Published : 27,Mar 2022 09:06 AM

கேப்டனாக முதல் போட்டியையே தோல்வியோடு தொடங்கியிருக்கும் ஜடேஜா - சிஎஸ்கே தோற்றது எப்படி?

Jadeja-who-started-his-first-match-as-captain-with-a-defeat--How-did-CSK-lose

'கேப்டனாக' தோனி இல்லாமல் ஜடேஜா தலைமையில் முதல் போட்டியை சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடி முடித்திருக்கிறது. சி.எஸ்.கே.வின் முழுநேர கேப்டனாக தன்னுடைய முதல் போட்டியை ஜடேஜா தோல்வியுடனேயே தொடங்கியிருக்கிறார். சிஎஸ்கேவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வீழ்த்தியிருக்கிறது.

ஐ.பி.எல் 15 வது சீசனின் தொடக்க போட்டியாக அமைந்த இந்த ஆட்டம் மும்பையின் வான்கடே மைதானத்தில் நடந்திருந்தது. 'Batting Paradise' என மேத்யூ ஹைடனின் கணீர் குரலில் பிட்ச் ரிப்போர்ட் ஒலிக்க ஆட்டம் தொடங்கியிருந்தது. கடைசியாக சென்னையும் கொல்கத்தாவும் இதே வான்கடே மைதானத்தில் ஆடியபோது கூட அந்த ஆட்டம் 200+ ஸ்கோரை கொண்ட ஆட்டமாகவே அமைந்திருந்தது.

பேட்ஸ்மேன்களின் சொர்க்கப்புரி என ஹைடன் உதிர்த்த வார்த்தைகளுக்கு ஏற்பவே கொல்கத்தா அணியின் புதிய கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயர் டாஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்திருந்தார். எவ்வளவு பெரிய டார்கெட்டாக இருந்தாலும் இந்த பிட்ச்சில் அதை சேஸ் செய்துவிட முடியும் என்ற நம்பிக்கை ஒரு பக்கமும் இரண்டாவதாக பந்துவீசும் அணி பனியின் தாக்கத்தினால் பாதிக்கப்படும் என்கிற கணிப்பும் ஸ்ரேயாஸின் முடிவிற்கு காரணமாக அமைந்தது.

image

சென்னையுமே பேட்டிங்கையே பெரிதாக நம்பி வலுவான பேட்டிங் லைன் அப்போடு களமிறங்கியது. அணியின் 11 வீரர்களில் 9 பேர் நன்றாக பேட்டிங் ஆடக்கூடியவர்களாகவே இருந்தனர். சிவம் துபேவுக்கு பதில் இன்னொரு முழுமையான இளம் வேகப்பந்து வீச்சாளரை தேர்வு செய்திருக்க முடியும். ஆனால், சிவம் துபேவின் பேட்டிங்கை மனதில் வைத்தும் மொயீன் அலி செய்து கொடுத்ததை இவராலும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையிலும் துபேவை தேர்வு செய்திருந்தனர். அதேமாதிரிதான், மிட்செல் சாண்ட்னரின் தேர்வுமே. ஏற்கனவே ஒரு இடதுகை ஸ்பின்னராக ஜடேஜா இருக்கும்போது மிட்செல் சாண்ட்னரும் எதற்கு? இளம் வீரரான மஹீஸ் தீக்சனாவை டிக் அடித்திருக்கலாமே? இங்கே சாண்ட்னரின் பௌலிங்கை விட ஒரு ஆல்ரவுண்டராக அவருடைய பேட்டிங்கையும் மனதில் வைத்தே ப்ளேயிங் லெவனில் சேர்த்திருந்தனர்.

இவ்வளவு வலுவாக 9 பேட்டர்களை கொண்ட அணியை வைத்துக்கொண்டு பேட்டிங்கிற்கு சாதகமான ஒரு மைதானத்தில் சென்னை அணி 20 ஓவர்களில் 131 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறது. சென்னையின் பேட்டிங் ஏன் பெரிதாக எடுபடவில்லை? எங்கே தவறு நடந்தது?

