Published : 28,Mar 2022 12:40 PM

ஸ்டார்ட் அப் இளவரசிகள்- 29: உன்னதமான உணவு டெலிவரி சேவையை துவக்கிய ஜாஸ்மின் குரோ!

Life-History-of-Goodr-CEO-Jasmine-Crow

ஜாஸ்மின் குரோ (Jasmine Crowe) பசியுடன் இருப்பவர்களுக்கு உணவுகிடைக்க வழி செய்திருக்கிறார். அதே நேரத்தில் உணவு பொருட்கள் வீணாவதை தடுக்கவும் வழி செய்திருக்கிறார். இந்த இரண்டையும் இணைக்கும் உன்னதமான உணவு டெலிவரி சேவையை சாத்தியமாக்கும் குட்அர் (Goodr) நிறுவனத்தை அவர் நடத்தி வருகிறார்.

பெரும்பாலும் லாபமே பிரதானமாக கருதப்படும் வர்த்தக உலகில் ஜாஸ்மின், சமூக நோக்கிலான சேவையை நடத்தி வருகிறார். பசித்தவர்களுக்கு உணவு அளிக்கும் இந்த சேவையை அவர் வர்த்தக நிறுவனங்களுக்கு லாபம் அளிக்கும் வகையில் செயல்படுத்தி வருகிறார் என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது. ஸ்மார்ட் போன் யுகத்தில் செயலி மூலம் உணவு டெலிவரி செய்வது என்பது இயல்பாக மாறிவிட்டது. கிக் எகானமி என சொல்லப்படும் சிறு வேலைகள் சார்ந்த பொருளாதாரத்தின் முக்கிய அம்சமாக கருதப்படும் உணவு டெலிவரி சேவையை தலைகீழாக வழங்குவதன் மூலம் ஜாஸ்மின், உலகின் தீரா பிரச்னையான பசிக்கு தன்னால் முடிந்த தீர்வை அளித்திருக்கிறார்.

குட்அர் சேவை எப்படி செயல்படுகிறது என்றால், ரெஸ்டாரண்ட் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களிடம் இருந்து வீணாகக் கூடிய உணவை பெற்று, தேவைப்படுபவர்களுக்கு அந்த உணவை வழங்கி வருகிறது. இதன் மூலம், உணவு வீணாவது தடுக்கப்படுவதோடு, பசியில் இருப்பவர்கள் வயிறு
நிறையவும் வழி செய்யப்படுகிறது.

சமூக தாக்கம்

மிகப்பெரிய சமூக தாக்கத்தை ஏற்படுத்தி வரும் இந்த சேவையை ஜாஸ்மின் துவக்கிய கதையும் ஊக்கம் அளிப்பதாகவே இருக்கிறது. சமூக நோக்கு மற்றும் அதை அடைவதற்கான விடாமுயற்சி ஆகியவற்றுக்கான உதாரணமாக ஜாஸ்மின் குரோ திகழ்கிறார்.

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் வசித்து வந்த ஜாஸ்மின் வர்த்தக உலகில் ஆலோசகராக செயல்பட்டு வந்தார். நிறுவனங்கள் லாப நோக்கிலாத அமைப்புகளை துவக்குவது தொடர்பாக ஆலோசனை வழங்கி வந்தார். இந்த காலத்தில் பணியில் இருந்து திரும்பும்போது வழியில், வீடில்லாதவர்களையும், பசியுடன் இருந்தவர்களையும் காண நேர்ந்தது. அதற்கு முன்னும் பலமுறை அவர் இத்தகைய காட்சியை பார்த்திருக்கிறார் என்றாலும், குறிப்பிட்ட அன்றைய தினம் இந்த காட்சி அவரது உள்ளத்தை உலுக்கியது.

image

இத்தனை பேர்கள் பசியுடன் இருக்கின்றனரா என நினைத்தவர், இவர்களுக்கு உதவ ஏதேனும் செய்ய விரும்பினார். இந்த உணர்வுடன் வார இறுதி நாட்களில் உணவு வழங்கும் சேவையை துவக்கினார். அதாவது தானே வீட்டில் சமைத்து அந்த உணவை வார இறுதி நாட்களில் வீடில்லாதவர்களுக்கு வழங்கத் துவங்கினார். உணவு கூப்பன் சலுகைகள், தள்ளுபடி என பலவற்றை பயன்படுத்தி பொருட்களை வாங்கி உணவு தயாரித்து வழங்கினார்.

