Published : 10,May 2022 02:05 PM
‘குற்றப்பரம்பரை‘ நாவலை வெப் சீரிஸாக இயக்கும் சசிகுமார்.. முக்கிய ரோலில் பிரபலத்தின் மகன்

வேல ராமமூர்த்தி எழுதிய 'குற்றப்பரம்பரை' நாவலை இயக்குநர் சசிக்குமார் வெப் - சீரிஸாக இயக்கவுள்ளார்.
'குற்றப்பரம்பரை' நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் இயக்குநர்கள் பாலா மற்றும் பாரதிராஜா ஆகியோர் தனித்தனியே ஈடுபட்டனர். அதற்கான அறிவிப்பும் வெளியானது. ஆனால் அவர்கள் இருவருக்கும் இடையே குற்றப்பரம்பரை நாவலை படமாக்குவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்னைகள் எழுந்தன.
அந்த தொடரை திரைப்படமாக்க தனக்குதான் உரிமை இருக்கிறது என பாரதிராஜா செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி கூறினார். அதேபோல், பாலாவும் தனக்கு மட்டுமே அதன் மீது உரிமை இருக்கிறது என தெரிவித்தார். இந்த நிலையில், இயக்குநரும் நடிகருமான எம்.சசிகுமார் 'குற்றப்பரம்பரை' நாவலை வெப் சீரிஸாக இயக்கவுள்ளார். அதற்கான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது.
ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் அந்த இணையத்தொடரை தயாரிக்கிறார். மேலும், விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன், அந்தத் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு இந்த மாதமே தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-செந்தில் ராஜா