‘பீஸ்ட்’ எதிர்மறை விமர்சனத்தால் இயக்குநரை மாற்றும் ரஜினிகாந்த்?

‘பீஸ்ட்’ எதிர்மறை விமர்சனத்தால் இயக்குநரை மாற்றும் ரஜினிகாந்த்?
‘பீஸ்ட்’ எதிர்மறை விமர்சனத்தால் இயக்குநரை மாற்றும் ரஜினிகாந்த்?

‘பீஸ்ட்’ பட எதிர்மறை விமர்சனங்களால், நடிகர் ரஜினிகாந்தின் அடுத்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குவாரா, மாட்டாரா என்ற தகவல் பரவிவந்தநிலையில், இயக்குநர் நெல்சன் இந்த கேள்விகளுக்கு ட்விட்டரில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’, சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ என அடுத்தடுத்து வெற்றிப் படங்களாக கொடுத்தவர் இயக்குநர் நெல்சன் திலீப்குமார். இதையடுத்து 3-வது படமாக நடிகர் விஜயின் படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்ததால், பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அனிருத் இசை, கதாநாயகியாக பூஜா ஹெக்டே, முக்கிய கதாபாத்திரங்களில் இயக்குநர் செல்வராகவன், மலையாள நடிகர் டாம் சாக்கோ, நகைக்சுவைக்கென யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் என பிரம்மாண்டத்துடன் இந்தப் படம் உருவானது.

அதேபோல், பட வெளியீட்டிற்கு முன்னதாக வெளியான படத்தின் 2 பாடல்கள், ட்ரெயிலர் ஆகியவை அமோக வரவேற்பு பெற்றதால், ரசிகர்கள் குதூகலத்தில் இருந்தனர். இதனைத்தொடர்ந்து கடந்த 13-ம் தேதி வெளியான இந்தப் படம், கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ‘கூர்கா’, ‘மணி ஹெய்ஸ்ட்’ ஆகியவைகளின் காப்பியாக இந்தப் படம் இருப்பதாக ட்ரெயிலரின்போதே விமர்சனம் எழுந்தது.

இதனிடையே, இயக்குநர் நெல்சன் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 169’ பட அறிவிப்பும் மாஸாக வெளியானது. இதனால் இயக்குநர் நெல்சனின் ’பீஸ்ட்’ படத்தின் சிறப்புக் காட்சியை, நடிகர் ரஜினிக்கு தனியாக தயாரிப்புக்குழு திரையிட்டு காண்பித்ததாகவும், படத்தை பார்த்து ரஜினி எதுவும் சொல்லாமல் சென்றதால், படக் காட்சிகள் அவருக்கு அதிருப்தி அளித்ததாகவும் தகவல்கள் பரவி வந்தன.

இதனால் ரஜினிகாந்தின் அடுத்தப் படத்தை நெல்சன் இயக்க மாட்டார் என்றும், இயக்குநரை மாற்ற ரஜினிகாந்த் ஆலோசித்து வருவதாகவும் கூறப்பட்டது. இதனை உறுதிசெய்யும் வகையில், விக்ரம் பிரபுவின் ‘டாணாக்காரன்’, நடிகர் யாஷின் ‘கே.ஜி.எஃப். 2’ படத்தை பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த், ‘பீஸ்ட்’ படத்தை பாராட்டி ட்விட்டர் பதிவோ, நேரிலோ எதுவும் சொல்லவில்லை என்றும் கூறப்பட்டது. அதேபோல இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தனது ட்விட்டர் பயோவில், ‘தலைவர் 169’ இயக்குநர் என்ற கேப்ஷனை மட்டும் தூக்கியதுபோல ஸ்கிரீன்ஷாட்கள் பரவி வந்தன. 

இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தப்படி தனது இயக்கத்தில்தான், ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதை ட்விட்டரில் உறுதி செய்திருக்கிறார் இயக்குநர் நெல்சன் திலீப்குமார். அதன்படி, 'தலைவர் 169' படத்திற்கான இயக்குநர் என்ற கேப்ஷனை அவர் தனது ட்விட்டர் பயோவில் மீண்டும் சேர்த்துள்ளார். இதனால் ரஜினியின் அடுத்தப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குவது உறுதியாகியுள்ளது.

ரஜினிகாந்த் கடைசியாக, சிறுத்தை சிவா இயக்கிய 'அண்ணாத்தே' படத்தில் நடித்திருந்தார். கடந்த 2021 தீபாவளி ரிலீஸாக வெளியாகியிருந்த இந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதனால் நடிகர் ரஜினிகாந்தை வைத்து, தனது அடுத்தப் படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் கொடுக்க  நெல்சன் தீலீப்குமார் ஆர்வமாக உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com