Published : 27,Apr 2022 05:31 PM

ஹர்திக்கின் 'குஜராத் மாடல்' - அச்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து!

Gujarat-Model-By-Hardik-Pandya---Straighten-the-heart-away-from-fear

நடப்பு ஐ.பி.எல் சீசனில் மிகப்பெரிய சர்ப்ரைஸாக அமைந்திருக்கும் அணி குஜராத் டைட்டன்ஸே. புதிய அணியாக புதிய கேப்டனோடு புதிய வீரர்களோடு பெரிய எதிர்பார்ப்பின்றி உள்ளே வந்து கலக்கிக் கொண்டிருக்கிறது. ஆடியிருக்கும் 7 போட்டிகளில் ஆறில் வென்று புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இந்த சீசனில் மிகக்குறைவாக ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோற்றிருக்கும் அணி குஜராத் மட்டும்தான். குஜராத்தின் சக்சஸ் சீக்ரெட்தான் என்ன?

குஜராத் அணியை பற்றி பார்ப்பதற்கு முன் அந்த அணியின் கேப்டனான ஹர்திக் பாண்ட்யாவை பற்றியும் அவர் எப்படி லைம்லைட்டுக்கு வந்தார் என்பதை பற்றியும் பார்த்துவிடுவோம். அது 2015 ஐ.பி.எல் சீசன். சென்னையும் மும்பையும் மோதிய போட்டி. சென்னை முதலில் பேட் செய்து 158 ரன்களை எடுக்கிறது. மும்பைக்கு 159 ரன்கள் டார்கெட். மும்பையின் முக்கியமான பேட்டர்கள் அவுட்டாகி விட டெத் ஓவரில் அந்த அணிக்கு கொஞ்சம் அழுத்தம் கூடியது. கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது. அம்பத்தி ராயுடுவும் ஹர்த்திக் பாண்ட்யாவும் க்ரீஸில் நின்றனர். ஹர்திக் பாண்ட்யா என்கிற வீரருக்கு இப்போது இருக்கும் மதிப்பு அப்போது கிடையாது. ஏனெனில், அப்போதுதான் அவர் அறிமுகமாகி ஒரு சில போட்டிகளில் மட்டுமே ஆடியிருந்தார். போட்டி பரபரப்பை எட்டுகிறது. 19 வது ஓவரை சென்னையின் பவன் நெகி வீசுகிறார். யாருமே எதிர்பார்த்திடாத வகையில் அதுவரை பெரிதாக எந்த அடையாளமுமே இல்லாமல் இருந்த ஹர்திக் பாண்ட்யா அந்த ஓவரில் க்ரீஸுக்குள் நின்ற இடத்திலிருந்து நகராமல் பௌலரின் தலைக்கு மேல் மூன்று சிக்சர்களை பறக்கவிட்டார். சென்னை பக்கமாக சாய்ந்து கொண்டிருந்த போட்டி அப்படியே மும்பை பக்கம் திரும்பியது. 4 பந்துகளை மீதம் வைத்து மும்பை சௌகரியமாக அந்த போட்டியை வென்றது. 8 பந்துகளில் 21 ரன்களை அடித்திருந்த ஹர்திக் பாண்ட்யாவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அங்கிருந்துதான் ஹர்திக் பாண்ட்யாவின் க்ராஃப் உயர தொடங்கியது. அவர் மீது புகழ் வெளிச்சம் விழ தொடங்கியது. ஆல்ரவுண்டராக இப்போது வரை ஒரு கலக்கு கலக்கிக்கொண்டிருக்கிறார்.

Gujarat Titans sign Capri Global shirt sponsorship - SportsPro

ஹர்திக் பாண்ட்யாவிற்கு அடையாளம் கொடுத்த அந்த போட்டி முடிந்த பிறகு Post Match Presentation இல் மும்பையின் கேப்டன் ரோஹித் சர்மா 'அந்த இடத்தில் ஹர்பஜன் சிங்தான் இறங்கியிருக்க வேண்டும். ஆனால், நாங்கள் ஒரு மிகப்பெரிய கேம்பிளை செய்தோம். ஹர்திக் பாண்ட்யாவை நம்பி மேலே இறக்கினோம். அவர் செய்ய வேண்டியதை சரியாக செய்துவிட்டார்' என பேசியிருப்பார். ஹர்திக் பாண்ட்யாவின் அந்த அதிரடியான ஆட்டமும் அதைப்பற்றிய ரோஹித் சர்மாவின் பேட்டிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிநடைக்குமே அதிக தொடர்பு இருக்கிறது.

