Published : 02,Apr 2022 02:58 PM

``விழிப்புணர்வு அதிகரிக்க, சிகிச்சை மையங்களை அரசு விரிவுபடுத்தணும்” #AutismAwarenessDay

All-we-need-to-know-about-the-neurological-condition-called-Autism-on-this-World-Autism-Awareness-Day-2022

"ஆட்டிசம் என்பது நோய் அல்ல. மூளையில் ஏற்படும் ஒரு குறைபாடு மட்டுமே" என்பது தான் நவீன மருத்துவம் இச்சமூகத்திற்கு கூறும் ஆணித்தனமான செய்தி. எனவே இக்குழந்தைகளை நோய் பாதித்தவர்கள் என்று கூறுவது முற்றிலும் தவறானது. இதை உணர்த்தும் நோக்கில், ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 2-ம் தேதி உலகம் முழுவதும் ஆட்டிச தினம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில், இன்று இந்த தினத்தில் ஆட்டிசம் குறித்து சமூகம் தெரிந்து கொள்ள வேண்டியது மற்றும் செய்ய வேண்டியது என்ன, ஆட்டிச குழந்தைகளுக்காக அரசு செய்ய வேண்டியது என்ன என்பவற்றை இந்தக் கட்டுரை வழியாக நீங்களும் தெரிந்துக்கொள்ளுங்கள்.

ஆட்டிசக் குழந்தைகளை பொறுத்தவரை, அவர்கள் மற்றவர்களுடன் கலந்து பழகுவதில் சிரமம் ஏற்படுவதுதான் அவர்கள் எதிர்கொள்ளும் பிரதான பிரச்னை. இவர்களின் அனைத்துப் பிரச்னைகளையும் சரிசெய்ய, இவர்களுக்கென சிறப்புப் பள்ளிகள் இருக்கின்றன. சென்னையை சேர்ந்த அப்படியொரு சிறப்புப் பள்ளியை சேர்ந்த பயிற்றுநரொருவர் பேசுகையில்,

 “இக்குழந்தைகளுக்கென தனித்தனி பயிற்சியாளர்களை வைத்து, அவர்கள் துணையுடன் தினமும் காலை 2 மணி நேர விளையாட்டுகளிலும், உடற்பயிற்சியிலும் ஈடுபடுகையில் இவர்களால் மேம்பட்டு செயல்பட முடியும். நாள்படும்போது தொடர்ந்து அவர்களை பள்ளிக்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களுக்கு வார்த்தைகளை சொல்லிக்கொடுத்தல், எழுதப்படிக்கக் கற்றல், காய்கறி நறுக்கப் பழகுதல், சமையல், துணிப் பைகள் செய்யப் பழகுதல், தோட்டப்பணி என பல திறன்களை கற்கப்பழக வைப்பதன்மூலம் இவர்களின் தனித்திறமையை இவர்களின் பெற்றோர் / பாதுகாவலரால் கண்டறிய முடியும். ஒவ்வொரு ஆட்டிச குழந்தையிடமும், ஒவ்வொரு தனித்திறன் இருக்குமென்பதால் அவர்களின் தனித்திறன் என்ன என்று கண்டறிவது தான் சற்று சிரமம். கண்டறிந்துவிட்டால் இந்த கெட்டிக்காரர்கள், காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறார்கள்” என்றார்.

image

சென்னையை சேர்ந்த 12 வயது மகிழன் என்ற குழந்தை, ஆட்டிச குறைபாடுடைய குழந்தை. இக்குழந்தை தான் செல்லும் எல்லா யோகா போட்டிகளிலும் முதல்பரிசை தட்டி வருவதை வழக்கமாகவே கொண்டிருக்கிறார். 50 யோகாசனங்களை செய்து அசத்தும் இந்தச் சுட்டிப் படிக்கும் பள்ளியில், 22 வயது மதிக்கத்தக்க 10- ம் வகுப்பு முடித்த மற்றொரு ஆட்டிச குழந்தையும் இருக்கிறார். அவர், நிதி மேலாண்மையில் அதீத ஆர்வத்தை கொண்டவர். வருங்காலத்தில் அதில் அவர் ஜொலிப்பார் என பெருமிதத்துடன் கூறுகின்றார், அதே பள்ளியில் பயிற்றுநராக பணிபுரியும் அவரது தாய் அன்னபூரணி.