சொந்த செலவில் உணவு

ஞாயிறு ஆன்மா எனும் பெயரில் இந்த சேவையை அவர் வழங்கி வந்தார். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் இந்த சேவையை அவர் ஈடுபாட்டுடன் தொடர்ந்தார். இதனிடையே வீடில்லாதவர்களுக்கு ஜாஸ்மின் உணவு வழங்கும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. இந்த வீடியோவை பார்த்த பலர் ஜாஸ்மினிடம், உணவை நன்கொடையாக வழங்குவது யார் என கேட்டுள்ளனர். உணவை யாரும் வழங்கவில்லை, தானே சமைத்து தருகிறேன் எனக் கூற, மனதில் உணவை நன்கொடையாக பெறுவது தொடர்பான யோசனை மின்னலென பளிச்சிட்டது.

இதனையடுத்து நன்கொடை ஏற்படுத்தக்கூடிய தாக்கம் பற்றி ஆய்வை மேற்கொண்டார். மிச்சமாகும் உணவு என்ன ஆகிறது என்பதை அறிவதிலும் கவனம் செலுத்தினார். உணவு வீணாவது தொடர்பான ஆய்வில் தெரிய வந்த விஷயங்கள் அதிர்ச்சி அளித்தன. அமெரிக்காவில் ஆண்டுதோறும் 72 பில்லியன் பவுண்ட் உணவு வீணாவதாக அறிந்து கொண்டார். இப்படி வீணாகும் உணவுக்கழிவை அகற்றுவதும் பெரும் பிரச்சனையாக இருப்பதை உணர்ந்தார். அதே நேரத்தில் நாட்டில் 42 மில்லியன் மக்கள் பசியில் தவிப்பதையும் தெரிந்து கொண்டார்.

பசி போக்கும் பாலம்

இந்த இரண்டையும் இணைக்கும் வகையில் செயல்பட வேண்டும் என நினைத்தவர், பசி என்பது பற்றாக்குறை பிரச்னை அல்ல, உணவை கொண்டு செல்லும் போக்குவரத்து பிரச்னையாக இருக்கிறது என புரிந்து கொண்டார். இவற்றை இணைப்பதன் மூலம், உணவு வீணாவதற்கும், பசிப்பிணிக்கும் தீர்வு காண முடியும் என நம்பினார். மேலும், வீசி எறியப்படும் உணவு, கழிவுப்பொருளாக மாறி மீத்தேன் வாயுவை வெளியேற்றுவது சுற்றுச்சூழலுக்கு கேடாக அமைவதையும் பெருமளவு குறைக்க முடியும் என்றும் நம்பினார்.

இந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் குட்அர் சேவையை துவக்கினார். ரெஸ்டாரண்ட் உள்ளிட்ட உணவு மிச்சமாகும் நிறுவனங்களை கண்டறிந்து, அந்த உணவை வீணாகாமல் தடுத்து பசித்த உள்ளங்களுக்கு கிடைக்கச்செய்யும் வகையில் இந்த சேவையை உருவாக்கினார். அவரே கூறுவதுபோல, பசி பிரச்னைக்கு தொழில்நுட்பம் மூலம் தீர்வு கண்டார். குட்அர் செயலி மூலம், வர்த்தக நிறுவனங்கள் தொடர்பு கொள்ளப்பட்டும் வீணாகும் உணவு பெறப்படுகிறது. உள்ளூர் தொண்டு நிறுவனங்கள் துணையோடு இந்த உணவு தேவைப்படுபவர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

image

ஆனால் இந்த சேவையை நடைமுறைக்கு கொண்டு வருவது அத்தனை எளிதாக இல்லை. சமூக நோக்கிலான சேவை என்றாலும், இதற்கான செயலியை நிறுவ, அதற்கான அடிப்படை தொழில்நுட்பத்தை அமைக்க நிதி தேவைப்பட்டது. நிறுவனத்திற்கான மூலதனம் திரட்ட, ஜாஸ்மின் மேற்கொண்ட முயற்சிகள் ஆரம்பத்தில் தோல்வியில் முடிந்தன. பசிக்கு உணவு அளிக்கும் உன்னதமாக திட்டத்தை முன்வைத்தும் முதலீட்டாளர்கள் அதை ஆதரிக்க முன் வராதது ஏன் என யோசித்தார். அப்போது தான், சமூக நோக்கைவிட வர்த்தக நோக்கு முக்கியமானது என்பதை உணர்ந்து கொண்டார். இதனையடுத்து, தனது உத்தியை மாற்றி அமைத்தார்.