பொதுவாகவே அதிக ரிஸ்க் எடுப்பவர்களே அதிகமான பலனை அறுவடை செய்ய முடியும் என்பது இயற்கை நியதி. இந்த நியதிக்கு டி20 கிரிக்கெட்டும் விதிவிலக்கானதல்ல. ஒரு ஃபின்ச் ஹிட்டராக இரண்டு மூன்று சிக்சர்களை அடிக்கக்கூடிய திறன் தன்னிடம் இருக்கிறதென்பதை ஏற்கனவே நிரூபித்திருந்த ஹர்பஜனுக்கு பதிலாக, ஐ.பி.எல் அரங்கில் பெரிதாக எதையும் நிரூபித்திடாத ஹர்திக் பாண்ட்யாவை ரோஹித் மேலே அனுப்பியது ஒரு மிகப்பெரிய ரிஸ்க். மிகப்பெரிய கேம்பிள். அந்த ரிஸ்க்கை எடுத்ததற்கான பலனை ரோஹித் அனுபவித்தார். இந்திய அணிக்கே புதிதாக ஒரு திறமையான வீரர் அடையாளம் காணப்பட்டார்.

IPL 2022: Gujarat Titans too good for Punjab Kings' all-or-nothing  approach- The New Indian Express

டி20 போட்டிகளின் இன்னொரு சிறப்பம்சம் என்பது இங்கே ஹீரோக்கள் உருவாக நீண்ட காலம் தேவைப்படுதே இல்லை. ஒரு பந்து, ஒரு ஓவர் ஒரு புதிய ஹீரோவை உருவாக்கிவிடும் வல்லமையை கொண்டது. வினாடி வினா போலத்தான் இருக்கின்ற அந்த சொற்ப நொடிகளில் சவாலை எதிர்கொண்டு சரியான பதிலை சொல்லி பாயிண்டுகளை தட்டி செல்ல வேண்டும். ஹர்திக் பாண்ட்யா செய்ததை போல! ஹர்திக் பாண்ட்யா அந்த போட்டியில் எதிர்கொண்டது என்னவோ வெறும் 8 பந்துகள்தான். ஆனால், அவர்தான் அந்த போட்டியின் Man of the Match! கேம்பிள் செய்வது, ஒரு ஓவரில் போட்டியை மாற்றிக்காட்டும் ஹீரோக்களை உருவாக்குவது இவை இரண்டும்தான் குஜராத் அணியின் வெற்றிக்குமே காரணமான அம்சங்களாக இருந்திருக்கிறது.

மெகா ஏலம் முடிந்த சமயத்தில் On paper இல் ரொம்பவே சுமாரான ஒரு அணியாகவே குஜராத் அணி மதிப்பிடப்பட்டது. சரியான விக்கெட் கீப்பரை எடுக்காமல் கடைசி வரை திணறியது, மிடில் ஆர்டரே இல்லாமல் ஒரு பேட்டிங் லைன் அப்பை உருவாக்கியது என அந்த அணியில் விமர்சனம் செய்வதற்கு எக்கச்சக்க ஓட்டைகள் இருந்தது. ஆனால், சீசன் தொடங்கிய ஒன்றிரண்டு போட்டிகளிலேயே அந்த விமர்சனங்களுக்கெல்லாம் குஜராத் பதிலடி கொடுக்க தொடங்கியது. நெருக்கடியான சமயத்தில் ஒரு ஹர்திக் பாண்ட்யா எப்படி உருவாக்கப்பட்டாரோ அதே 'ஹர்திக் மாடல்' ன் படிதான் இந்த 'குஜராத் மாடலும்' உருவாக்கப்பட்டது.

