தங்க நகை வாங்க போறீங்களா? -முக்கியமா இதை கொஞ்சம் கவனியுங்க!

தங்க நகை வாங்க போறீங்களா? -முக்கியமா இதை கொஞ்சம் கவனியுங்க!
தங்க நகை வாங்க போறீங்களா? -முக்கியமா இதை கொஞ்சம் கவனியுங்க!

நகைகளின் தரத்தை உறுதி செய்யும் பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரை பதித்த தங்க நகைகளை வாங்குவதே சிறந்தது.

இந்தியாவில் தங்கம் என்றாலே தனி மவுசுதான். தங்கம் வெறும் அலங்காரப் பொருளாக மட்டுமின்றி, நடுத்தரக் குடும்பத்தினரின் சேமிப்பு மற்றும் முதலீடாகவும் உள்ளது. எனவே தங்க ஆபரணங்கள் வாங்கும்போது கட்டாயம் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். மேலும் ஹால் மார்க் முத்திரையிடப்பட்ட தங்க நகைகளைத்தான் வாங்க வேண்டும் என்று மற்றவர்கள் சொல்லி கேட்டிருப்பீர்கள். ஹால்மார்க் என்றால் என்ன? ஹால்மார்க் தங்க நகையை அடையாளம் காண்பது எப்படி?  என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

தங்க நகைகளின் நம்பகத்தன்மை மற்றும் தரத்தை உறுதி செய்யும் வகையில், தங்க நகைகள் மீது ஹால்மார்க் முத்திரை இடம்பெற செய்வது கட்டாயம் என்ற விதிமுறை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அமலில் உள்ளது.

ஹால் மார்க் என்றால் என்ன?

ஹால் மார்க் என்பது இந்தியாவில் தங்க அணிகலன்களின் தரத்தை மதிப்பிடும் முறை ஆகும். இந்தியத் தர நிர்ணய அமைப்பு, அதவாது சுருக்கமாக பிஐஎஸ் அமைப்பின் உரிமம் பெற்ற ஹால்மார்க் மையங்கள், பிஐஎஸ் வகுத்திருக்கும் விதிமுறைகளைக் கொண்டு, தங்கத்தின் தூய்மை அளவுக்கேற்றபடி ஹால் மார்க்கிங்கை வழங்குகின்றன.

ஹால் மார்க் முத்திரையிடப்பட்ட தங்க அணிகலன்களில் 4 குறியீடுகள் இடம்பெற்றிருக்கும். முதலாவதாக,  தங்க அணிகலன்களில் பிஐஎஸ் லோகோ இடம் பெற்றிருக்கும். இரண்டாவதாக, தங்கத்தின் காரட் தூய்மை மற்றும் நேர்த்தி குறிப்பிடப்பட்டிருக்கும். மூன்றாவதாக, ஹால் மார்க்கிங் உரிமம் பெற்ற ஹால் மார்க்கிங் மையத்தின் குறியீடு இருக்கும். நான்காவதாக, வணிகம் செய்யும் கடையின் குறியீடு இருக்கும். இந்த அடையாளங்களைக் கொண்டு ஹால்மார்க் முத்திரையிட்ட தங்கத்தினை நம்பிக்கையுடன் வாங்கலாம்.

கண்டுபிடிக்கும் வழிகள்

நகைகளில் பிஐஎஸ் என்ற குறியீடு முக்கோண வடிவில் இருக்கும். அதில்  எவ்வளவு சுத்தமான தங்கம் என்ற அளவு இருக்கும். உதாரணமாக, தங்கத்தில் அச்சடிக்கப்பட்டிருக்கும் எண் 958 என்று இருந்தால் அது 23 காரட் தங்கம் என்று அர்த்தம். அதுவே 916 என்றால் 22 காரட் தங்கம், 875 என்றால் 21 காரட் தங்கம் என்று அர்த்தம். தங்கத்தில் 14 காரட், 18 காரட் மற்றும் 22 காரட் என்ற அளவுகள் மட்டுமே உண்டு.

தங்கத்தின் மதிப்பீடும், ஹால் மார்க் சென்டரின் அடையாள குறியீடும் இருக்க வேண்டும். எந்த வருடத்தில் தயாரிக்கப்பட்டது என்பதும் குறிப்பிட்டிருக்க வேண்டும். உதாரணமாக, `A’ என இருந்தால், அந்தத் தங்கம் 2000-மஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது என்று அர்த்தம். `B’ - 2001, ‘C’ - 2002, ‘D’ - 2003, ‘E’ - 2004, ‘F’ - 2005, ‘G’ - 2006, ‘H’ - 2007, ‘J’ - 2008. இதுபோல் தொடர்ந்து கணக்கிட்டுக்கொள்ளவும். ‘X’ என இருந்தால் 2022-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட தங்கம் என்று அர்த்தம். மேலும் நகை கடைக்குரிய  அடையாள குறியீடு இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஹால் மார்க்கிங் செய்யப்பட்ட தங்க அணிகலன் வாங்கியதில் ஏதாவது குறைகள் தென்பட்டால், தங்க அணிகலன் வாங்கிய வணிக நிறுவனத்தில் தகுந்த விளக்கம் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அதே அளவிலான வேறு அணிகலன்களைப் பெற்றுக் கொள்ளலாம். தங்க நகை வாங்கும்போதோ, வாங்கிய பின்னரோ தரத்திலோ, எடையிலோ, வேறு எந்தக் குறைபாடோ வாடிக்கையாளருக்கு ஏற்பட்டால், இந்தியத் தர நிர்ணய ஆணையத்திடம் complaints@bis.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் புகார் செய்யலாம். நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில், தங்களுக்கு அருகில் உள்ள நுகர்வோர் சேவை மையங்கள், நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் மற்றும் நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகலாம்.

இதையும் படிக்கலாம்: 'ஐபாட் டச்' உற்பத்தியை நிறுத்தியது ஆப்பிள் நிறுவனம்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com