Published : 25,Mar 2022 02:57 PM

இந்திய பாரம்பரிய இடங்கள் 26: சத்திரபதி சிவாஜி 'டெர்மினல்'!

Indian-Heritage-Sites-26--Chhatrapati-Shivaji-Terminus

மன்னர்களின் கோட்டைகள், பேரரசர்களின் நினைவிடங்கள், 1000 ஆண்டுக்கால பழமையான கோவில்கள், இயற்கை எழில் நிறைந்த பூங்காக்கள் என பலவற்றைக் குறித்துப் பார்த்து வந்த நமக்கு, தற்போது செல்லக்கூடிய பகுதி ஆச்சர்யத்தையும், ஆர்வத்தையும் தூண்டும் விதமாக அமையும். சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம்... தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இடம். அலை அலையாய் முகமறியா மனிதர்கள். மிகப் பழமையான கட்டடம் அது. கிட்டத்தட்ட அரண்மனை போன்றதொரு அமைப்பு. இது வெறும் கட்டிடம் மட்டுமல்ல. தனது ஒவ்வொரு செங்கல்லிலும் இந்திய பாரம்பரியத்தைச் சொல்லும் கலை ஓவியம். எழுத்துகளின் மூலமாக இன்று அங்குதான் உங்களை அழைத்துச் செல்லப்போகிறேன். வாருங்கள்.... மும்பை சென்ட்ரலுக்குள் செல்வோம்!

image

மும்பை - அடையாளம்: இந்தியா என்றதும் முதலில் நினைவுக்கு வருவது பாலிவுட். அந்த பாலிவுட்டின் தெளிந்த மேடையே இருப்பது பம்பாய். கலைக்கும் புதிய கலாச்சாரத்திற்கும் அடையாளமே இந்த பம்பாய் நகரம் தான். 'பம்பாய் போனவன் பிழைத்துக் கொள்வான்' என்று சொல்லுமளவிற்கு எல்லா தொழில்களிலும் சிறந்து விளங்கும் ஒரு நகரமாக அமைந்துள்ளது. அந்நிய செலாவணி சந்தை, தேசிய பங்குச் சந்தை, தோல் தொழில், பருத்தி நிலையம், மாடலிங், கேமிங், நடனம்.. என இன்னும் பலவற்றிற்கும் பெயர்பெற்றது. விநாயகர் சதுர்த்தி மோதகம் (கொழுக்கட்டை) முதல், ஹோலி பண்டிகையின் பாங்கு பால், பாவ்பாஜி, வடா பாவ், பாஸ்மதி, மட்டன் சுக்கா, சாட் வகைகள், பானிபூரி என்று வகைவகையாய் வாய்க்கு விருந்தளிக்கும். இந்தியாவின் மிகப்பெரிய நகரம். உலகின் மிக அதிக மக்கள்தொகை நிறைந்த நகரங்களில் இரண்டாவது இடத்திலும் உள்ளது. 1996ம் ஆண்டுக்குப் பிறகு மும்பையாக அடையாளப்படுத்தப்பட்டது.

image

மும்பையின் நிறங்கள்: எந்த ஒரு இடம் பலரால் அதிகமாகக் கைப்பற்றப்பட்டதோ, எந்த ஒரு இடம் அதிக மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டதோ, எந்த ஒரு இடத்திற்காக மன்னர்கள் சண்டையிட்டு உயிர் நீத்தார்களோ, அந்த இடம் பலதரப்பட்ட கலாச்சாரத்தையும், பல்வேறு கொள்கைகளையும், பலவித மக்களையும், சிறந்த வளர்ச்சியையும் பெற்றிருக்கும். அந்த வகையில் வட இந்தியாவில் பெரும்பாலான மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு, பல மாற்றத்திற்கு உள்ளாகிய இடம் மும்பை. ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு வரத் தொடங்கிய காலத்தில், தென்பகுதியில் கோழிக்கோட்டில் ஆரம்பித்த ஐரோப்பியர்களின் குடியேற்றம், மேற்குப் பகுதியில் மும்பைக்கு வந்து முற்றுப்பெறும் எனலாம்.

