Published : 02,Apr 2022 08:14 AM
ரஷ்யா எரிபொருள் கிடங்கின் மீது தாக்குதலா? - விளக்கம் கொடுத்த உக்ரைன்

ரஷ்யாவில் உள்ள எரிபொருள் சேமிப்பு நிலையத்தை தங்கள் நாட்டு ராணுவத்தினர் தாக்கியதாக வெளியான தகவலை உக்ரைன் மறுத்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் ஒரு மாதத்தைக் கடந்து தொடர்ந்து வருகிறது. பல்வேறு நாடுகளின் ராணுவ ஆயுதங்கள் உதவியுடன் உக்ரைனும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனின் பல முக்கிய நகரங்களை ரஷியா தாக்கி அழித்து வருகிறது.
இந்நிலையில் ரஷ்யா எல்லையில் முதல்முறையாக உக்ரைன் ஒரு தாக்குதலை நடத்தியுள்ளதாகத் தெரிகிறது. உக்ரைன் எல்லையில் உள்ள ரஷிய நகரமான பெல்கோரோடில் எரிபொருள் சேமிப்புக் கிடங்கினை, உக்ரைன் படை ஏவுகணைகளைக் கொண்டு தாக்கியுள்ளதாக பெல்கோரோடு நகர மேயர் அன்டன் இவானோவ் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் காயமடைந்ததாகவும் மேலும் நகரத்தின் மூன்று வீதிகளில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், தீ தற்போது அணைக்கப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
போர் தொடங்கியதில் இருந்து, ரஷ்யாவுக்குள் சென்று உக்ரைன் தாக்குதல் நடத்துவது இதுவே முதன்முறையாகும். உக்ரைனின் இந்த தாக்குதலால், போர் நிறுத்தம் தொடர்பாக இரு நாடுகள் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்படும் என ரஷ்ய அதிபர் மாளிகை கூறியுள்ளது.
இந்த நிலையில் ரஷ்யா எண்ணெய் கிடங்கு மீது தங்கள் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவலை உக்ரைன் மறுத்துள்ளது. இதுகுறித்து உக்ரைன் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் ஒலெக்ஸி டானிலோவ் கூறுகையில் "சில காரணங்களால் நாங்கள் தாக்குதல் தொடுத்ததாக ரஷ்யா கூறுகிறது. ஆனால் எங்கள் தகவல்களின்படி இது யதார்த்தத்துடன் ஒத்துப்போகவில்லை" என்று கூறினார்.
உக்ரேனிய வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா கூறுகையில், ரஷ்யாவில் உள்ள எரிபொருள் கிடங்கில் உக்ரைன் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுவதை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ முடியவில்லை'' என்றார்.
இதையும் படிக்க: முதன்முறையாக ரஷ்யாவுக்குள் புகுந்து உக்ரைன் தாக்குதல்! எரிபொருள் கிடங்குகள் சேதம்