Published : 12,May 2022 06:30 AM
இலங்கையில் ஒரு வாரத்திற்குள் புதிய பிரதமர் நியமனம் - கோட்டாபய ராஜபக்ச தகவல்

இலங்கையில் புதிய பிரதமர் ஒருவாரத்திற்குள் நியமிக்கப்படுவார் என்று அந்நாட்டு அதிபர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், நாளுக்கு நாள் தீவிரமடைந்த மக்கள் போராட்டத்திற்கு அடிபணிந்து, பிரதமர் பதவியில் இருந்து அண்மையில் விலகினார் மகிந்த ராஜபக்ச. அவரின் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து பல இடங்களில் வன்முறை வெடித்தது. இந்தசூழலில் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
காலிமுகத்திடலில் கடந்த 9ஆம் தேதி நிகழ்ந்த வன்முறை மற்றும் அதற்கு முன்பு நடைபெற்ற வன்முறை செயல்களை யாராலும் நியாயப்படுத்த முடியாது என குறிப்பிட்டார். வன்முறை சம்பவங்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது தடைப்பட்டுள்ள ஆட்சிமுறை செயல்பாடுகளை முன்கொண்டு செல்வதற்கு ஒரு வாரத்துக்குள் புதிய அரசாங்கத்தை நிறுவ உள்ளதாகவும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்சியின் சார்பில் மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தக்கூடிய பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமிக்க உள்ளதாகவும் அதிபர் கோட்டாபய ராஜபக்ச கூறினார்.
நாடு இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு, நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.