இதற்கான காரணத்தை அறிய நாம் இரண்டாண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும். 2020 ஆம் ஆண்டின் ஐ.பி.எல் தொடரில் சென்னை அணி கடுமையாக சொதப்பி முதல் முறையாக ப்ளே ஆஃப்ஸ் கூட செல்லாமல் வெளியேறியிருந்தது. அந்த சீசனில் ஒவ்வொரு தோல்விக்கு பிறகுமே Post Match Presentation-களில் தோனி ஒரு விஷயத்தை குறிப்பிட்டு பேசியிருப்பார். 'எங்களுக்கு ஒரு மொமண்டமே கிடைக்கவில்லை. ஓப்பனிங் மிடில் ஆர்டர் எங்கேயும் ஒரு மொமண்டம் கிடைக்கவில்லை' என பேசியிருப்பார். இந்த பிரச்சனை கடந்த சீசனில் சரி செய்யப்பட்டதால்தான் சென்னை அணி சாம்பியன் பட்டத்தையும் வென்றிருந்தது. இப்போது இந்த பிரச்னை மீண்டும் தலைதூக்கியிருப்பதால்தான் கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியிலும் சென்னை தோற்றிருக்கிறது.

image

ஓப்பனிங்கில் ஒரு அதிரடியான மொமண்டம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், நேற்றைய போட்டியில் ஓப்பனர்களான ருத்துராஜ் கெய்க்வாட் டக் அவுட்டும் டெவான் கான்வே 3 ரன்களிலும் அவுட் ஆகியிருந்தனர். ஓப்பனர்கள் தவறவிட்ட அந்த மொமண்டமை உருவாக்கி கொடுக்கும் பொருட்டு ராபின் உத்தப்பா கொஞ்சம் நன்றாக ஆடினார். இரண்டு சிக்சர்களையும் இரண்டு பவுண்டரிக்களையும் அடித்திருந்தார். ஆனால், அவரும் நீண்ட நேரம் நிலைத்திருக்கவில்லை. செல்டன் ஜாக்சனால் அட்டகாசமாக ஸ்டம்பிங் செய்யப்பட்டார். உத்தப்பாவின் ஆட்டம் கொஞ்சம் உந்துதலை கொடுத்த போதும் அதை பற்றிக் கொண்டு அடுத்தடுத்த வீரர்கள் ஸ்கோரை உயர்த்த முனையவில்லை. அம்பத்தி ராயுடு மற்றும் சிவம் துபே இருவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை விட்டனர். தோனி சொன்ன அந்த மொமண்டம் அதல பாதாளத்தில் பயணிக்க தொடங்கியது.

ஜடேஜாவும் தோனியும் கைக்கோர்த்த பிறகுமே கூட நீண்ட நேரமாக சென்னைக்கு அந்த மொமண்டம் கிடைக்கவே இல்லை. 7.3 வது ஓவருக்கு பிறகு 15.3 வது ஓவரிலேயே சென்னை அணி ஒரு பவுண்டரியை அடித்திருந்தது. 47 பந்துகளுக்கு பிறகு அடிக்கப்பட்ட பவுண்டரி அது. இந்த பவுண்டரிக்கு பிறகுதான் சென்னை அணிக்கு சாதகமான சூழல் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட தொடங்கியது. தோனி விரும்பிய அந்த மொமண்டமை தோனியே உருவாக்க தொடங்கினார்.

தொடக்கத்தில் தோனி அவ்வளவு சிறப்பாக ஆடியிருக்கவில்லை. காரணம், வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரைன். வருண் சக்கரவர்த்திக்கு எதிராக இதற்கு முன் ஆடிய மூன்று போட்டிகளிலுமே அவருடைய கூக்ளிக்கு ஸ்டம்பை பறிகொடுத்தே தோனி அவுட் ஆகியிருக்கிறார். இத்தனை சீசன்களாக நரைனுக்கு எதிராக தோனி ஒரு பவுண்டரியை கூட அடித்ததில்லை. இந்த தடுமாற்றமெல்லாம் இந்த போட்டியிலுமே தொடர்ந்திருந்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக இந்த போட்டியில் இந்த இருவரிடமுமே தோனி விக்கெட்டை விடாமல் தப்பித்தார். இதன் விளைவாக கடைசி வரை அவரால் நின்று ஆட முடிந்தது.

