ரொம்ப நுணுக்கமாக செய்யணும். ரொம்ப நேரம் உத்து பாக்குறதால, நேரத்துல வீட்டுக்கு போனாகூட தூக்கம் சீக்கிரம் வராதுங்க. கழுத்து வலி ஒரு பக்கம் தொடர்ச்சியாக இருக்கும். அதையெல்லாம் கடிகாரம் ரிப்பேர் பண்ண வர்றவங்ககிட்ட சொல்ல முடியுமா? எப்படியோ பழகிப்போச்சு இந்த வாழ்க்கை.

சாதாரணமா ஒரு கைக்கடிகாரம் சர்வீஸ் பண்றதுக்கு அப்ப எல்லாம் 70 ரூபாய் முதல் 75 ரூபாய் கொடுப்பாங்க. இப்ப 200, 300 கொடுத்தாலும் கூட தினமும் வேலை இருக்கிறது இல்லை. நேரம் நல்லா இல்ல அப்படின்னு நான் எப்போதும் பார்க்கிறது கிடையாதுங்க. எனக்கு எல்லா நேரமும் நல்ல நேரம்தான். நேரம் நின்னுடக்கூடாது அப்படின்னு பார்க்கிற ஆள் நான்.

image

நாங்க வேலை செய்ய தொடங்கும்போதெல்லாம் நிறைய இளைஞர்கள் ஆர்வமாக கடிகாரம் ரிப்பேர் பண்ற வேலைக்கு வருவாங்க. இப்ப ஒருத்தர் கூட வர்லையே! செல்போன் எப்ப வந்துச்சோ அப்பயே கடிகாரம் பயன்பாட்டில் இருந்து விலகிப்போயிடுச்சு. ஏதாவது கல்யாணத்துல, கம்பெனியில வாட்ச் கொடுக்கிற பழக்கம் இன்னுமும் இருக்குது. அதுல ஒண்ணு, ரெண்டு ரிப்பேர் ஆச்சுன்னா வரும். அது வந்தா தாங்க உண்டு. இப்ப எல்லாம் மூணு நாளைக்கு ஒரு வாட்ச் ரிப்பேர் பண்றதுக்கு வருவதே பெரிய விஷயமா இருக்கு. எப்படியோ இந்த தொழில் செஞ்சிக்கிட்டு என் பொண்ணை கட்டி ‌கொடுத்துட்டேன். இன்னும் கொஞ்ச நாள்ல பையன் வேலைக்கு போயிடுவான். பெரிய சிரமம் இருக்காது. அதுவரைக்கும் இந்தக் கடிகாரத்தை பார்த்துகிட்டேதான் இருப்பேன்.நேரம் தவறாமல் நாம் இருக்க வேண்டும் என்பதற்காக எவ்வளவு நேரம் ஆனாலும் பரவாயில்லை என்று ரிப்பேர் ஆன கடிகாரத்தை சரிசெய்து கொடுக்கிறார் ரசூல் பாஷா. காலம் பொன் போன்றது என்பதை நாம் உணர்ந்தோமோ இல்லையோ ரசூல் பாஷா உணர்ந்திருக்கிறார்.

-ஜோதி நரசிம்மன்

முந்தைய அத்தியாயத்தை படிக்க... எளியோரின் வலிமை கதைகள் 29: சாலையோர பலா பழ விற்பனையாளர்களின் பரிதாப வாழ்க்கை!

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்