Published : 23,Apr 2022 02:02 PM
‘சில்ரன் ஆஃப் ஹெவன்’ படத்தின் தமிழ் ரீமேக் ‘அக்கா குருவி’ - வெளியீட்டு தேதி அறிவிப்பு

இயக்குநர் சாமி இயக்கி வரும் ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘அக்கா குருவி’ மே 6-ம் தேதி வெளியாகிறது.
‘உயிர்’, ‘மிருகம்’, ‘சிந்து சமவெளி’ உள்ளிட்ட சர்ச்சைக்குரிய படங்களை இயக்கியவர் இயக்குநர் சாமி. இவரின் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு உருவான ‘கங்காரு’ திரைப்படத்திற்குப் பிறகு உருவாகியுள்ள திரைப்படம் ‘அக்கா குருவி’. உலகப்புகழ் பெற்ற ஈரானிய திரைப்படமான ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’ படத்தின் அதிகாரப்பூர்வ மறுபதிப்பாக இந்தப்படம் உருவாகியுள்ளது.
ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து பள்ளியில் படிக்கும் அண்ணன், தங்கைக்கு இடையே ஒரு ஷுவை கொண்டு, பாசத்தை மனதை உலுக்கும் வகையில் அற்புதமான படைப்பாக கொடுத்திருப்பார் இயக்குநர் மஜித் மஜிதி. கடந்த 1997-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில், தங்கை பள்ளிக்கு வேகமாக ஓடும்போது ஷு, சாக்கடை நீரில் விழுந்துவிடும். இதனால் பள்ளிக்கு செல்லாத முடியாத சூழ்நிலையில், வீட்டில் பெற்றோரிடமும் சொல்ல முடியாது. இந்நிலையில், அண்ணன் தங்கை இருவரும் ஒரே ஷுவை பயன்படுத்தி வெவ்வேறு பள்ளியில் படிக்கும் நிலையில், எப்படி சமாளிக்கின்றனர் என்பதே கதைக்களமாக இருக்கும்.
உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தைத்தான் இயக்குநர் சாமி தமிழ் மற்றும் தெலுங்கில் ‘அக்கா குருவி’ ஆக ரீமேக் செய்கிறார். பழமை நிறைந்த இடத்திற்காக கொடைக்கானலுக்கு அருகிலுள்ள பூம்பாறை என்ற ஊரில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. கொரோனா காலத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்ட இந்தப் படம் ஊரடங்கால் வெளியிடப்படாமல் இருந்தநிலையில், தற்போது மே மாதம் 6-ம் தேதி வெளியாகிறது. சென்னையில் ஏப்ரல் 25-ம் தேதி இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டை பிரம்மாண்டமாக நடத்த உள்ளனர்.
இந்தப் படத்தில் 3 பாடல்கள் உள்ளநிலையில், மூன்று பாடல்களையும் இளையராஜாவே எழுதியுள்ளார். இந்தப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரங்களாக வரும் 11 வயது அண்ணன், 7 வயது தங்கை கதாபாத்திரங்களுக்காக, 200-க்கும் மேற்பட்ட குழந்தைகளை ஆடிஷன் செய்து, இறுதியாக மாஹின் என்ற சிறுவனும், டாவியா என்ற சிறுமியும் தேர்வு செய்யப்பட்டு நடித்துள்ளனர். கிளாசிக்கல் டான்ஸரான தாரா ஜெகதாம்பா, குழந்தைகளில் தாய் கதாபாத்திரத்திலும், செந்தில்குமார் தந்தை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை, பிரபல தியேட்டர் நிறுவனமான பிவிஆர் பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகமெங்கும் வெளியிடுகிறது. குழந்தைகள் படம் என்பதால், குழந்தைகளை ஈர்க்கும் வகையில், கோடை விடுமுறையில் வெளியாகிறது.