நிதி கோரிக்கையை முன் வைக்கும் போது, இந்த திட்டத்தின் சமூக பலனோடு, வர்த்தக நிறுவனங்களுக்கு ஏற்படக்கூடிய லாபத்தையும் முக்கிய அம்சமாக குறிப்பிட்டார். உணவு வீணாவது ஒரு பிரச்னையாக இருப்பதை புரிய வைத்தவர், வீணாகும் உணவை உரிய மக்களிடம் சேர்க்கும் சேவை மூலம், வர்த்தக நிறுவனங்களுக்கு கிடைக்கக் கூடிய பலன்களை எடுத்துரைத்தார். வீணாகும் உணவை அப்புறப்படுத்த நிறுவனங்கள் தனியே செலவிட வேண்டியதில்லை என்பதோடு, இந்த தொகையை வரிச்சலுகைக்காக கணக்கு காண்பிக்கலாம் எனத் தெரிவித்தார்.

ஆரம்ப சவால்

பல நிறுவனங்கள் வீணாகும் உணவை அப்புறப்படுத்த நிறைய செலவு செய்து கொண்டிருந்தன. இந்த உணவை தொண்டு நிறுவனங்கள் மூலம் விநியோகிக்கலாம் என்றும் தெரிவித்தார். ஆக, உணவு வீணாவது தடுக்கப்படுவதோடு, நிறுவனங்களுக்கு செலவும் மிச்சமாவதை உணர்த்தினார். அதே நேரத்தில் பசித்த உள்ளங்களுக்கு பலன் கிடைப்பதையும் சுட்டிக்காட்டினார். உணவு டெலிவரி செயலிகள், ரெஸ்டாரண்ட்களில் இருந்து உணவை தருவித்துக்கொள்ள வழி செய்வது போலவே, வீணாக கூடிய உணவை பசித்தவர்களுக்கு அளிக்கும் டெலிவரி சேவையாக அவரது நிறுவன சேவை அமைந்திருந்தது. அதே நேரத்தில், மிச்சமாகும் உணவை பெறுவதிலும், அந்த உணவு முறையாக விநியோகிக்கப்படுவதையும் சிறப்பாக நிர்வகிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கினார். இது ரெஸ்டாரண்ட் உள்ளிட்ட நிறுவனங்களை ஈர்த்தது.
அதே போல, விமான நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள் போன்றவையும் இந்த திட்டத்தில் இணைவதற்கு ஏற்றவை என்பதை தெரிந்து கொண்டு தனது வாடிக்கையாளர்களை விரிவாக்கினார்.

இந்த சேவை ஏற்படுத்தி வரும் தாக்கத்தையும், பயனாளிகள் அனுபவம் மூலம் புரிய வைத்தார். இந்த செயல்களால் குட்அர் சேவைக்கான வரவேற்பு அதிகரித்தாலும், நிறுவன இலக்கிற்கு அதன் ஊழியர் பலம் போதாமலே இருக்கிறது. எனவே நிறுவனத்தை மேலும் விரிவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இதற்கான சவால்களை ஊக்கத்துடன் எதிர்கொண்டு வருகிறார்.

உணவு சேவை நிறுவன யோசனையை அவர் முன்வைத்தபோது துவக்கத்தில் பலரும் ஆதரிக்கவில்லை. இந்த யோசனை செயல்படாது என்றே பலரும் தெரிவித்தனர். ஆனால் இந்த நிராகரிப்புகளால் துவண்டு விடாமல் இவர்கள் சொல்வது தவறு என புரிய வைக்கும் உத்வேகத்துடன் ஜாஸ்மின் செயல்பட்டார். இந்த உறுதியே குட்அர் செயலியை இன்று சமூக நோக்கிலான முன்னோடி செயலிகளில் ஒன்றாக நிலை நிறுத்தியிருக்கிறது.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்