வைரலான ஆடியோவுக்கு இடையே நடந்தது என்ன? - விமல் அளித்த புகாரில் தயாரிப்பாளர் அதிரடி கைது

வைரலான ஆடியோவுக்கு இடையே நடந்தது என்ன? - விமல் அளித்த புகாரில் தயாரிப்பாளர் அதிரடி கைது
வைரலான ஆடியோவுக்கு இடையே நடந்தது என்ன? - விமல் அளித்த புகாரில் தயாரிப்பாளர் அதிரடி கைது

சென்னையில் பணமோசடி தொடர்பாக  நடிகர் விமல் அளித்த புகாரில் திரைப்பட தயாரிப்பாளர் சிங்காரவேலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகர் விமல் 5 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக தயாரிப்பாளர் கோபி என்பவர் கடந்த 19-ம் தேதி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். ‘மன்னர் வகையறா’ படத்திற்காக பணம் வாங்கிக்கொண்டு திருப்பித்தராமல் மோசடி செய்ததாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த புகாருக்கு விளக்கமளிக்கும் வகையில் நடிகர் விமல், கடந்த 20-ம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், தயாரிப்பாளர் கோபி கொடுத்த புகாரை விசாரிக்கும் விசாரணை அதிகாரி முன்பு, ஆஜராகி விளக்கம் அளித்தார். மேலும் தன்னை மோசடி செய்யும் சிங்காரவேலன் என்ற தயாரிப்பாளர் குறித்தும் விமல் புகார் அளித்திருந்தார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் நடிகர் விமல் பேசுகையில், "சிங்காரவேலன் என்ற தயாரிப்பாளர் தன் பெயர் மற்றும் ஆவணங்களை பயன்படுத்தி தயாரிப்பு நிறுவனம் ஒன்றை உருவாக்கி மோசடி செய்துள்ளார். ‘மன்னர் வகையறா’ படத்திற்காக பணத்தை கடனாகப் பெற்று, படத்தை விற்பனை செய்துவரும் பணத்தையும், முறையாக கணக்கு காட்டாமல், சிங்காரவேலன் மற்றும் அவரது நண்பர்கள் மோசடி செய்து விட்டனர்.

இது தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் உரிய ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில் சிங்காரவேலன், கோபி மற்றும் அவரது நண்பர்கள் தன்னிடம் எந்தவித பண பரிவர்த்தனையும் வைத்துக் கொள்ள வில்லை என்பது தொடர்பான ஆவணங்களையும் காவல்துறையினரிடம் கொடுத்துள்ளேன்.

‘மன்னர் வகையறா’ பட விவகாரத்திற்கு பிறகு, கடந்த நான்கு வருடமாக சிங்காரவேலன் போலியான ஆவணங்களை வைத்து, தான் நடித்த பட தயாரிப்பாளர்கள் ஒவ்வொருவரையும் அணுகி மிரட்டி உள்ளார். நிம்மதியாகத் தன்னை தூங்கவிடாமல் தயாரிப்பாளர் சிங்காரவேலன் மிரட்டி வருகிறார். படம் நடித்து வருவதால் இது தொடர்பாக வெளியில் தெரிவிக்காமல் தொடர்ந்து மிரட்டி வந்த சிங்காரவேலனுக்கு லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்து இழந்துள்ளேன்.

தன்னிடம் கதை சொல்ல வரும் நபர்களிடம் லட்சக்கணக்கில், தன் பெயரை சொல்லி பணம் வாங்கி மோசடி செய்துள்ளார். பெங்களூரைச் சேர்ந்த நபர் ஒருவர் கதை சொல்ல வரும் போது ஐந்து லட்ச ரூபாய் கொடுத்து ஏமாந்ததாகவும், இதனை அறிந்து அந்தப் பணத்தை தான் கொடுத்தேன். தன் மீது எந்தவித குற்றமும் இல்லாத காரணத்தினால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளலாம் என தற்போது காவல்துறையை நாடி உள்ளேன். தன்னுடைய ஆவணங்களையும் கையெழுத்துகளையும் வைத்து தயாரிப்பு நிறுவனம் ஒன்று உருவாக்கப்பட்டது.

இவை மட்டுமே எனக்குத் தெரியும். மற்றபடி தயாரிப்பாளர் சிங்காரவேலன் மற்றும் அவரது நண்பர்கள் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் தன்னை தொடர்ந்து மோசடி செய்து வருகின்றனர். இறுதியாக நடித்த ‘விலங்கு’ என்ற வெப்சீரிஸ் தயாரிப்பாளரிடம் போலி ஆவணங்களை வைத்து சிங்காரவேலன் பணம் கேட்டு மிரட்டியதாக புதிய புகார் ஒன்றை தான் காவல் ஆணையரிடம் கொடுத்துள்ளேன்.

யார் மோசடி செய்து உள்ளார்கள் என்பது குறித்து இரு தரப்பு புகாரைப் பெற்றுக்கொண்டு, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்" என்று நடிகர் விமல் தெரிவித்திருந்தார்.  இதனிடையே நடிகர் விமல் அளித்த புகாரை தயாரிப்பாளர் சிங்காரவேலன் மறுத்திருந்தார். வழக்கை திசைதிருப்பவே அவர், தன்மீது அவ்வாறு புகார் அளித்திருப்பதாக சிங்காரவேலன் கூறியிருந்தார்.

