Published : 13,Apr 2022 09:45 PM

ஃப்ளிக் ஷாட் அடிக்க முயற்சித்த கோலி - ஸ்கெட்ச் போட்டு அவுட்டாக்கிய தோனி - வைரல் வீடியோ

Watch-Video-MS-Dhoni-sets-field-to-get-Virat-Kohli-out

நேற்று நடைபெற்ற போட்டியில், பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டனான விராத் கோலி, தனது டிரேட்மார்க் ஃப்ளிக் ஷாட் மூலம் பௌண்டரி வீச முயற்சித்தநிலையில், தோனி திட்டம் போட்டு அவரை அவுட்டாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

2022-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மகாராஷ்டிரா மாநிலத்தில், கடந்த 26-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் 4 முறை கோப்பை சென்ற சென்னை அணி, இந்த சீசனில் தொடர்ந்து 4 முறை தோல்வியை சந்தித்து விமர்சனத்துக்குள்ளானது. குறிப்பாக ஜடேஜாவின் கேப்டன்ஷிப் சரியாகயில்லை என்று விமர்சிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில், நேற்று நடைபெற்ற 22-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதின.

image

இந்தப் போட்டியில் சென்னை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரூ அணியின் கேப்டன் டூ பிளசிஸ், பவுலிங்கை தேர்வு செய்ததையடுத்து, சென்னை அணி பேட்டிங்கில் களமிறங்கியது. முதலில் பேட்டிங் செய்த சென்னை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக பேட்டிங் செய்து, 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 216 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்திய பெங்களூரு அணியின் தொடக்க வீரர் மற்றும் கேப்டனான டூ பிளசிஸ் 8 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த விராட் கோலி 1 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அந்த அணியில் தினேஷ் கார்த்திக், பிரபுதேசாய், அகமது ஆகிய வீரர்கள் ரன் ரேட்டை உயர்த்தினாலும், சென்னை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், களத்தில் நிலைத்து நிற்கவில்லை.

இதனால் இறுதியில் பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் நேற்று விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்த தோனி வகுத்த திட்டம் குறித்த வீடியோ தற்போது வெளியாகி சமூகவலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. அதிரடியாக விளையாடும் முனைப்பில் விராட் கோலி களமிறங்க, 4-வது ஓவரை சென்னை அணியின் இளம் வீரர் முகேஷ் சவுத்ரி வீச வந்த நிலையில் அதை விராத் கோலி எதிர்கொண்டார்.

image

அதற்கு முன்பாக டீப் ஸ்கொயர் லெக் பகுதியில் எந்த பீல்டரும் இல்லாததை பார்த்த தோனி, அந்த இடத்தில், விராட் கோலி, தனது டிரேட்மார்க் ஃப்ளிக் ஷாட் மூலம் பௌண்டரி வீச முயற்சிக்க அதிக வாய்ப்புள்ளது என்பதை கணித்து ஷிவம் துபேவை அங்கே நிறுத்தினார்.

அடுத்த பந்திலேயே சொல்லி வைத்தார் போல் ஃப்ளிக் ஷாட் ஆடிய விராட் கோலி தோனியின் திட்டத்தில் சிக்கி சிவம் துபேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், அதிகபட்சமாக மகேஷ் தீக்‌ஷன்னா 4 விக்கெட்டுகளையும், கேப்டன் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

வீடியோவை இங்கே கிளிக் செய்து காணலாம்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்