Published : 07,May 2022 06:16 AM
சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட் பேலஸ் நிறுவனம் மீது சிபிஐ வழக்குப்பதிவு

வங்கி மோசடி விவகாரத்தில் சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட் பேலஸ் நிறுவனம் மற்றும் அதன் நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
சென்னை தியாகராய நகரில் செயல்படும் சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட் பேலஸ் மற்றும் அதன் பங்குதாரர்களான சுஜாதா, ஒய்.பி.ஸ்ரவன் உள்ளிட்டோர் மீது இந்தியன் வங்கியின் தலைமை நிர்வாகி கே.எல்.குப்தா சிபிஐயிடம் புகார் அளித்துள்ளார். அதில், கடந்த 2017ஆம் ஆண்டு கமர்ஷியல் ஷோரூம் வாங்குவதற்காக 150கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளதாகவும், மேலும் 90கோடி ரூபாய் கடனையும் அதே ஆண்டு வாங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த கடன் தொடர்பான சொத்துக்களை வங்கிக்கு தெரியாமல் மாற்றியதும், இரண்டாவதாக பெறப்பட்ட 90கோடி ரூபாய் கடன் மூலம் ஷோரும் வாங்கப் பெற்ற கடனை அடைக்க முயற்சி செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இதன் மூலம் இந்தியன் வங்கிக்கு 312 கோடி ரூபாய் அளவில் இழப்பு ஏற்படுத்தும் வகையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கே.எல்.குப்தா குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த நிலையில், வங்கியில் கடன் பெற்று மோசடி செய்ததாக சரவணா ஸ்டோர் கோல்ட் பேலஸ் மற்றும் பங்குதாரர்கள் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக வங்கியின் தலைமை மேலாளர் செல்வம் மற்றும் துணை பொதுமேலாளர் தமிழரசு ஆகியோர் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.