Published : 04,Sep 2017 11:00 AM
நீட் தேர்வுக்கு அடிப்படை காரணமே ஸ்டாலின் தான்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு

நீட் தேர்வுக்கு அடிப்படை காரணமே ஸ்டாலின் தான் என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நீட் தேர்வை கொண்டுவந்ததே திமுக - காங்கிரஸ் தான். இதனை மக்கள் மறந்துவிடுவார்கள் என்ற நினைப்போடு அரசியலாக்க வேண்டும் என ஸ்டாலின் நினைத்தால் நிச்சயம் அவரை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இதற்கு அடிப்படை காரணமே ஸ்டாலின் தான். எனவே அவர்கள் ஒருங்கிணைந்து போராடுவதற்கு தார்மீக உரிமையும், தகுதியும் இல்லை. வீரமிக்க தமிழ் மண்ணில் பிறந்த அன்பு சகோதரியின் மரணம் வேதனைக்குரியதாகவும், எல்லோரும் கவலைப்படும் வகையிலும் இருக்கிறது. எனவே தான் முதலமைச்சர் அனைத்து உதவிகளையும் செய்வதாகக் கூறினார். தற்போது குடும்பத்தினர் கோபமாக இருந்தால் கூட நிச்சயமாக அனைத்து உதவிகளையும் பெற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று ஜெயக்குமார் கூறினார்.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றும் நீட் தேர்வினால் தனது மருத்துவ கனவு கலைந்த துயரத்தில் அரியலூர் மாணவி தற்கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்நிலையில் நீட் தேர்வுக்கு ஸ்டாலின் தான் அடிப்படை காரணம் என ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.