மேற்குவங்கத்தில் 8 பேர் எரித்துக்கொலை: சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மேற்குவங்கத்தில் 8 பேர் எரித்துக்கொலை: சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
மேற்குவங்கத்தில் 8 பேர் எரித்துக்கொலை: சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மேற்கு வங்கத்தில் பிர்பும் மாவட்டத்தில் 8 பேர் தீ வைத்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சிபிஐ விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் ராம்புராட் பகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து தலைவர் பாதுஷேக் என்பவர் திங்கட்கிழமை இரவு கொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள போக்டுய் கிராமத்தில் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் 2 குழந்தைகள் உட்பட 8 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். பிர்பும் கலவரம் கொடூரமானது என்று அம்மாநில ஆளுநர் ஜகதீப் தன்கர் கூறினார். ஆளுநரின் கருத்து தேவையற்றது என்று மம்தா கருத்து தெரிவித்தார்.

இதனிடையே, பிர்பும் கலவரம் தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. கலவரம் நடந்த இடத்தில் மாவட்ட நீதிபதி முன்னிலையில், 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்றும் 8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட இடத்தில் இருந்து, டெல்லியில் உள்ள மத்திய தடய அறிவியல் ஆய்வகக் குழுவினர், உடனடியாக ஆய்வுக்காக தடயங்களை சேகரிக்க வேண்டும் என்றும் நேற்று உத்தரவிட்டனர்.

இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது இந்த தீவைப்பு சம்பவத்தை சிபிஐ விசாரிக்க நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். ஏற்கெனவே சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வரும் நிலையில் தற்போது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது கொல்கத்தா உயர் நீதிமன்றம். முதற்கட்ட விசாரணை அறிக்கையை வரும் ஏப்ரல் 7 ஆம் தேதிக்குள் சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com