Published : 13,May 2022 05:59 PM

’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?

Don-Movie-Review

‘டாக்டர்’ பட செம்ம மாஸ் சக்சஸுக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ’டான்’. அட்லியின் உதவி இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியிருக்கும் முதல் படம்.

அப்பா சமுத்திரகனி தன் மகனை என்ஜினியர் ஆக்க ஆசைப்படுகிறார். ஆனால், மகன் சக்ரவர்த்திக்கு (சிவகார்த்திகேயன்) அதில் கொஞ்சம்கூட விருப்பம் இல்லை. வலுக்கட்டாயமாக மகனை என்ஜினியரிங் கல்லூரியில் கொண்டுபோய் அங்கு படிக்காமல் மாணவர்கள் மத்தியில் ‘டான்’ ஆக வலம் வருகிறார். கல்லூரியின் டிசிப்ளின் கமிட்டியின் தலைவராக இருக்கும் எஸ்.ஜே சூர்யாவுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் பனிப்போர் ஏற்படுகிறது. இதனால், சிவகார்த்திகேயன் என்ன மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கிறார், என்ஜினியராகி அப்பா சமுத்திரக்கனியின் கனவைப் பூர்த்தி செய்தாரா என்பதுதான் ’டான்’ மீதிக்கதை.

காதல், காமெடி, டான்ஸ், ஃபைட், சென்டிமெண்ட் என மீண்டும் ’ஜாலி வாலா’ பட்டாஸாய் வெடித்திருகிறார் சிவகார்த்திகேயன். பள்ளி காலத்தில் பிரியங்காவை ‘பிரியம்’காவாக்க பின்னால் சுற்றுவது, கல்லூரியில் சேட்டைகள் செய்வது என நம் பள்ளிக் கல்லூரி வாழ்க்கையை ஒருமுறை திரும்பிப் பார்க்க வைக்கிறார். செம கியூட்டாக இருக்கிறார் பிரியங்கா மோகன். அதைத் தாண்டி சொல்லவும் ஏதுமில்லை, சொல்லவும் முடியவில்லை. ’சூதுகவ்வும்’ படத்தின் நாயகி கற்பனையானவள் இல்லையா? இங்கே பிரியங்கா மோகனின் கதாப்பாத்திரம் நிஜமானது. ஆனால், கற்பனை கதாப்பாத்திரம் போலவே உலாவுகிறது.

பேராசிரியராக எஸ்.ஜே சூர்யா நடிப்பில் டிஸ்டின்க்‌ஷன் வாங்கும் மாணவன். சமுத்திரக்கனியும் வெளுத்து வாங்கியிருக்கிறார். சமுத்திரக்கனியின் உடம்புக்குள் எப்படி எம்டன் மகன் நாசர் புகுந்தாரோ, அப்படித்தான் நண்பன் பட ‘வைரஸ்’ சத்யராஜ், எஸ்.ஜே சூர்யாவின் உடம்புக்குள் புகுந்ததுபோல் உள்ளது. ’என்னை ஒரு ஆசிரியர் மன்னிக்கலைன்னா இந்த இடத்துக்கு வந்திருக்க முடியாது’ என்று சிவகார்த்திகேயனிடம் பேசும் காட்சிகளில் உண்மையான ‘டான்’ ஆகிவிடுகிறார் எஸ்.ஜே. சூர்யா. ’காலேஜ் விளம்பரத்துல வந்துச்சே... அந்தப் பொண்ணை லவ் பண்ணத்தான் நான் இந்தக் காலேஜ்ல சேர்ந்தேன்’ என்று கலகலப்பூட்டும் பால சரவணனைத் தவிர்த்து, விஜே விஜய், சிவாங்கி, ராமதாஸ் என துணை கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் பெரிதாக ஈர்க்கவில்லை.

image

இயக்குநர் சிபி சக்கரவர்த்திக்கு இது முதல் படம். காதல், காமெடி காட்சிகள் மட்டுமல்ல மாணவர்கள் நினைத்தால் ஆசிரியர்களை எப்படியெல்லாம் டார்ச்சர் செய்யமுடியும் என்ற காட்சிகளில் கொஞ்சம் ரசிக்க வைத்துள்ளார். ஆனால், இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் ப்ரோ.

படத்தில் பின்னணி இசையும் பாடல்களும்தான் திரைக்கதையை கொஞ்சம் துள்ளளோடு நகர்த்துகின்றன. ஃபைட் தேவையா? என்று கேட்டாலும் அவை எல்லாமே ரசிக்க வைக்கின்றன.

