Published : 02,May 2022 07:33 PM
மீத்தேன் உமிழ்வை குறைக்க மாடுகளுக்கு புதுமையான முகக்கவசம் - இங்கிலாந்து குழு அசத்தல்!

மீத்தேன் உமிழ்வைக் குறைக்கவும், காலநிலை மாற்றத்தைக் குறைக்கவும் மாடுகளுக்காக வடிவமைக்கப்பட்ட புதுமையான முகக்கவசம் மதிப்புமிக்க வடிவமைப்பு விருதை வென்றுள்ளது.
இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ஸெல்ப் (Zelp) வடிவமைப்பு குழுவால் உருவாக்கப்பட்ட மாடுகள் அணியக்கூடிய இந்த முகக்கவசம், டெர்ரா கார்ட் டிசைன் லேப் போட்டியின் நான்கு வெற்றியாளர்களில் ஒன்றாக தேர்வானது. இளவரசர் சார்லஸின் முன்முயற்சியில் நடத்தப்பட்ட போட்டியில் இந்த விருது வழங்கப்பட்டது.
மாடுகள் கணிசமான அளவு மீத்தேன் மற்றும் கிரீன்ஹவுஸ் வாயுவை வெளியேற்றுகின்றன, இது வளிமண்டலத்தில் வெப்பத்தை அதிகரிக்க வைப்பதில் கார்பன் டை ஆக்சைடை விட 25 மடங்கு அதிக ஆற்றல் கொண்டது. எனவே, பசுக்களுக்கான இந்த ஸ்மார்ட் முகக்கவசம் மீத்தேனை கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீராவியாக மாற்றுகிறது.
ஒரு கறவை மாடு ஒரு நாளைக்கு 130 கேலன்கள் வரை மீத்தேன் உற்பத்தி செய்யும். கடந்த காலங்களில், கால்நடைத் தொழிலின் மீத்தேன் பிரச்சினைக்கு தீர்வு காண மாடுகளின் உணவு முறைகளை மாற்றியமைக்க வலியுறுத்தபட்டது. ஆனால் Zelp இன் இந்த முகக்கவச முயற்சி பசுக்கள் வழக்கமான உணவை ஜீரணிக்க அனுமதிக்கிறது.
இந்த முகக்கவசம் மாடுகளின் பர்ப்ஸில் உள்ள மீத்தேனை கண்டறியவும், சேகரிக்கவும் செய்கிறது. இந்த முகக்கவசத்தின் நுனியில் உள்ள ஒரு சென்சார் ஒரு மாடு வெளிவிடும் மீத்தேன் வெளியேற்றத்தின் சதவீதத்தை கண்டறியும். மீத்தேன் அளவு அதிகமாக இருக்கும் போது ஆக்சிஜனேற்ற செயலையும் செய்கிறது.