image

ஏலத்திற்கு விடப்பட்ட மும்பை: வணிகத்திற்காக இந்தியா வந்த போர்ச்சுகீசியர்கள் 1534 ஆம் ஆண்டு குஜராத்தில் சுல்தானுக்கு எதிராகப் போரிட்டனர். அந்தப் போரின் இறுதியில் வென்ற போர்ச்சுகீசியர்கள், ஒப்பந்தத்தின்படி அன்றைய பம்பாய் பகுதியை ஒட்டிய தீவுகளைக் கைப்பற்றினர். அடுத்தடுத்த பகுதிகளைத் தன் வசமாக்கிய போர்ச்சுகீசியர்கள் அன்றைய பம்பாய் நகரத்தைத் தங்கள் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வந்தனர். 1661 ஆம் ஆண்டு போர்ச்சுகீசிய அரசரான நான்காவது ஜான்னின் புதல்வியான கேத்தரின் இங்கிலாந்து இளவரசரான இரண்டாம் சார்லஸை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு திருமணப் பரிசாக பம்பாய் நகரத்தை அளித்தனர் போர்ச்சுகீசியர்கள். 1660 ஆம் ஆண்டு ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியை இந்தியாவில் நிறுவிய பின், 1665 ஆம் ஆண்டு சார்லஸ் கம்பரே கூக் என்ற ஆங்கிலேயருக்கு பம்பாயில் தொழில் நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டது. 1668 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசர் வெளியிட்ட ராயல் சரத்தின் படி, ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனிக்கு, பம்பாய் நகரம் ஆண்டிற்கு 10 யூரோவிற்குக் ஏலத்தில் விடப்பட்டது. ஆக்சன் என்பவர் பம்பாயின் முதல் கவர்னராகப் பொறுப்பேற்றார். 1669 ஆம் ஆண்டு காங்கியர் என்பவர் பம்பாயில் நாணயச் சாலையையும் அச்சகத்தையும் நிறுவினார். 1673 ஆம் ஆண்டு டச்சு அரசு, பம்பாயைக் கைப்பற்ற முயற்சித்து அதில் தோற்றனர். கடற்கரையைச் சுற்றி 1682 ஆம் ஆண்டு ஒரு கோட்டை அமைக்கப்பட்டது. 1689 ஆம் ஆண்டு முகலாயர்களின் யாகூப் கான் என்பவர் பம்பாயை ஆக்கிரமித்துக் குடியேறினார். 1690 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் முகலாயர்களுக்குக் கப்பம் கட்டி இந்த இடத்தை மீட்டு எடுத்தனர். 1715 ஆம் ஆண்டு பம்பாய் மாளிகை கட்டி முடிக்கப்பட்டது. 1817 ஆம் ஆண்டு மராத்திய அரசின் கடைசி மன்னரான பாஜி ராவுடனான போருக்குப் பின்னர் பம்பாய் மாகாணம் முழுவதும் ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

