`சாப்பாட்டுக்கே வழியில்ல..’ - கடும் கொரோனா கட்டுபாட்டால் பால்கனி வழியாக உதவிகேட்ட சீனர்கள்

`சாப்பாட்டுக்கே வழியில்ல..’ - கடும் கொரோனா கட்டுபாட்டால் பால்கனி வழியாக உதவிகேட்ட சீனர்கள்
`சாப்பாட்டுக்கே வழியில்ல..’ - கடும் கொரோனா கட்டுபாட்டால் பால்கனி வழியாக உதவிகேட்ட சீனர்கள்

சீனாவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து கட்டுக்கடங்காமல் உயர்ந்து வரும் நிலையில், ஒவ்வொரு நாளும் அங்கு ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுக் கொண்டே வருகின்றது. அதிலும், சுமார் 26 மில்லியன் மக்கள் வசிக்கும் ஷங்காய் என்ற பகுதியில் கொரோனா பரவல் அதிகமிருப்பதால், அங்கு மிகக்கடுமையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். அப்பகுதியில் சாப்பாடு, தண்ணீர், மருத்துவம் உள்ளிட்ட சில அடிப்படை தேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகின்றது.

வீட்டை விட்டே வெளியே வரக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால், மருத்துவ உதவிக்கு கூட வெளியே செல்ல முடியாத நிலை இருப்பதாக அப்பகுதி மக்கள் சமூக ஊடகங்கள் வழியாக தெரிவித்து வருகின்றனர். அப்படியான ஒரு வீடியோவில், `வீட்டைவிட்டுதானே வெளியேவரக்கூடாது... பால்கனியிலிருந்து உதவி கேட்கிறோம். இப்போதாவது செய்யுங்கள்’ எனக்கூறி குடியிருப்புவாசிகள் சிலர் கத்துவது தெரியவந்துள்ளது.

ஆனால் மக்களின் இந்த குரலை கேட்ட சீன அரசாங்கமோ, ட்ரோன் வழியாக `தயவுசெய்து ஜன்னல் கதவுகளை திறந்து இப்படி பாட்டு பாட வேண்டாமென அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். ஏனெனில் இதுவேகூட கொரோனா பரவலை அதிகப்படுத்தலாம்’ என கேட்டுக்கொண்டிருக்கிறது.

ஷங்காய் பகுதியை பொறுத்தவரை, யாருக்காவது கொரோனா உறுதியானால் அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்படும் மையங்களுக்கு அழைத்துச்செல்லப்படுவது வழக்கம். அவர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்களும் அழைத்துச்செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்படுவர். இவையாவும், தங்களை மேலும் மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்குவதாக அம்மக்கள் சமூக ஊடகங்கள் வழியாக தகவல் தெரிவிக்கின்றனர். தற்போதைக்கு மக்கள் குரலுக்கு செவிசாய்க்கும் வகையில் ஷங்காய் அரசு `குழந்தைகளுடன் பாதிப்பு உறுதியானவர்களின் பெற்றோருக்கும் குடும்பங்களுக்கும் மட்டும் தனிச்சலுகைகள் உண்டு’ என்று அறிவித்து அவர்கள் மட்டும் குடும்பத்துடன் தனிமையில் இருக்க சலுகை தெரிவித்துள்ளது.

முன்னதாக முதியோர் சிலருக்கு தனி சிறப்பு வசதி கேட்டபோது அந்நாட்டு அரசு அதை மறுத்திருந்தது சர்ச்சையாகி இருந்த நிலையில், தற்போது குழந்தைகளுக்காவது அந்நாட்டு அரசு சலுகை கொடுத்திருக்கிறதே என மக்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com