Published : 28,Mar 2022 08:12 AM
மும்பை அணியின் கேப்டனுக்கு 12 லட்சம் அபராதம் விதிப்பு! ஏன் தெரியுமா?

நடப்பு ஐபிஎல் சீசனின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளில் விளையாடின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை 177 ரன்களை எடுத்தது. 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது.
32 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது டெல்லி. தொடர்ந்து 104 ரன்கள் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது டெல்லி அணி. பின்னர் அந்த அணிக்காக வெற்றிக் கூட்டணி அமைத்தனர் அக்சர் படேல் மற்றும் லலித் யாதவ். இருவரும் 75 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன் பலனாக டெல்லி வென்றது.
வெற்றிக் கோட்டுக்கு அருகே சென்ற மும்பை அணி அக்சர் - லலித் கூட்டணியால் திகைத்து நின்றது. அவர்களை கட்டுப்படுத்த ஒவ்வொரு பந்துக்கும் ஃபீல்ட் செட்-அப்பை மாற்றிக் கொண்டே இருந்தார் மும்பை அணியின் கேப்டன் ரோகித். அதனால் குறிப்பிட்ட நேரத்தில் முடிய வேண்டிய ஆட்டம் கூடுதலாக நீண்டது. ஆட்டம் முடிந்ததும் ஸ்லோ-ஓவர் ரேட் காரணமாக 12 லட்ச ரூபாய் பெனால்டி (அபராதம்) விதிக்கப்பட்டது. இந்த சீசனில் ஸ்லோ-ஓவர் ரேட்டுக்காக முதன் முதலில் அபராதம் செலுத்தும் கேப்டனாகி உள்ளார் ரோகித்.