ரஸல் மற்றும் சிவம் மவி வீசிய கடைசி 3 ஓவர்களில் பவுண்டரியும் சிக்சருமாக வெளுத்துவிட்டார். இந்த 3 ஓவர்களில் மட்டும் 47 ரன்கள் வந்திருந்தது. இந்த 47 ரன்களில் 35 ரன்களை தோனியே எடுத்திருந்தார். ரஸல் வீசிய இரண்டு ஓவர்களில் 5 பவுண்டரிகள் சிவம் மவி வீசிய 19 வது ஓவரில் ஒரு சிக்சர் மற்றும் பவுண்டரி என சுழன்றடித்து கடந்து இரண்டு சீசன்களாக அடித்திடாத அரைசதத்தை இங்கே அடித்து ரசிகர்களை குதூகலப்படுத்தினார். கடைசி 3 ஓவர்களில் கிடைத்த இந்த மொமண்டமால் சென்னை அணி 20 ஓவர்களில் ஓரளவுக்கு போட்டியளிக்கும் விதமாக 131 ரன்களை எடுத்தது.

தோனியோடு ஜடேஜாவும் கூட்டு சேர்ந்து அடித்திருந்தால் 150 ரன்களை கூட சென்னை தொட்டிருக்கும். ஆனால், ஜடேஜா வழக்கத்தை விட மெதுவாக 28 பந்துகளிலேயே 26 ரன்களை எடுத்திருந்தார்.

சென்னையின் இந்த மந்தமான பெர்ஃபார்மென்ஸிற்கு தொடக்கத்தில் இழந்த விக்கெட்டுகளே மிக முக்கிய காரணம். அதை வீழ்த்திக் கொடுத்தவர் உமேஷ் யாதவ். கடந்த இரண்டு சீசன்களாகவே உமேஷ் யாதவிற்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவே இல்லை. வெறும் 2 போட்டிகளில் மட்டுமே ஆடியிருந்தார். அதிகமான ரன்களை கொடுக்கிறார். டெத் ஓவருக்கு சரிபட்டு வரமாட்டார் என விமர்சிக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டார். இந்த போட்டியிலுமே கொல்கத்தா அணியில் பேட் கம்மின்ஸ் அல்லது டிம் சவுத்தி இருந்திருந்தால் உமேஷுக்கு வாய்ப்பு கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. அரிதாக கிடைத்த இந்த வாய்ப்பை உமேஷ் யாதவ் சரியாக பயன்படுத்திக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும்.

4 ஓவர்களை வீசி 20 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இரண்டுமே சென்னையின் வீழ்ச்சியை தொடங்கி வைத்த விக்கெட்டுகள். முதல் பந்தையே நோ-பாலாக வீசிய போதும் மீண்டு வந்து அந்த ஓவரிலேயே ருதுராஜின் விக்கெட்டை வீழ்த்தியிருப்பார். ருதுராஜ் கடந்த சீசனின் ஆரஞ்சு கேப் வின்னர். அப்படியான வீரரை அடுத்த சீசனின் முதல் போட்டியில் முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆக்குவது தரமான சம்பவமே. உமேஷ் யாதவ்வின் ஓவர்களில் பந்தும் நன்கு மூவ் ஆகியிருந்தது. இன்ஸ்விங் அவுட் ஸ்விங் என மாற்றி மாற்றி வீசி ருதுராஜை எட்ஜ் ஆக வைத்திருந்தார். ரன் எடுப்பதற்கான துடிப்பில் இருந்த கான்வேயின் எண்ணத்தை உணர்ந்து ஒரு சிறப்பான ஷார்ட் பிட்ச் டெலிவரியை வீசி அவரின் விக்கெட்டையும் காலி செய்திருப்பார்.

132 ரன்கள் என்பது அவ்வளவு பெரிய டார்கெட் இல்லை. கொத்து கொத்தாக விக்கெட்டை விடாமல் நின்றாலே சாதித்துவிடலாம் என்ற சூழலில் அதை கொல்கத்தா சரியாக செய்திருந்தது. எப்படி சென்னை அணிக்கு பேட்டிங்கில் ஒரு தொடக்க மொமண்டம் கிடைக்கவில்லையோ அதேமாதிரி பௌலிங்கிலும் அது சாத்தியப்படவே இல்லை. பவர்ப்ளேயான முதல் 6 ஓவர்களில் விக்கெட்டே இழக்காமல் கொல்கத்தா 43 ரன்களை எடுத்துவிட்டது. இந்த நல்ல தொடக்கமே ஏறக்குறைய வெற்றியை உறுதி செய்துவிட்டது. ஆடம் மில்னே, துஷார் தேஷ் பாண்டே இருவரின் பந்துவீச்சையுமே ரஹானே துவம்சம் செய்திருந்தார். வெங்கடேஷ் ஐயர் அவருக்கு சப்போர்ட்டாக நின்றிருந்தார்.

