ஓராண்டினை நிறைவு செய்யும் திமுக அரசு – சொன்னபடி சாதித்ததா? சறுக்கியதா? - ஓர் அலசல்

ஓராண்டினை நிறைவு செய்யும் திமுக அரசு – சொன்னபடி சாதித்ததா? சறுக்கியதா? - ஓர் அலசல்
ஓராண்டினை நிறைவு செய்யும் திமுக அரசு – சொன்னபடி சாதித்ததா? சறுக்கியதா? - ஓர் அலசல்

கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று மே 7 ஆம் தேதி ஆட்சியமைத்தது திமுக. ஓராண்டினை நிறைவுசெய்யும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் செயல்பாடுகளை பற்றிய மதிப்பீடு இதோ…

தொடர்ந்து 10 வருடங்களாக ஆட்சியில் இருந்த அதிமுக, மத்தியில் முழு பலத்துடன் ஆட்சியில் இருக்கும் பாஜக என இருகட்சி கூட்டணியையும் வீழ்த்தி தமிழ்நாட்டில் ஆட்சியமைத்து ஓராண்டினை நிறைவுசெய்கிறது திமுக. ஆட்சி தொடங்கியவுடனே அச்சுறுத்திய கொரோனாவை வெற்றிகரமாக எதிர்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், திறமையான அதிகாரிகளை தனது அரசின் முதல்வரிசையில் நிற்கவைத்தும் ஸ்கோர் செய்தார்.

திமுக வெற்றியின் அச்சாணியாக பார்க்கப்படுவது அதன் தேர்தல் அறிக்கைதான். எனவே, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே முக்கிய இலக்கு என்பதனை ஆட்சி பொறுப்பேற்றபோதே ஆணித்தரமாகவும் சொன்னார் முதல்வர் ஸ்டாலின்.  கொரோனா நிவாரணம் 4 ஆயிரம், மகளிர் பேருந்து பயணம் இலவசம், விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்பு, மக்களைத்தேடி மருத்துவம் என முதற்கட்டமாக பல திட்டங்களும் நிறைவேற்றப்பட்டது. குடும்பத்தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, பொங்கலுக்கு பரிசுத்தொகை வழங்காதது, மின்வெட்டு, காவல்துறை விசாரணை மரணங்கள் என பல குறைபாடுகளையும் அடுக்குகின்றனர் எதிர்க்கட்சியினர்.

இந்த ஓராண்டு காலத்தில் திமுக அரசின் செயல்பாடுகள் எப்படி இருந்தது என்று விளக்குகிறார் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம், “திமுக அரசின் முதல் மூன்று மாதங்கள் கொரோனா பாதிப்புகளை சரிசெய்வதிலேயே கழிந்தது, அடுத்ததாக இரண்டு மாதங்கள் மழை, வெள்ள பாதிப்புகளை சீர் செய்வதில் சென்றது. இப்படி இந்த ஐந்து மாத காலத்தை தவிர்த்த மீதமுள்ள மாதங்களில்தான் இவர்களின் மதிப்பீடுகளை பார்க்க வேண்டும். தேர்தல் அறிக்கையில் திமுக சொன்னதில் பெண்களுக்கான இலவச பேருந்து பயணம், மக்களைத்தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதில் உள்ள சிக்கல் என்றால் இந்த இரண்டு திட்டங்களின் தன்னார்வலர்களுக்கும் கொடுக்கப்படும் ஊதியம் மிகக்குறைவு, எனவே இதனை அரசு சரிசெய்தால் நமது சத்துணவு திட்டம் போல நாட்டிற்கே முன்மாதிரியான திட்டங்களாக இவை இருக்கும்.  மற்றபடி பயிர்க்கடன், நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி, கிராமப்புற சாலைகள் அமைத்தல் போன்ற திட்டங்கள் சிறப்பானவையே.

முக்கியமாக விவசாய திட்டங்களில் இந்த அரசு போதிய கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் வரும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கவுள்ள சூழலில், இப்போது வரையிலும் டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை தொடங்கவில்லை, இனி அவசர கதியில் தூர்வாரும் பணிகள் நடந்தால் அது விவசாயிகளை கடுமையாக பாதிக்கும். அதுபோல தொடர் மின்வெட்டு காரணமாகவும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர், அதனையும் அரசு உடனடியாக சரிசெய்யவேண்டும். அதுபோல அரசின் விளைபொருள் கொள்முதல் நிலையங்களும் சரிவர இயங்கவில்லை என்றே தெரிகிறது, கொள்முதலில் தனியாரை ஊக்குவிக்கும் வகையிலேயே மத்திய, மாநில அரசுகள் செயல்படுகிறது.

இந்த அரசு அமைந்தவுடன் திறமையான அதிகாரிகள் நியமிக்கப்பட்டது வரவேற்பை பெற்றது. ஒரு அரசின் முகம் என்பது காவல் துறையும், வருவாய் துறையும்தான். அதில் மேல்மட்டத்தில் இறையன்பு, சைலேந்திர பாபு போன்ற திறமையானவர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் இது கீழ்மட்டம் வரைக்கும் பிரதிபலிக்கவில்லை என்பதே உண்மை.

