Published : 24,Apr 2022 10:12 AM
‘எனது மனைவி பிரிய நீ தான் காரணம்’- மூதாட்டியை கொலை செய்த ராணுவ வீரர்

தேனி அருகே மூதாட்டியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தலைமறைவான ராணுவ வீரரை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் பூதிப்புரம் அருகே உள்ள வாழையாத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுப்புராஜ் என்பவரது மகன் கண்ணையா என்ற கண்ணன் (38). ராணுவ வீரரான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவி பிரிந்து சென்றதற்கு, தனது பெரியப்பா ராமுவின் மனைவி முத்தம்மாள் (64) தான் காரணம் என அவருடன் கண்ணன் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வாழையாத்துப்பட்டியில் உள்ள தனது மகள் ஜோதியின் வீட்டின் முன்பு அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்த முத்தம்மாளுடன் மீண்டும் தகராறில் ஈடுபட்ட கண்ணன், ஆத்திரத்தில் அரிவாளால் சராமாரியாக வெட்டியுள்ளார். அதில், மூதாட்டி முத்தம்மாள் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே அரிவாளால் வெட்டிய கண்ணன் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகி விட்டார்.
தகவல் அறிந்து நிகழ்விடம் வந்த போலீசார், மூதாட்டியின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பழனிசெட்டிபட்டி போலீசார், தலைமறைவாக உள்ள ராணுவ வீரரை தீவிரமாக தேடி வருகின்றனர்.