image

பம்பாய் மாகாணம் என்பது ஆங்கிலேயர் காலத்தில் மிக முக்கியமானதாக அமைந்துள்ளது. இந்திய நிலப் பகுதியை மூன்று வகையாகப் பிரித்து வைத்திருந்தனர். கொல்கத்தா, பம்பாய், மதராஸ். மகாராஷ்டிரம் அன்றைய பம்பாய் மாகாணத்தின் முக்கிய பகுதியாக அமைந்திருந்தது. அதிகமான பருத்தியைச் சாகுபடி செய்து இந்த மாகாணத்திலிருந்து ஏற்றுமதி செய்ய வசதியாக ஒரு துறைமுகமும், இதற்காக ரயில் வழி பாதையும் இங்கே அமைக்கப்பட்டது. 1853ம் ஆண்டு இந்தியாவின் முதல் ரயில் பாதை பம்பாயிலிருந்து தானேஸ்வர் வரை அமைக்கப்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து இங்கிலாந்திற்கு ஏற்றுமதியாகும் பொருட்கள் இங்கு கொண்டுவந்து சேர்க்க ரயில்வே பாதைகள் நாடு முழுக்கப் பரவியது. ரயில்வே துறையின் தலைமை இடமாக பம்பாய் இருந்தது .1853 ஆம் ஆண்டு முதல் 1878 ஆம் ஆண்டு வரை போர் பந்தர் ரயில் நிலையம் முக்கிய போக்குவரத்து முனையமாக இருந்தது. அதிகப்படியான சரக்குகள் கைமாற்றம் செய்யும் இடமாக இந்த பகுதி இருந்ததால் இங்குள்ள ரயில் நிலையம் பிரம்மாண்டமான அமைப்பு கொண்டதாகத் தேவைப்பட்டது.

image

விக்டோரியா முனையம்: அதிகப்படியான ரயில்களை நிறுத்தவும் இயக்கவும் சிறந்த ஒரு இடம் தேவைப்பட்டது. இதற்காக இங்கிலாந்திலிருந்து பிரிட்டிஷ் பொறியாளர் ஃபிரடெரிக் வில்லியம் ஸ்டீவன்ஸால் ஸ்டீவன்ஸ் (Frederick William Stevens)என்பவர் வரவழைக்கப்பட்டார். 1878 ஆம் ஆண்டு தொடங்கிய இப்பணி 1887ஆம் ஆண்டு நிறைவு பெற்றது. விக்டோரியா ராணி அவர்கள் ஆட்சி புரியத் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து 1887 ஆம் ஆண்டு அவரது பெயரிலேயே 'விக்டோரியா முனையம்' என்ற பெயரில் இந்த புது ரயில் நிலையம் அழைக்கப்பட்டு வந்தது. இது லண்டனில் உள்ள செயின்ட் பாங்க்ராஸ் சர்வதேச ரயில் நிலையத்தை (St Pancras railway station) போன்றே அமைக்கப்பட்டது. கோதிக் முறையிலான கட்டட அமைப்பில் இந்த ரயில் நிலையம் அமைக்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா ஆட்சி புரிந்து வந்த மனோகர் ஜோஷியின் கீழ் அமைந்த சிவசேனா கட்சி இந்த முனையத்தின் பெயரை 'விக்டோரியா முனைய'த்தில் இருந்து 'சத்ரபதி சிவாஜி முனையம்' என்று மாற்றியது. பின்னர் 2017ஆம் ஆண்டு ஆட்சி புரிந்த பாஜக அரசை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் இந்த மையத்தின் பெயரை 'சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம்' (Chhatrapati Shivaji Maharaj Terminus) என்று மாற்றினார். அதன் பின்னர் இன்றுவரை இந்த பெயராலேயே அழைக்கப்பட்டு வருகிறது.

image

சத்ரபதி சிவாஜி மகாராஜ் தொடருந்து நிலையம்: இந்த தொடர்ந்து நிலையம் மொத்தம் 18 நடைமேடைகளைக் கொண்டது. இதில் ௧௧ நடைமேடைகள் தொலைதூர தொடருந்துகள் வந்து நிற்கவும், 7 நகர்ப்புற மெட்ரோ ரயில் சேவைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த தொடருந்து நிலையம் கட்டப்படும் போது அலங்காரத்திற்காகவும் குறியீடாகவும் ரயில் நிலையத் தாழ்வாரங்களில் விக்டோரிய அரசியின் சிலையும் ஆங்கிலேயர்களின் சிலையும் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் 1950 களில் இந்த விக்டோரியா சிலை மற்றும் மற்ற சிலைகள் இங்கிலாந்தில் உள்ள 'விக்டோரியா கார்டன்' அருங்காட்சியகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. சில சிலைகள் இடையில் திருடப்பட்டு, மற்ற நாடுகளுக்குக் கடத்தப்பட்ட கதையும் உண்டு.

