Published : 06,Apr 2022 07:28 AM
சபரிமலை ஐயப்பன் கோயிலில் உயர்ந்தது அரவணை பிரசாதத்தின் விலை! எப்போது முதல் அமல்?

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசாதங்களின் விலை மற்றும் அனைத்து வகையான பூஜைகளுக்கான கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.
உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் தமிழ் மாதமான சித்திரை, மலையாள மாதமான விஷு சிறப்பு பூஜைகளுக்காக, வரும் பத்தாம் தேதி நடை திறக்கப்படுகிறது. அன்றைய தேதி முதல் பிரசாதங்களின் விலை மற்றும் அனைத்து வகையான பூஜைகளுக்கான கட்டணங்களும் உயர்த்தப்படுவதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
அதன்படி, ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாயாக இருந்த படி பூஜைக் கட்டணம் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 900 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உதயாஸ்தமன பூஜை கட்டணம் 50,000 ரூபாயிலிருந்து 61,800 ஆகவும், தங்க அங்கி சார்த்துதலுக்கான கட்டணம் 10,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. புஷ்பாபிஷேகம், சதகலசம் பூஜைக்கான கட்டணம் 10,000 ரூபாயிலிருந்து 12,500 ரூபாயாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. உற்சவ பலி பூஜைக்கான கட்டணம் 30,000 ரூபாயிலிருந்து 37,500 ரூபாயாகிறது. பிரசாதங்களைப் பொறுத்தவரை, 100 மில்லி அபிஷேக நெய்யின் விலை 75 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக உயர்ந்துள்ளது. அரவணையின் விலை 80 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும், ஒரு பாக்கெட் அப்பம் 35 ரூபாயிலிருந்து 45 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தவறான தகவல்களை பரப்பியதாக பாக்., இந்தியாவின் 22 யூ-டியூப் சேனல்கள் முடக்கம்: மத்திய அரசு