இதற்கிடையில், ‘மன்னர் வகையறா’ படத்தின் தயாரிப்பாளர் மறைந்த திருப்பூர் கணேசனின் மகள் ஹேமா, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று பண மோசடி புகார் ஒன்றைக் கொடுத்திருந்தார். நடிகர் விமல் மீது ஒரு கோடியே 73 லட்சம் ரூபாய் ஏமாற்றிவிட்டதாக அந்தப் புகாரில் தெரிவித்திருந்தார். 

புகார் கொடுத்து விட்டு ஹேமா கணேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘மன்னர் வகையறா’  படத்தின் முதல் தயாரிப்பாளராக திருப்பூர் கணேசனுடன் நடிகர் விமலுடன் ஒப்பந்தம் செய்திருந்தார். ஐந்து கோடி ரூபாய் பட்ஜெட்டில் முதற்கட்டமாக ஒன்றரை கோடி ரூபாய் வரை முதலீடு செய்திருக்கிறார். ஆனால் சில காரணங்கள் திருப்பூர் கணேசன் படத்தின் தயாரிப்பு பணிகளில் இருந்து விமல் மூலமாக ஓரங்கட்டப்பட்டு இருக்கிறார். ஆனால் மன்னர் வகையறா படம் வெளியான போது திருப்பூர் கணேசனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் நடிகர் ஏமாற்றி விட்டார்.

ஏற்கனவே திருப்பூர் கணேசனுக்கு ‘மன்னர் வகையறா’  படத்தின் தெலுங்கு உரிமையை கொடுப்பதாக உறுதி அளித்து ஏமாற்றி விட்டார். ஆனால் அந்த உரிமையையும் தனது தந்தைக்கு தெரியாமல் வேறு ஒருவருக்கு விற்று விட்டார். ‘மன்னர் வகையறா’ படத்தை முதன் முதலாக துவக்கி தயாரித்த திருப்பூர் கணேசன், கொரோனாவால் இறந்ததால், அவர் பல இடத்தில் வாங்கிய கடன் தொகைக்கு, அவருடைய வாரிசு என்ற அடிப்படையில், கடன் கொடுத்தவர்களுக்கு நான் பதில் சொல்லி கொண்டு வருகிறேன் என கண் கலங்கியபடி ஹேமலதா கூறினார். 

மேலும் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த திரைப்பட வினியோகஸ்தர் கங்காதரன் நடிகர் விமல் மீது புகார் கொடுத்துள்ளார். ரூ. 2 கோடி வரை தன்னை ஏமாற்றி விட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், நடிகர் விமல், தயாரிப்பாளர் சிங்காரவேலன், கோபி இருவருக்கும் நேற்ற மாலை ஆடியோ மெசேஜ் ஒன்றை பேசி அனுப்பியதாக ஆடியோ ஒன்று வைரலானது. அதில் அவர் பேசியிருந்ததாவது,

''சிங்காரவேலன் சார், கோபி அண்ணனுக்கு வணக்கம். என்னை மெருகேத்தி மேன்மைப்படுத்தின உங்களுக்கு நன்றி. இந்த அவமானங்கள், தலைகுனிவு, மன உளைச்சல்களால ஐயோ, இப்படிப் பண்றாங்களேன்னு வெம்பிப் போய்க்கிடந்தேன். இந்த நிலையில் திடீர்னு எனக்கு பாசிட்டிவ் எனர்ஜி வந்த மாதிரி ஆனேன். அதையெல்லாம் ஒரு சவாலா எடுத்துக்கிட்டு ஓடணும் என்கிற பாசிட்டிவ் எனர்ஜியை எனக்குள்ள நீங்க ஏத்தியிருக்கீங்கனு நான் நம்பறேன்.

கண்டிப்பா நான் ஓடிக்கிட்டே இருப்பேன். இந்த வருஷத்துக்குள்ள உங்க கடன் எல்லாத்தையும் அடைச்சிட்டு நானும் நிம்மதியா இருப்பேன். உங்களையும் நிம்மதியா வச்சுட்டு எல்லாரும் சேர்ந்து ஜெயிப்போம்ங்கற ஒரு நல்லமனப்பான்மையோட ஓடறேன். வேலி போட்டாலும் ஓடுவேன். காம்பவுண்ட் போட்டா ஏறிக்குதிச்சு ஓடுவேன். ஓடிக்கிட்டே இருப்பேன். என்னை ஓட வச்ச உங்களுக்கு ரொம்ப நன்றிண்ணே. என்னை பாராட்டுகிற அந்த காலம் கண்டிப்பா வரும்னு நான் நம்பறேன். அந்த காலம் வரும்.. வரும். நன்றி'' என ஆடியோவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த ஆடியோ வைரலானநிலையில், அந்த வீடியோ குறித்து விமல் விளக்கம் அளித்துள்ளார். 6 மாதத்திற்குள் பணம் தந்து விடுவதாக அவர்கள் மிரட்டி கூற சொன்னதால் தான் கூறினேன். அந்த ஆடியோ 2019-ம் ஆண்டு, தான் அவர்களுக்கு அடிமையாக இருந்த பொழுது எடுத்தத்து. மேலும் இதற்கும் மேல், அவர்கள் செய்யும் சூழ்ச்சிக்கு அடிபணிந்து போக மாட்டேன் என கூறியுள்ள விமல் சட்டப்படி அவர்கள் மேல் நடவடிக்கை எடுப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் ‘மன்னர் வகையறா’ படத் தயாரிப்பாளர் சிங்காரவேலன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், தயாரிப்பாளர் சிங்காரவேலனின் நண்பர்கள் கோபி, திருநாவுக்கரசு ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது பெயரை பயன்படுத்தி பணம்பெற்று மோசடி செய்ததாக விமல் அளித்த புகாரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com