Published : 07,Apr 2022 06:00 PM
‘ரொம்ப பணம் போட்டுருக்காங்க; நிச்சயம் ஏதாச்சும் மும்பை இந்தியன்ஸ் செய்வாங்க’- சோயப் அக்தர்

“ஏலத்தில் மும்பை அணி அதிக பணம் செலவு செய்தது. அதை நியாயப்படுத்த அவர்கள் இறுதியில் ஏதாவது செய்வார்கள் என்று நான் நினைக்கிறேன” - என்று பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் கூறியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் பலம் வாய்ந்த அணிகளாக அறியப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளும் தொடர்ந்து 3 போட்டிகளில் “ஹாட்ரிக்” தோல்வியடைந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளன. இதில் மும்பை அணி பல சீசன்களில் வழக்கமாக துவக்க ஆட்டங்களில் தோல்வியையே பெரும்பாலும் தழுவியுள்ளது. ஆனால் அடுத்த ஆட்டங்களில் மிகப் பலமாக மீண்டெழுந்து கோப்பையை தன்வசமாக்கிய வரலாறு மும்பைக்கு உண்டு. இந்த வரலாறுக்கு 2021 சீசன் மட்டும் விதிவிலக்காக மாறியது. தொடர்ந்து தோல்வியை தழுவி ப்ளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேறாமல் வெளியேறியது மும்பை அணி.
மும்பை இந்தியன்ஸ் புள்ளிப் பட்டியலில் தாமதமாக எழுச்சி பெறும் என்று பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சாளர் சோயப் அக்தர் கூறியுள்ளார். “சீசனின் இறுதிக் கட்டங்களில் தான் மும்பை இந்தியன்ஸ் அணி எப்பொழுதும் அதிசயங்களைச் செய்கிறது. அவர்கள் வேகத்தை அதிகபடுத்த நேரம் எடுக்கும். கடந்த சீசன் வரை அவர்கள் நடுவில் அல்லது அதன் முடிவில் வேகத்தை எடுத்துள்ளனர். சில கட்டங்களில், அவர்கள் போட்டியிலிருந்து முழுவதுமாக வெளியேறிவிட்டார்கள் என்று நினைப்போம். ஆனால் நம் அனுமானங்களை மாற்றியமைத்து கோப்பையை வென்றுள்ளார்கள். ஏலத்தில் அவர்கள் நிறைய பணம் செலவு செய்தார்கள். அதை நியாயப்படுத்த அவர்கள் இறுதியில் ஏதாவது செய்வார்கள் என்று நினைக்கிறேன்” என்று கூறினார் சோயப் அக்தர்.