Published : 09,Sep 2017 07:51 AM
காவல் நிலையம் முன் தீக்குளித்த வாலிபர்: உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை

வாணியம்பாடி நகர காவல்துறையினர் தன்னை அடிக்கடி கொடுமைப்படுத்துவதாக கூறி உடலில் மண்ணெண்ணய் ஊற்றிகொண்டு காவல்நிலையம் எதிரிலேயே அன்பு என்ற வாலிபர் தீக்குளித்தார்.
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் அன்பு. இவர் கூலி தொழிலாளி ஆவார். இவர் மீது வாணியம்பாடி காவல்நிலையத்தில் திருட்டு வழக்குகள் உள்ளன. ஆனால் இவர் திருட்டு தொழிலை விட்டுவிட்டு கூலி வேலை செய்து குடும்பத்துடன் திருந்தி வாழ்ந்து வந்தார். அப்படி இவர் திருந்தி இருந்த நிலையிலும் வாணியம்பாடி காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் அவரை அழைத்து சென்று கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. அவரும் தான் திருட்டு தொழிலை விட்டு மனம் திருந்தி வாழ்வதாகவும் தன்னை ஏன் அடிக்கடி விசாரணை என்று அழைத்து மன உளைச்சல் ஏற்படுத்துகிறீர்கள் என்று அடிக்கடி கூறியும், வாணியம்பாடி நகர காவல்துறையினர் நேற்றும் அவரை விசாரணைக்கு வாணியம்பாடி காவல்நிலையத்திற்கு வருமாறு அழைத்துவிட்டு சென்றனர். இதனால் மனமுடைந்த அன்பு மண்ணெண்ணய் உடலில் ஊற்றி கொண்டு வாணியம்பாடி நகர காவல்நிலையம் முன்பாக தீகுளித்தார். அங்கிருந்த பொதுமக்கள் தீயை அணைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் அன்பு படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையின் கொடுமையை கண்டித்து காவல்நிலையம் முன்பே வாலிபர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாணியம்பாடி கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த அன்பு மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக வாணியம்பாடி நகர காவல் நிலையத்திற்கு போதையில் புகார் அளிக்க வந்ததாகவும் அவர் மனைவியின் மீது சந்தேகத்தினால் தீக்குளித்ததாகவும் காவல் துறையினர் தெரிவிகின்றனர். அன்பு மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.