Published : 03,May 2022 06:20 PM
ஒன்பதே மாதங்களில் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் மதிப்பு ரூ.6,800 கோடி - அசத்தும் இரு இளைஞர்கள்

இரு இளைஞர்கள் நிறுவிய ஸ்டார்ட் அப் நிறுவனமான “Zepto” எனும் உடனடி மளிகைப் பொருள் டெலிவரி நிறுவனத்தின் மதிப்பு ரூ.6,800 கோடியை கடந்துள்ளது.
மும்பையை தலைமையிடமாகக் கொண்ட “Zepto” நிறுவனம் பால்ய கால நண்பர்களான ஆதித் பலிச்சா மற்றும் கைவல்யா வோஹ்ரா ஆகியோரால் துவங்கப்பட்டது. ஸ்டேண்ட்போர்டு பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் படித்து வந்த அவர்கள் அங்கிருந்து வெளியேறி இந்தியா திரும்பி இ-காமர்ஸ் தொழில் முனைவோராக உருவெடுத்தார்கள்.
10 நிமிடத்தில் வீடுகளுக்கு மளிகைப் பொருட்களை டெலிவரி செய்வதே இவர்கள் துவங்கிய செப்டோ நிறுவனத்தின் பணி. மக்கள் நெருக்கம் மிக்க மும்பையில் இந்த நிறுவனம் தன் சேவையை துவங்கி, டன்சோ, ஸ்விக்கி போன்ற நிறுவனங்களுக்கு கடும் போட்டி அளிக்கும் வகையில் வளர்ந்துள்ளது. கடந்த காலாண்டில் செப்டோ நிறுவனத்தின் வளர்ச்சி 800 சதவீதம் ஆகும்.
ஒரு ஆர்டரை டெலிவரி செய்ய ஆகும் செலவை 5 மடங்கு வரை குறைவாகச் செய்வதாகவும், 1000 நபர்கள் தற்போது தங்கள் நிறுவனத்தில் பணிபுரிவதாகவும் அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி ஆதித் பலிச்சா தெரிவித்துள்ளார். அடர்த்தியான நகர் சுற்றுப்புறங்களில் தங்கள் நிறுவனம் லாபம் ஈட்டத் துவங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிறுவனம் துவங்கப்பட்டு 9 மாதங்களுக்குள் அதன் மதிப்பீட்டை சுமார் 900 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்தியுள்ளது. இந்திய மதிப்பில் சுமார் ரூ. 6,800 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த நிறுவன வெற்றியை அடுத்து காபி, டீ மற்றும் பிற தின்பண்டங்களை டெலிவரி செய்யும் “Zepto Cafe” எனும் புதிய சேவையை மும்பையில் அறிமுகம் செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.