Published : 15,Apr 2022 12:39 PM
டெல்லியை அச்சுறுத்தும் கோடை வெப்பம்; அதிகரிக்கும் தீ விபத்துகள் - தடுப்பதற்கான வழி என்ன?

டெல்லியில் வாட்டி வதைக்கும் கடும் கோடை வெப்பம் காரணமாக தீ விபத்துக்கள் அதிகரித்து உள்ளதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.
தலைநகர் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடுமையான வெப்பம் நிலவுகிறது. தினசரி வெப்பநிலை 43℃ முதல் 44℃ வரை உள்ள நிலையில் வெப்பத்தில் இருந்து காத்துக்கொள்ள பெரும்பாலான வீடுகளில் குளிர்சாதன வசதி 24 மணி நேரமும் இயக்கப்படுகிறது. இவை ஒரு பக்கம் என்றால் மற்றொரு பக்கம் அதிக அளவிலான தீ விபத்துகள் ஏற்படுவதாக டெல்லி தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், டெல்லியில் பகல் நேர வெப்பநிலை அதிகமாக உள்ளதாலும், வறண்ட வானிலையே நிலவுவதாலும் அதனால் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக குப்பை கிடங்குகள், வீடுகளில் தீ விபத்து மற்றும் நிறுவனங்கள் மற்றும் தனியார் இடங்களில் மின்கசிவு என தீயணைப்பு துறையின் அவசர உதவி எண்ணுக்கு வரும் அழைப்புகள் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கிறார்கள்.
2020-ம் ஆண்டு டெல்லி தீயணைப்பு துறைக்கு ஆண்டின் ஓட்டுமொத்த தீ விபத்து அழைப்பு 14,785 ஆகும். இதேபோல்,2021ம் ஆண்டில் 15,687 ஆக உள்ளது. ஆனால் 2022 நடப்பு ஆண்டில் ஏப்ரல் 13ம் தேதி வரை மட்டும் தீவிபத்து தொடர்பாக 1,743 அவசர அழைப்புகள் வந்துள்ளது என தெரிவிக்கிறார் டெல்லி தீயணைப்புத்துறை இயக்குனர் அதுல் கார்க்.
டெல்லி தீயணைப்புத்துறை 1,483 சதுர கிலோ மீட்டருக்கு சேவையை வழங்கி வருகிறது. எங்களுக்கு வரும் அழைப்புகளில் பெரும்பாலானவை மின் கசிவு காரணமாக ஏற்படும் தீ விபத்து தான். காரணம் கோடை காலம் கடுமையாக உள்ளதால் உரிய பராமரிப்பு இல்லாமல் உள்ள வீடுகளில் ஏ.சி உள்ளிட்ட அதிக மின் அழுத்த சாதனங்களை மக்கள் தொடர்ச்சியாக இயக்குகின்றனர். இதனால் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்படுகிறது என்றும், வீடுகள் அதிகம் உள்ள இடங்களில் இது போன்ற நிகழ்வுகள் பெரும் அசம்பாவிதத்தை ஏற்படுத்தும் என்பதால் அதிக எச்சரிக்கையுடன் தீயணைப்புத்துறை செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.