image

2008ஆம் ஆண்டு தீவிரவாதிகளால் மும்பையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் இந்த தொடருந்து நிலையமும் சம்பந்தப்பட்டது. இங்கும் துப்பாக்கி சூடுகள் நிகழ்ந்து, பொது மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டது. அவர்களுக்கு நினைவு இடமும் இங்கே அமைக்கப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டு நடைமேடைகளில் ஆண்களுக்கான 58 படுக்கைகளும், பெண்களுக்கான 20 படுக்கை வசதியும் கொண்ட குளிரூட்டப்பட்ட பயணிகள் தங்கும் மண்டபம் கட்டப்பட்டது. நுழைவு வாயில்களில் இங்கிலாந்தைக் குறிக்க சிங்கமும், இந்தியாவைக் குறிக்க புலியும் உருவங்களும் வைக்கப்பட்டுள்ளன. மேலும், வணிகம், விவசாயம், பொறியியல் மற்றும் அறிவியலைக் குறிக்கும் சிலைகளும் உள்ளன. சுமார் 1250க்கும் அதிகமான ரயில்களுடன் இயங்கும் இந்த ரயில் நிலையத்திற்கு ஒவ்வொரு நாளும் 30 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் வந்து செல்கின்றன.

image

யார் இந்த சத்ரபதி சிவாஜி: 1630 ஆம் ஆண்டு புனேவில், ஜூன்னாரில் உள்ள சிவனேரிக் கோட்டையில் பிறந்தார். கோட்டையில் பிஜப்பூர் சுல்தானகம் (Bijapur Sultanate), படைத் தலைவரான ஷாஜி போன்ஸ்லே என்பவரின் மகனாகப் பிறந்தார். போன்ஸ்லே வம்சத்தைச் சேர்ந்த இவர் தன் பதினைந்தாம் வயதில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். 1645ல் பிஜப்பூர் கோட்டையைக் கைப்பற்றிய இவர் பிஜப்பூர் மன்னரிடம் இருந்து டோர்னா கோட்டையைக் கைப்பற்றி மராத்திய அரசை நிறுவி, ஆட்சி புரிந்து வந்தார். 1659 ஆம் ஆண்டு பிரதாப் போரில் முகலாய அதில் ஷா படைத்தளபதியான அப்சல்கானை எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற்றார். மலைகளும் அதில் அமைந்துள்ள கோட்டைகளும் தான் நாட்டின் தூண்கள். அவற்றைக் கைப்பற்றினால் சிறந்த ஆட்சியை நிறுவ முடியும் என்று நம்பியவர் சிவாஜி. அதனால் அடுத்தடுத்த போர்களை மேற்கொண்டார். 1660 ஆம் ஆண்டு கோல்ஹாபூர் கோட்டையைக் கைப்பற்றுவதற்காகப் போரை நடத்தினார். 1664 ஆம் ஆண்டு முகலாயர்களின் படைத்தளபதியை எதிர்த்து சூரத் நகரின் மீது போர் தொடுத்தார்.