பவர்ப்ளே முடிந்தவுடனேயே ப்ராவோ சீக்கிரமாக பந்துவீச அழைத்து வரப்பட்டார். கடந்த சீசனின் இறுதிப் போட்டியிலுமே சேஸிங்கின் போது பவர்ப்ளே கொல்கத்தாவுக்கு சாதகமாக அமைய பவர்ப்ளே முடிந்த உடனேயே ப்ராவோவை தோனி கொண்டு வந்திருப்பார். வேகமாக முன்னேறிக் கொண்டிருந்த கொல்கத்தாவின் ரன்ரேட்டிற்கு கட்டையை போட்டு ப்ராவோ விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருப்பார். அது வெற்றிக்கும் காரணமாக அமைந்திருந்தது. அதே யுக்திதான் இங்கேயும் பயன்படுத்தப்பட்டது. அங்கே செய்த அதே காரியத்தை ப்ராவோ இங்கேயும் செய்தார். 4 ஓவர்களில் 20 ரன்களை மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஆனாலும், ஆட்டம் சென்னை பக்கம் திரும்பவில்லை.

ஏனெனில், அந்த இறுதிப்போட்டியில் சென்னை முதலில் பேட்டிங் செய்து 190+ ஸ்கோரை எடுத்திருந்தது. இங்கே சென்னை எடுத்திருந்தது 130+ ஸ்கோர்தான். இதனால் கொல்கத்தாவின் வெற்றியை கொஞ்சம் தள்ளிப்போட முடிந்ததே ஒழிய தடுக்க முடியவில்லை. 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா முதல் போட்டியையே வெற்றியோடு முடித்தது.

 image

சென்னையை பொறுத்தவரைக்கும் ஓப்பனர்கள் இருவருமே சொதப்பியதும் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது. ருதுராஜை பொறுத்தவரைக்கும் எப்போதும் முதல் மூன்று போட்டிகளில் சொதப்பவே செய்வார். 2020, 2021 இந்த இரண்டு சீசனிலுமே அவருடைய ரெக்கார்டுகளை எடுத்து பார்த்தால் இது தெரியும். எஞ்சின் சூடுபிடிக்க சூடுபிடிக்கவே வேகம் கூடும். அதன்பிறகே அவர் பேட் வீசும் வேகத்தில் புயல், சூறாவளி, சுனாமி எல்லாமே உருவாகும். இந்த சீசனிலும் அதையே எதிர்பார்க்கலாம். இன்னொரு ஓப்பனரான டெவான் கான்வேக்கு இதுதான் முதல் ஐ.பி.எல் போட்டி. தொடர்ச்சியாக சில வாய்ப்புகளை கொடுக்கும்பட்சத்தில் அவரும் ஜொலிக்கக்கூடிய வீரரே. மொயீன் அலி வந்துவிட்டால் பேட்டிங் பௌலிங் இரண்டுமே பலப்படும். பௌலிங்கிலும் துஷார் தேஷ்பாண்டே மாதிரியான வீரர்களுக்கு தொடர் வாய்ப்பு கொடுத்து ஊக்கப்படுத்தும்பட்சத்தில் நல்ல ரிசல்ட் கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது. இப்போதைக்கு கொல்கத்தாவிற்கு எதிரான இந்த தோல்வியை நினைத்து பெரிதாக வருந்த தேவையில்லை. எவ்வளவு சீக்கிரம் வீரர்கள் அனைவரும் தங்கள் ரோலை உணர்ந்து முழு ஈடுபாட்டுடன் ஆட தொடங்குகிறார்களோ அவ்வளவு சீக்கிரம் வெற்றிப்பாதைக்கு திரும்பிவிடலாம்.

உ. ஶ்ரீராம்

இதையும் படிக்க: “வயித்துக்குள்ள பட்டாம்பூச்சி பறக்குதே!” - காரணம் சொன்ன விராட் கோலி

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்