பயிற்றுநராக இருக்கும் அன்னபூரணி, ஆட்டிச குழந்தைகளுக்கான சிகிச்சை குறித்து பேசுகையில், “ஒரு சில ஆட்டிசக் குழந்தைகளின் பெற்றோர், சாதாரண குழந்தைகள் படிக்கும் பள்ளியில் தன் பிள்ளையும் படிப்பதற்காகவே 4 மடங்கு பணத்தைக் கொட்டிக் கொடுக்கும் நிலை உள்ளது. அது மாற வேண்டும். தன் குழந்தைக்கு ஆட்டிசம் உள்ளது என்பதை சில பெற்றோர் ஏற்க மறுக்கின்றனர். இதனால் அக்குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. இதைவிடுத்து, குழந்தைகளை பெற்றோர் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்றார்.

image

அன்னபூரணியை போலவே, தன் ஆட்டிசக் குழந்தைக்காக இத்துறையில் பயிற்றுநராக கடந்த 25 ஆண்டுகளாக இருக்கிறார் ராதா நந்தகுமார் என்ற பெண். அவர் பேசுகையில், “எப்பாடுபட்டாகிலும், குழந்தைக்கான பணத்தை செலவிடலாம் என்று பல பெற்றோரும் நினைப்பது உண்டு. அந்தவகையில் மத்தியத்தர வர்க்கமும், மேல் தட்டினரும் மட்டுமே சுமார் 25,000 முதல் 50,000 வரை ஒவ்வொரு மாதமும் ஒரு குழந்தைக்கு தெரபி மற்றும் பயிற்றுநருக்காக செலவிடுகின்றனர். ஆனால் ஏழைக் குடும்பங்களால் இச்செலவுகளை நினைத்துக் கூட பார்க்க முடியாது. அவர்களே நினைத்தாலும், இந்த குறைபாடு உடைய குழந்தையின் மருத்துவச் செலவை அவர்களால் ஏற்க முடியாத அளவுக்கு நிதி நிலைமை இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். எல்லோருக்கும், எல்லாமும் கிடைக்க வேண்டும். சிகிச்சைகளும், தெரபிகளும் எளியோருக்கும் கிடைக்க அரசு வழிவகுக்க வேண்டும்” என்றார் அவர்.

ஆட்டிச குழந்தையின் பெற்றோராக இருக்கும் சென்னையை சேர்ந்த பிரேம் குமார் சாமுவேல், அவர் சந்திக்கும் சவால் குறித்து நம்மிடையே பேசுகையில், “தற்போது அரசின் சார்பில் இவர்களுக்கான அனைத்து தெரபிகளும் வழங்கும் `தொடக்க நிலை இடையீட்டு மையங்கள்’, முக்கிய மருத்துவக் கல்லூரிகள் அளவில் தான் உள்ளன. இப்படி இருப்பதால் நாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து அவர்களை பயிற்சிக்கு கொண்டு செல்வது சிரமம். ஆரம்ப சுகாதார நிலையங்களைப் போன்று அருகாமையிலேயே ஆட்டிசத்துக்கான சிகிச்சையை கொண்டு வர வேண்டும். அந்த அளவிற்கு நிறைய மையங்களை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் இந்த குறைபாடு பற்றிய பார்வை எளிமையாகும்; விழிப்புணர்வும் அதிகரிக்கும்” என்றார்.

தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், கடற்கரைகள், உணவகங்கள், டீக்கடைகள் தொடங்கி திருமணம், பிறந்தநாள், வரவேற்பு என்று நிகழ்ச்சிகள் வரை எங்கும் எதிலும் சிறப்புக் குழந்தைகளுக்கென முறையான வசதிகள் இல்லாமல் இருக்கிறதென்பதும் இங்கு நாம் மறுப்பதற்கில்லை. இந்த நிலையை மாற்றியமைத்து `அன்பும் அறமும் நிறைந்த சமூகமாய் நாம் திகழ வேண்டும்’ என்பதை உணர்ந்து, இக்குழந்தைகளை முறையான வசதிகளுடன், இன்முகத்துடன் நாம் வரவேற்கத் தொடங்குவது, காலத்தின் கட்டாயம். அதுவே மனிதத்தின் அடையாளமும்கூட. மேலும் அப்படி செய்தால் மட்டுமே முகச்சுளிப்புகளையும், இழிவான பார்வைகளையும் எதிர்கொண்ட இக்குழந்தைகளின் பெற்றோருக்கு ஏற்பட்ட மனக்காயங்கள் ஆறத் தொடங்கும். போலவே சமூகத்தின் கோரப்பார்வைக்கு அஞ்சி குழந்தைகளை ஓர் அறைக்குள் அடைத்து, தானும் அடைந்து கிடைக்கும் பெற்றோரின் நிலையும் அப்போது தான் மாறும்.

- சுகன்யா

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்