Published : 16,Apr 2022 07:40 PM

லக்னோவிடம் தோல்வி! ப்ளே ஆப் சுற்றை விட்டு வெளியேறுகிறதா மும்பை?

Defeat-to-Lucknow-Is-Mumbai-indians-leaving-the-playoff-round

200 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணி 181 ரன்கள் மட்டுமே சேர்த்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது.

ஐபிஎல் 2022 தொடரில் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா பவுலிங்கை தேர்வு செய்தார். லக்னோ அணியில் ஓப்பனர்களாக கே.எல்.ராகுலும் குயிண்டன் டி காக்கும் களமிறங்கினர்.

பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசிக் கொண்டிருந்த இந்த ஓப்பனிங் ஜோடியை புதுமுகமான ஃபாபியன் ஆலன் பிரித்தார். 24 ரன்கள் சேர்த்த டி காக்கை எல்.பி.டபுள்யூ மூலம் வெளியேற்றினார் ஃபாபியன். இதையடுத்து களமிறங்கிய மனிஷ் பாண்டேவும் ராகுலுடன் சேர்ந்து மனிஷும் அதிரடியாக விளையாட ரன் ரேட் 10ஐ தொட்டவாறு ஜெட் வேகத்தில் பயணித்தது.

image

ஒருவழியாக 38 ரன்களில் மனிஷ் பாண்டே முருகன் அஸ்வின் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். வெகு சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் 56 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இறுதியாக 20 ஓவர் முடிவில் லக்னோ அணி 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை குவித்தது. 200 ரன்கள் எடுத்தால் தான் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடியது மும்பை இந்தியன்ஸ்.

image

மும்பை அணியின் ஓப்பனர்களாக இஷான் கிஷனும் ரோகித் ஷர்மாவும் களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடிக் கொண்டிருந்த போது ஆவேஷ் கான் பந்துவீச்சில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார் ரோகித். அடுத்து வந்த இளம் வீரர் டெவால்ட் ப்ரெவிஸ் பவுண்டரி, சிக்ஸர்களை விளாசி அதிரடியாக விளையாடினார். ஆனால் அந்த அதிரடி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அவரும் ஆவேஷ் கான் பந்துவீச்சில் ஹூடாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேற மும்பை நெருக்கடிக்கு உள்ளானது.

image

அவரைத்தொடர்ந்து இஷான் கிஷனும் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ், திலக் வர்மாவுடன் பொறுமையாக விளையாடத் துவங்கினார். ஏதுவான பந்துகளை மட்டும் இருவரும் எல்லைக்கோட்டுக்கு விரட்டிக் கொண்டிருந்தனர். ஆனால் இந்த கூட்டணியையும் வியூகம் வகுத்து பிரித்தார் லக்னோ கேப்டன் ராகுல். ஹோல்டர் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி வெளியேறினார் திலக் வர்மா.

image

நிலைத்து நிற்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்ய குமாரும் அவுட்டாக, ஆறாவது தோல்வியை நோக்கி மும்பை பயணிக்கத் துவங்கியது. தொடர்ந்து சொதப்பி வந்த கீரன் பொல்லார்ட் திடீரென சிக்ஸர்களாக விளாசத் துவங்கினார். ஆனால் உடன் விளையாட வந்தவர்கள் உடனுக்குடன் அவுட்டாகினர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைபட்ட நிலையில் மும்பை வெறும் 8 ரன்களையே எடுத்தது.

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 181 ரன்களை மட்டுமே எடுத்ததால், லக்னோ அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பை அணி இதுவரை ஒரு வெற்றியைக் கூட பெறாமல் ஆறு தோல்விகளை பெற்றுவிட்டது. 10 அணிகள் கொண்ட தொடரில் தொடர்ந்து தோல்விகளை மட்டும் சந்தித்து வரும் மும்பை அணி, முதல் அணியாக ப்ளே ஆப் சுற்றை விட்டு வெளியேறுகிறதா என்ற கேள்வி எழுகிறது.