Published : 16,Apr 2022 03:24 PM
தோல்வி பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்குமா மும்பை? லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்று பவுலிங்!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பவுலிங்கைத் தேர்வு செய்தது.
ஐபிஎல் 2022 தொடரில் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வெற்றியை கூட பெறாமல் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தள்ளாடி வருகிறது.
பேட்டிங்கில் இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டெவால்ட் ப்ரெவிஸ் என பலர் மிகச் சிறப்பாக விளையாடுகின்றனர். ஆனால் பவுலிங்கில் அந்த அணியின் தடுமாற்றம்தான் இந்த மோசமான சூழலுக்கு கொண்டு வந்திருக்கிறது. இந்த ஆட்டத்திலாவது சில பவுலர்கள் கச்சிதமாக பந்துவீசி, விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தினால் மட்டுமே வெற்றியை நினைத்துப்பார்க்க இயலும்.
மறுபக்கம் லக்னோ அணி 3 வெற்றிகள், 2 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. முதல் போட்டியில் குஜராத் அணியிடம் தோல்வியுற்ற பிறகு, அடுத்த 3 ஆட்டங்களில் சென்னை, ஹைதராபாத், மும்பை அணிகளை எளிதாக வீழ்த்தியது. கடைசி ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியிடம் 3 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி கண்டது. மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் இன்று களமிறங்க உள்ளது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்.
மும்பை அணியின் புதிய அறிமுகமாக ஃபேபியன் ஆலன் இன்று களமிறங்குகிறார். லக்னோ அணியில் கிருஷ்ணப்பா கவுதமுக்கு பதிலாக மனிஷ் பாண்டே களமிறங்குகிறார். டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா பவுலிங்கை தேர்வு செய்தார்.
இரு அணிகளின் ஆடும் லெவன்:
மும்பை இந்தியன்ஸ்: இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரோகித் ஷர்மா (கேப்டன்), டெவால்ட் ப்ரீவிஸ், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், கீரன் பொல்லார்ட், ஃபேபியன் ஆலன், முருகன் அஷ்வின், ஜஸ்பிரிட் பும்ரா, ஜெய்தேவ் உனட்கட், டைமல் மில்ஸ்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: கே.எல். ராகுல் (கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), மனிஷ் பாண்டே , தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், ஆயுஷ் பதோனி, ஜேசன் ஹோல்டர், க்ருனால் பாண்டியா, துஷ்மந்த சமீரா, ரவி பிஷ்னோய், அவேஷ் கான்