Published : 08,May 2022 03:26 PM
தமிழகம் வந்தடைந்த கிருஷ்ணா நதி நீர் - மலர்தூவி வரவேற்ற பால்வளத்துறை அமைச்சர்

ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் 3 நாட்களுக்கு பின் தமிழகம் வந்தடைந்தது. பால்வளத்துறை அமைச்சர் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர்.
சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆந்திரா அரசுடன் தெலுங்கு கங்கை நதி நீர் பங்கீடு திட்டத்தின் கீழ் வருடந்தோறும் ஆண்டுக்கு இரண்டு தவணையாக 12 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தண்ணீரும் ஜூன் முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி தண்ணீரும் திறந்துவிட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பருவமழை பெய்ததன் காரணமாக பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், கண்ணன், தேர்வாய், கண்டிகை உள்ளிட்ட ஏரிகளில் டிசம்பரில் மொத்தம் 11 டிஎம்சி தண்ணீர் இருப்பு இருந்தது. இதன காரணமாக ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் ஆந்திரா அரசிடம் நீர் கேட்டுப் பெறவில்லை.
இந்த நிலையில் தற்போது பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் மற்றும் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட சென்னை மக்களின் குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு குறைந்து வருவதன் காரணமாக, மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 4 மாதத்திற்கு 6 டிஎம்சி தண்ணீர் கேட்டு பெறப்பட்டுள்ளது. அந்த நீர் ஒரு மாதத்திற்கு 1.5 டிஎம்சி தண்ணீர் வீதம் மொத்தம் 6 டிஎம்சி தண்ணீர் கேட்டு பெறப்பட்டுள்ளது. சென்னை குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளிலும் 11 டிஎம்சியிலிருந்து 8 டிஎம்சியாக குறைந்ததால் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதியின் கண்டலேறு அணையிலிருந்து முதல்கட்டமாக 1500 கன அடி தண்ணீர் கடந்த 5-ஆம் தேதி தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது.
கடந்த 3 நாட்களில் 152 கிலோ மீட்டர் கடந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டிற்கு இன்று வந்தடைந்தது. தமிழக எல்லையான ஜீரோ பாயிண்ட்டில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், கிருஷ்ணா நதிக்கான செயற்பொறியாளர் தில்லைக்கரசி உள்ளிட்டோர் நதி நீரை மலர் தூவி வரவேற்றனர்.