Published : 30,Apr 2022 07:24 PM
திருடிய பாதுகாவலரை மரத்தில் தலைகீழாக தொங்கவிட்டு அடித்து உதைத்த கொடூரம் - வைரல் வீடியோ

சட்டீஸ்கரில் திருடிய பாதுகாவலரை மரத்தில் கட்டிவைத்து கொடூரமாக அடித்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்திலுள்ள சிபாட் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாதுகாவலராக பணிபுரிந்து வரும் மகாவீர் என்ற நபரை நான்கு பேர் கட்டைகள் மற்றும் குச்சிகளால் அடித்து தாக்குவதையும், தன்னை விட்டுவிடுமாறு அவர் கெஞ்சுவதையும் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். சமூக ஊடகங்களில் இந்த வீடியோ வைரலானதையடுத்து போலீசார் 4 பேரை கைதுசெய்துள்ளனர்.
சிபாட் நகரின் காவல்நிலைய அதிகாரி விகாஷ் குமார் இதுகுறித்து கூறுகையில், கைதான மனிஷ் என்பவரது வீட்டிற்குள் இந்தவார துவக்கத்தில் புகுந்த மகாவீர், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டபோது கையும் களவுமாக பிடிபட்டிருக்கிறார். அப்போதே அவரை தாக்கியிருக்கின்றனர். மேலும், இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மகாவீரை எச்சரித்து அனுப்பியிருக்கின்றனர். ஆனால் மகாவீர் மீண்டும் இதே குற்றச்செயலில் ஈடுபட்டபோது அவரை மரத்தில் தலைகீழாக கட்டிவைத்து அடித்து உதைத்திருக்கின்றனர்.
இதுகுறித்து வியாழக்கிழமை அதேப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் உடனே சம்பவ இடத்திற்குச் சென்று மகாவீரை மீட்டனர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.