Published : 04,Sep 2017 01:03 PM

கிருஷ்ணசாமி டாக்டர் அல்ல... நோயாளி: பாலபாரதி சாடல்

Krishnasamy-is-not-a-doctor-patient--Balabharathi-Sadal

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி டாக்டர் அல்ல என்றும் அவர் நோயாளி எனவும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

நீட் தேர்வுக்கு தொடர்ச்சியாக கிருஷ்ணசாமி ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், அவர் குறித்து பாலபாரதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், "சட்டமன்றத்தில் கிருஷ்ணசாமி பேசிக் கொண்டிருந்தபோது அமைச்சர் ஒருவர் எழுந்து உங்கள் மகளுக்கு போதிய மதிப்பெண்கள் இல்லாதபோதும் முதலமைச்சரிடம் வந்து மெடிக்கலில் சேர உதவி கேட்டீர்கள். அடுத்த நிமிடமே ஜெயலலிதா மெடிக்கல் ஷீட் கொடுத்தாரே மறந்துவிட்டீர்களா எனக்கேட்க.., அப்போது கிருஷ்ணசாமி நான் மறக்கவில்லை. அதற்காக இப்போதும் நன்றி கூறுகிறேன் எனக்கூறி முதலமைச்சரைப் பார்த்து வணக்கம்போட, இந்த வணக்கத்தை வேறு எங்காவது போடுங்கள் என்பதுபோல் வெடுக்கென்று முதலமைச்சர் முகத்தை திருப்பிக்கொள்ள.. கிருஷ்ணசாமியின் சுயநலம் அப்போது சட்டமன்றத்தின் மேஜை மீது பொத்தென்று விழுந்தது. தலித் குழந்தைக்கு அத்தகைய உதவி பெற்றதில் தவறே இல்லை. ஆனால் இப்படி புறவாசல்வழியாக உதவியைப் பெற்றுக்கொண்டவர் தமது மகளுக்கு ஒருநீதி அனிதாவுக்கு இன்னொரு நீதி என முழங்கி வருவதுதான் வேதனை. தோழர் பிரின்சு, எம்எல்ஏ சிவசங்கர் மீது வீண்பழியை சுமத்துகிறார்" என பதிவிட்டிருந்தார். இந்த விஷயத்தை பாலபாரதி தனது பேட்டியிலும் தெரிவித்திருந்தார்.

பாலபாரதியின் கருத்து குறித்து பதிலளித்த கிருஷ்ணசாமி, "நான் சட்டமன்றத்தில் பாலபாரதியை பார்த்தே இல்லை" என கூறினார். 
ஆனால் அதற்கும் பதிலடி கொடுத்த பாலபாரதி, " கிருஷ்ணசாமியை இதுநாள் வரை டாக்டர் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அவர் டாக்டர் அல்ல நோயாளி.. மதவெறி பிடித்த நோயாளி" என கூறினார்.

இதனிடையே கிருஷ்ணசாமி குறித்த பதிவை ஃபேஸ்புக்கில் பாலபாரதி நீக்கி விட்டதாக கூறப்பட்டது. இது குறித்து கருத்துத்துப் பதிவு செய்துள்ள பாலபாரதி "கிருஷ்ணசாமி குறித்த என் பதிவை நீக்கிவிட்டதாக வதந்தி பரப்புகிறார்கள். ஆனால் அது உண்மை அல்ல. வானமே இடிந்து விழுந்தாலும் நீக்கமாட்டேன். உள்ளே இருக்கும் உளவுத்துறைக்கும் மற்றவர்களுக்கும் சொல்லிக்கொள்கிறேன். கிருஷ்ணசாமியை அடக்கி வாசிக்கச் சொல்லுங்கள்" என தெரிவித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்