IPL 2022: Lockie Ferguson & Shubman Gill Star as Gujarat Titans Win Against  Delhi Capitals by 14 runs

அணியில் மிடில் ஆர்டரே இல்லையா? பரவாயில்லை, இத்தனை நாளாக ஃபினிஷராக ஆடிக்கொண்டிருந்த நானே மிடில் ஆர்டருக்கு வருகிறேன். நம்பர் 4 இல் இறங்குகிறேன் என ஹர்திக் பாண்ட்யா முடிவெடுத்தார். ஹர்பஜன் சிங்கிற்கு பதிலாக ஹர்திக்கை அனுப்பி ரோஹித் செய்த கேம்பிளை போல, ஹர்திக் பாண்ட்யா தன்னுடைய அணிக்காக தன்னையே பணயம் வைத்து செய்து கொண்ட கேம்பிள் இது. இத்தனை பெரிய ரிஸ்க் எடுத்ததற்கான பலனை ஹர்த்திக்கும் குஜராத்தும் செழிப்பாக அறுவடை செய்தனர். 6 போட்டிகளில் மிடில் ஆர்டரில் ஆடியிருக்கும் ஹர்திக் பாண்ட்யா 295 ரன்களை எடுத்திருக்கிறார். ஸ்ட்ரைக் ரேட் 136. ஆவரேஜ் 73. மூன்று அரைசதங்களையும் அடித்திருக்கிறார். குஜராத் அணியின் டாப் ஸ்கோரரே அவர்தான். தன்னுடைய ரோலை அப்படியே தலைகீழாக மாற்றிக்கொண்டு ஹர்திக் செய்த அந்த கேம்பிள்தான் குஜராத்தின் முதல் சக்சஸ் சீக்ரெட்.

இதேமாதிரி எக்கச்சக்கமான ரிஸ்க்குகளை குஜராத் செய்து கொண்டே இருக்கிறது. சென்னைக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா ஆட முடியாமல் போயிருக்கும். அந்த போட்டியில் ரஷீத்கான் கேப்டனாக செயல்பட்டிருப்பார். ஹர்த்திக்கிற்கு பதில் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை எடுக்காமல் பௌலரை அணியில் எடுத்து ஒரு பேட்ஸ்மேனை குறைவாக வைத்துக் கொண்டு குஜராத் களமிறங்கியிருக்கும். ஹர்திக் இல்லாமல் ஒரு பேட்ஸ்மேன் குறைவாக சென்றதற்கான பலனை குஜராத் அனுபவித்தது. 170 சேஸிங்கின் போது வேக வேகமாக விக்கெட்டுகள் வீழ்ந்தன. ஒரு முனையில் மில்லர் மட்டும் நின்று ஆடிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் ஆட்டம் குஜராத்தின் கையை மீறி செல்வது போல இருந்தது. அந்த சமயத்தில் ரஷீத் கான் ஜோர்டன் வீசிய ஒரே ஓவரில் 25 ரன்களை எடுத்துக் கொடுத்திருப்பார். 3 சிக்சர்கள் + 1 பவுண்டரி வந்திருக்கும். அந்த ஒரு ஓவர் ஆட்டத்தையே மாற்றியது. குஜராத் வென்றது. போட்டிக்கு பிறகான Post Match Presentation இல் கேப்டன் ரஷீத் கான் 'போட்டிக்கு முன்பாக ஒரு பேட்ஸ்மேன் குறைவாக செல்வதை பற்றி அதிகம் விவாதித்தோம். ஆனால், நான் அப்படியே செல்வோம் எனக்கூறினேன். என்னுடைய பேட்டிங் திறனை வைத்து அந்த ஒரு பேட்ஸ்மேனுக்கான இடத்தை நிரப்பிவிடும் நம்பிக்கை இருந்தது. பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்' என பேசியிருந்தார். இதுதான் ரிஸ்க். இதுதான் கேம்பிள். ரஷீத்கான் அந்த போட்டியில் சொல்லியடித்தார். 21 பந்துகளில் 40 ரன்களை அடித்திருந்தார். குஜராத்துக்காக அந்த போட்டியையே வென்று கொடுத்தார். நம்பர் 3 யில் விஜய் சங்கர், சாய் சுதர்சன் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுத்து அது சரியாக்ச் அமையவில்லை என்ற நிலையில், இப்போது ஹர்திக் நம்பர் 3 யில் இறங்க தொடங்கிவிட்டார். இப்போதும் துணிச்சலாக ஒரு பேட்ஸ்மேன் குறைவாகத்தான் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