“ஆண் குழந்தைதானே பொறந்திருக்கு?” என்று கேட்கும் இந்த யுகத்திலும் “பெண் குழந்தைதானே பிறந்திருக்கு?” என்று ஆசையாக ஓடிவரும் சமுத்திரக்கனி முற்போக்கு சமுத்திரக்கனியாக தொடர்வார் என்று எதிர்பார்த்தால் அடுத்தடுத்தக் காட்சிகளில் பெற்றோர்களின் ஆசைகளை-கனவுகளைப் பிள்ளைகள் மீது திணிக்கும் பிற்போக்கு அப்பாவாகத் தொடர்கிறார். அன்பான, அட்வைஸான ‘அப்பா’ சமுத்திரக்கனியை வித்தியாசமாக காட்டவேண்டும் என்பதற்காக இப்படத்தில் ‘எம்டன் மகன்’ அப்பாவாக உருமாற்றியிருக்கிறார்கள்.

ஃப்ளாஷ்பேக்குகளை சொல்லும் விதமும் ரொம்ம்ம்ம்ம்ம்ப பழசுதான். இதில், புதுசு என்றால் ’ஆட்டோகிராஃப்’ சேரன் சைக்கிளில் வருவார். ’டான்’ சிவகார்த்திகேயன் காரில் வருகிறார் அவ்வளவுதான். படம் முழுக்க கல்லூரிக்குள்ளேயே எடுக்கப்பட்டிருப்பது கொஞ்சம் கண்களை சோர்வடைய வைக்கிறது. என்னதான் கமர்ஷியல் சினிமாவாக இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா என்று கேட்கத் தூண்டுகிறது லாஜிக். எஸ்.ஜே சூர்யாவை வெளிநாட்டுக்கு அனுப்பும் சிவகார்த்திகேயனின் ப்ளானிங் காட்சி.

image

’பெஸ்ட்’ என்ஜினியரிங் கல்லூரி என்று விளம்பரப்படுத்திவிட்டு ‘பீஸ்டு’ தனமான கல்லூரிகளாக இருக்கின்றன என்று சொல்லவருவது ஓகே. ஆனால், ஒழுக்கம்தான் முதலில். படிப்பு அப்புறம்தான் என்று ஒரு பேராசிரியர் சொல்வதில் என்ன தவறு? அவரை ஏன் வில்லத்தனமானவராக காண்பிக்கவேண்டும்?

தொடர்ந்து பொறியியல் படிப்பை குறைசொல்லும் படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதுகுறித்த, விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தவறில்லை. ஆனால், பொறியியல் படிப்பே வீணானது போல் சித்தரிக்கப்படுகிறது. என்ஜினியரிங் கல்லூரிகள் தரமான பொறிஞர்களை உருவாக்குகிறதா என்பதைத்தான் ஆராய்ந்து இனி வரும் இயக்குனர்கள் படம் இயக்கவேண்டும் என்பது வேண்டுகோள்.

க்ளைமாக்ஸில் சென்டிமெண்ட் ஆக இருக்கவேண்டும் என்பதற்காவே திணிக்கப்பட்டதுபோல் இருக்கிறது சமுத்திரக்கனியின் காட்சிகள். சைக்கிளிலிருந்து விழுந்துவிடும் மகனை கவனிக்காமல் சைக்கிளுக்கு ஏதாவது ஆக்கிவிட்டதா என்று பார்ப்பது, மகன் கிரைண்டரில் கையை விட்டு கையை உடைத்துக்கொள்ளும் போதும் தேர்வெழுத வைப்பது,, மட்டனை வாங்கிவந்து கோபத்துடன் மொத்தமாக சிவகார்த்திகேயனின் தட்டில் கொட்டி சாப்பிட விடாமல் செய்வது, லேப்டாப்பை தீ வைப்பது எரிப்பது என படத்தில் சொல்வது போலவே பல்வேறு காட்சிகளில் சமுத்திரக்கனியின் கதாப்பாத்திரம் சேடிஸ்ட்தான். க்ளைமாக்ஸில் அதை, எப்படி சமாளிக்க முட்டுக்கொடுக்க முயன்றாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கதையாக கேட்கும்போது ‘டான்’ நன்றாக இருந்திருக்கும். ஆனால், திரைக்கதைதான் சிவகார்த்திகேயன் பயணிக்கும் கார்போல எதைநோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்று தெரியாமல் பேந்த பேந்த முழித்துக்கொண்டிருக்கிறது. ’டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயன் டாக்டராக இருந்தாலும் பெரும்பாலான காட்சிகளில் ’டான்’ ரேஞ்சுக்கு சில பல வேலைகளையெல்லாம் செய்வார். ஆனால், ’டான்’ படத்தில் சிவகார்த்திகேயன் அப்படி இல்லை. படத்தில் வைத்திருக்கும் டம்மி துப்பாக்கியைப் போலவே தலைப்பும் டம்மியாகவே இருக்கிறது.

கதை சொல்ல வரும் கருத்துகளுக்காக வேண்டுமானால் ஒருமுறை பார்க்கலாம்.

- வினி சர்பனா

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்