Published : 06,Sep 2017 03:06 PM

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: உயர் அதிகாரி மீது நடவடிக்கை

lady-police-harrasment-action-taken-on-accused-police-officer

கோவையில், பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த காவல் உயர் அதிகாரியை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோயம்புத்தூரில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் காவலர்கள் ஈடுபட்டனர். அப்போது பெண் உதவி ஆய்வாளர் ஒருவர் மாணவர்களை அப்புறப்படுத்திக் கொண்டிருந்த போது அவருக்கு உதவி ஆணையர் ஜெயராமன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

இதனை போராட்டத்தில் கலந்து கொண்ட யாரோ ஒருவர் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

இந்த நிலையில், பெண்  காவலருக்கு பாலியல் தொல்லைகொடுத்தது தொடர்பாக அகில இந்திய மாதர் சங்கத்தினர் கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். 

இதனையடுத்து, உள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. பெண் உதவி ஆய்வாளரிடம் தவறாக நடந்த புகாரில், உதவி ஆணையர் ஜெயராமனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து டிஜிபி நடவடிக்கை மேற்கொண்டார்.