GT vs DC Playing XI: Predicted Gujarat Titans Playing11 against Delhi  Capitals for Match 10 of IPL 2022

தங்களின் திறன் மீது முழு நம்பிக்கை வைத்து தில்லுக்கு துட்டாக தன்னம்பிக்கையோடு இறங்கியடிக்கும் மனோபாவம் ஒட்டுமொத்த குஜராத் அணிக்குமே இருக்கிறது. டாஸை வென்று சேஸ் செய்யும் அணிகள் மட்டுமே வரிசையாக வென்று கொண்டிருந்த சமயத்தில், 'டாஸில் தோற்று முதலில் பேட் செய்வதெல்லாம் எங்களுக்கு பெரிய விஷயமே இல்லை' எனக்கூறி இந்த சீசனில் முதல் முதலாக ஸ்கோரை டிஃபண்ட் செய்து வென்றுகாட்டிய அணி குஜராத் தான்.

நெருக்கடியை சமாளித்து சூப்பர் ஹீரோக்களாக மேட்ச் வின்னர்களாக மாறும் வீரர்களும் அதிகமாகவே அந்த அணியில் இருக்கின்றனர். ஒரு போட்டியை ஹர்திக் நின்று நிதானமாக வென்று கொடுத்தால், இன்னொரு போட்டியை ராகுல் திவேதியா வெறும் இரண்டே பந்துகளில் இரண்டு சிக்சர்களை அடித்து முடித்து வைக்கிறார். ரஷீத்கான் ஒரே ஓவரில் மாயவித்தைகளை நிகழ்த்துகிறார். டேவிட் மில்லர் நீண்ட காலத்திற்கு பிறகு அனலாக தகிக்கிறார். ஒவ்வொரு போட்டியிலுமே யாரோ ஒருவர் நெருக்கடியான சூழலை திறம்பட சமாளித்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றுவிடுகின்றனர்.

IPL 2022: SEE: Inside Gujarat Titans Locker Room - Rediff Cricket

அந்த அணியின் பந்துவீச்சை பற்றி இன்னும் அதிகமாக பேசலாம். தற்போதைய புள்ளிப்பட்டியலை எடுத்துப்பார்த்தால் முதல் 4 இடங்களில் இருக்கும் அணிகளுமே வலுவான பந்துவீச்சு படையை கொண்ட அணியாகவே இருக்கும். குஜராத் மெகா ஏலத்திலேயே பௌலர்களுக்கு மட்டும் 40 கோடியை செலவிட்டிருந்தது. ஷமி, ஃபெர்குசன், ரஷீத்கான் போன்ற உலகத்தரமான பௌலர்களை கொண்ட அணியாக இருக்கிறது. இவர்களோடு அல்சாரி ஜோசப், ராகுல் திவேதியா, யாஷ் தயாள் போன்றவர்களும் நன்றாகவே வீசிக்கொண்டிருக்கின்றனர். பவர்ப்ளேயில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் அணியாக குஜராத்தே இருக்கிறது. ஏற்கனவே, குறிப்பிட்டதை போன்று எல்லா அணிகளும் இரண்டாவது பௌலிங் என்றால் தெறித்து ஓடிய சமயத்தில், தில்லாக ஸ்கோரை டிஃபண்ட் செய்து காட்டியது குஜராத்தின் பௌலிங் டிபார்ட்மெண்ட்தான்.

IPL 2022 Match 4 - Gujarat Titans vs Lucknow Super Giants

ஹர்திக் பாண்ட்யாவே ரோஹித்தின் கேம்பிள் மூலம் உருவானவர்தான். இப்போது அவர் வழிநடத்தும் குஜராத் அணியும் பல ஓட்டைகளை கொண்டிருந்தாலும் துணிச்சலான கேம்பிள்கள் மூலமே செழிப்பாக அறுவடை செய்து வருகிறது. அந்த அணிக்கு இதுவரை வெற்றியை மட்டுமே கொடுத்திருக்கும் கேம்பிள்கள், இனியும் காலை வாராமல் இருக்கும்பட்சத்தில் குஜராத் இன்னும் மிகப்பெரிய வெற்றிகளை பெறும்.

- உ.ஸ்ரீராம்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்