தமிழகத்திலேயே மத்திய அரசை சரியாக கையாண்ட முதல்வர் என்றால் அது எம்ஜிஆர் மட்டும்தான். உதாரணமாக அடுத்த நாட்டில் உள்ள போராளிக்குழுவான விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தமிழக அரசின் சார்பிலேயே 4 கோடி ரூபாய் கொடுத்தார் எம்ஜிஆர், அந்தளவுக்கு மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தார். ஆனால், இப்போது இலங்கை தமிழர்களுக்கு உணவுப்பொருள்கள் அனுப்பக்கூட மத்திய அரசிடம் அனுமதி கேட்கும் சூழல் உள்ளது. ஜெயலலிதா – சென்னா ரெட்டி மோதலை அருகில் இருந்து பார்த்தவன் என்ற முறையில் முதல்வர், ஆளுநர் மோதலில் அதிகாரிகள் இரு குழுவாக பிரிவார்கள், இதனால் நிர்வாகத்தில் பல சிக்கல்கள் ஏற்படலாம், எனவே இதனைத் தவிர்ப்பதே நல்லது. அதுபோல தமிழக அரசும் பட்டினபிரவேஷம் போன்ற மதம் தொடர்பான விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

தமிழ்நாடு அரசின் முக்கியமான சவாலாக உள்ளது என்னவென்றால், மத்திய அரசிடம் இருந்து பங்குத்தொகை, நிதியுதவி எதுவும் சரிவர கிடைப்பதில்லை என்பதே. ஆனால் இந்த கடுமையான சூழலிலும் அரசு சவால்களை எதிர்கொண்டு இயன்றவரை சிறப்பாக பணியாற்றுகிறது என்றே சொல்லவேண்டும்” என தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசின் ஓராண்டு செயல்பாடு குறித்து பேசும் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன், “ ஓராண்டுகால திமுக ஆட்சியின் மிகப்பெரிய சாதனை என்பது மாநில உரிமைகளை நிலைநிறுத்துவதற்காக தயக்கமின்றி மத்திய அரசை எதிர்த்து முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டு வரும் போராட்டம்தான். பதவிக்கு வந்தவுடன் எல்லாவற்றையும் விட்டுகொடுத்த ஒரு ஆட்சி மாறி, இப்போதுள்ள ஆட்சி மத்திய அரசை எதிர்த்து நேரடியாக குரல் எழுப்புகிறது. மத்திய அரசின் மாநிலங்களுக்கு எதிரான போக்குகளை கண்டிக்கும் நாட்டின் முதல் முதல்வராக ஸ்டாலின் உள்ளார்.

உதாரணமாக, நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம், நீட் தீர்மானத்தை கிடப்பில் போட்ட ஆளுநருக்கு கொடுக்கப்பட்ட அழுத்தங்கள், கல்வியை மீண்டும் மாநிலப்பட்டியலுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகள், மருத்துவ கல்வியில் இடஒதுக்கீட்டினை பெற எடுத்த நடவடிக்கைகள், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிறிய துறைமுகங்களை கையகப்படுத்த மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிக்கு எதிரான குரல், துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநரின் அதிகாரத்துக்கு எதிரான தீர்மானம், மருத்துவ மாணவர்களின் சமஸ்கிருத உறுதிமொழிக்கு எதிரான நடவடிக்கை என ஓராண்டில் மத்திய அரசின் மாநில உரிமை பறிப்புக்கு எதிராக தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.

கொரோனாவை கட்டுப்படுத்த எடுத்த முயற்சிகள், கொரோனா நிவாரணம், மகளிர் இலவச பேருந்து பயணம் போன்ற திட்டங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா, வெள்ள பாதிப்பு, தஞ்சை தேர் விபத்து போன்ற மக்களின் துயரங்களில் அக்கறையுடன் மக்களுடன் நிற்கும் முதல்வராகவும் ஸ்டாலின் உள்ளார்.

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக செய்த வாக்குவங்கிக்கான அணுமுறையையே திமுகவும் செய்கிறது இதுபோல வாக்கு வங்கி அரசியலுக்காக அதிகாரிகளின் பேச்சை கேட்டு செயல்படுவது, விவசாய விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச விலை இன்னமும் நிர்ணயிக்கப்படாத நிலை, குடும்ப தலைவிகளுக்கு உதவித்தொகை வழங்காமல் உள்ளது போன்றவை மக்களின் குறைகளாக உள்ளது. எப்போது பெட்ரோல், டீசல், கேஸ், அத்தியாவசிய பொருட்களின் விலை உயருமோ என்று தினமும் மத்திய அரசு மக்களை வாட்டி வதைக்கக்கூடிய சூழலில், மக்களுக்கு நம்பிக்கை தரும் அரசாக தமிழ்நாடு அரசு உள்ளது என்பதே உண்மை” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com