Published : 24,Apr 2022 07:33 PM
“சேலம் எக்ஸ்பிரஸ்” - ஐபிஎல்லில் விக்கெட்டுகளை அள்ளும் நடராஜன்!

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் நடப்பு ஐபிஎல் தொடரில் புயலென பந்துவீசி விக்கெட்டுகளை அள்ளி வருகிறார். நடராஜன் சோதனைகளை சாதனையாக மாற்றியதன் பின்னணி குறித்து பார்க்கலாம்
தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஏமாற்றம் நிறைந்ததாக அமைந்தது. முழங்கால் காயம் அதைத்தொடர்ந்து அறுவை சிகிச்சை இதற்கு பின் கொரோனா என அடுத்தடுத்து உடல்ரீதியான பிரச்சினைகளால் அவதிப்பட்டார் நடராஜன். இதனால், கடந்த ஐபிஎல்லில் 2 ஆட்டங்களில் மட்டுமே நடராஜனால் ஆட முடிந்தது. இதைத் தொடர்ந்து தீவிர பயிற்சிகளுக்கு பின் தன்னை தயார்படுத்திக் கொண்ட 31 வயதான நடராஜன் தற்போதைய ஐபிஎல் களத்தில் அசத்தி வருகிறார்.
இடது கை வேகப்பந்து வீச்சாளரான நடராஜனின் துல்லிய யார்க்கர் தாக்குதல்கள் எதிராளிகளுக்கு சிம்ம சொப்பனமாக அமைந்து வருகின்றன. இதன் மூலம் கடந்த 7 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட் எடுத்த பந்துவீச்சாளர்கள் வரிசையில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். நடராஜன் மனம் தளர வைக்கும் சோதனைகளில் இருந்து மீண்டு, சாதித்து வருவது இந்த ஐபிஎல்லின் பேசுபொருள்களில் ஒன்றாக மாறியுள்ளது. பந்து வீசும் போது ஓடி வரும் தொலைவை சற்றே குறைத்துக் கொண்டதாகவும் இது நல்ல பலன் தருவதாகவும் கூறுகிறார் நடராஜன்.
நடப்பு ஐபிஎல் சீசனில் அஷ்வின், ஷாருக் கான், முருகன் அஷ்வின், வருண் சக்ரவர்த்தி போன்ற தமிழக வீரர்கள் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்தாத நிலையில், நடராஜன் ஜொலித்து வருவது தமிழக ரசிகர்களுக்கு ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது. நடராஜனின் இந்த சிறப்பான பந்துவீச்சு இந்தாண்டு இறுதியில் நடக்க உள்ள 20 ஓவர் உலகக்கோப்பை தொடரிலும் இந்திய அணியில் இடம் பெற்றுத் தரும் என நம்பலாம்.