image

1665 ஆம் ஆண்டு முகலாயர்களும் ராஜா புத்திரரான ஜெய் சிங்கும் இணைந்து மராட்டிய அரசரான சிவாஜியை எதிர்த்துப் போர் தொடுத்தனர். போரில் வென்ற சிவாஜி, புரந்தர் உடன்படிக்கை செய்து, அவர்களிடமிருந்து கைப்பற்றிய கோட்டைகளை ஜெய்சிங்கிற்கேத் திருப்பிக் கொடுத்தார். அதன்பின்னர் 1666 ஆம் ஆண்டு முகலாய பேரரசர் ஒளவுரங்கசீப் ஒரு நட்புக்கான அழைப்பை விடுத்தார். முகலாய கோட்டைக்குச் சென்ற சிவாஜியை அங்கேயே சிறைபிடித்தனர். அங்கிருந்து தப்பிய சிவாஜியும், அவரது மகனும் 1670 ஆம் ஆண்டு முகலாயர்கள் எதிர்த்துப் போரிட்டு, வென்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தார் சிவாஜி. அடுத்த 4 மாதங்களில் அடுத்தடுத்த படையெடுப்புகளால் முகலாயர்களிடமிருந்து பெரும்பகுதியை சிவாஜி கைப்பற்றினார். கொரில்லா போர் யுக்தியைப் பயன்படுத்தி மத்திய மற்றும் மேற்கு இந்தியாவின் பெரும் பகுதியை தன்னகத்தே கொண்டு ஆட்சி புரிந்து வந்தவர் சிவாஜி. பின்னர் 1680 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இவ்வுலகை விட்டுச் சென்றார். ஆனால் மராத்தியர்களின் மனதில் அளப்பறியா வீரராக குடியேறிவிட்டார். இதனால் இரண்டு நூற்றாண்டுகள் கழித்து உருவான இந்திய தேசிய சுதந்திரப் போராட்டத்தின் போதும் சிவாஜியை முன்னுதாரணமாகக் கொண்டு மராத்தியர்கள் போர் புரிந்து வந்தனர். இன்றுவரை மராத்தியர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள சிவாஜியை 'சிவாஜி மகாராஜ்' என்ற பெயரிலேயே அழைத்து வருகின்றனர். மும்பையின் அதிகப் பகுதிகளில் சிவாஜி சிலைகளும், மரியாதை நிமித்தங்களையும் காணலாம். இதனாலேயே மும்பையில் முக்கியமான தொடருந்து நிலையத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இன்று மத்திய ரயில்வேயின் தலைமை இடமாக விளங்கி வருகிறது.

image

வரலாற்று நினைவுகளுக்கும், பொருளாதார முக்கியத்துவமும் பெற்ற இந்த சத்ரபதி சிவாஜி தொடருந்து நிலையம், 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில், சிறந்த கட்டடக்கலை, பாரம்பரியம், வரலாறு என்ற பட்டியலின் அடிப்படையில் யுனெஸ்கோவின் 2 மற்றும் 4-வது விதியின் கீழ் உலக பாரம்பரிய இடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட இடங்களின் பட்டியலில் சத்ரபதி சிவாஜி தொடர்ந்து நிலையம் சேர்க்கப்பட்டது.

ஆஸ்கர் விருதுகளை அள்ளி எடுத்து வந்த ஸ்லம்டாக் மில்லியனயர் (Slumdog Millionaire)படத்தின் ஜெய் ஹோ பாடல் இந்த தொடருந்து நிலையத்தில் படமாக்கப்பட்டது. ஷாருக்கானின் சிறந்த நடிப்பில் உருவான ரா-1 (Ra.One) திரைப்படத்தின் காட்சியும் இந்த தொடருந்து நிலையத்தில் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுற்றுலாப் பயணிகளின் கவனத்திற்கு: சென்னையிலிருந்து சுமார் 1,350 கி.மீ தொலைவில் உள்ள சத்ரபதி சிவாஜி தொடருந்து நிலையம் பகுதிக்கு மும்பையிலிருந்து பேருந்து வழியாகச் செல்லலாம். சென்னையிலிருந்து ஏராளமான ரயில்கள் உள்ளன.

சத்ரபதி சிவாஜி தொடருந்து நிலையத்தைச் சுற்றிப் பார்க்க> VIRTUAL TOUR 

(உலா வருவோம்)

முந்தைய அத்தியாயம்: இந்திய பாரம்பரிய இடங்கள் 25: பீம்பேட்கா - உறங்கிக் கொண்டிருக்கும் வரலாற்றுச் சான்றுகள்!

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்