[X] Close

ஐபிஎல் 2022 : அறிமுக தொடரில் சோபிக்குமா குஜராத் டைட்டன்ஸ்? - ஓர் முழு அலசல்

விளையாட்டு,சிறப்புக் களம்

IPL-2022-Gujarat-Titans-Squad-And-Player-Analysis-Strengths-and-Weakness

ஐபிஎல் 15வது சீசனில் புதிதாக களமிறங்கும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியின் பலம், பலவீனம் உள்ளிட்ட முழு விவரங்களை பார்ப்போம்.

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 26ம் தேதி தொடங்கவுள்ளது. இம்முறை 8 அணிகளுடன் புதிதாக 2 அணிகள் என மொத்தம் 10 அணிகள் களம் காண்கின்றன. அந்த வகையில் இந்த ஐபிஎல் தொடரில் புதிதாக விளையாடவுள்ள ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியின் முழு விவரத்தையும் பார்க்கலாம்.

பலம்

மெகா ஏலத்திற்கு முன்பாக ஹர்திக் பாண்டியா, ரஷீத் கான் மற்றும் ஷுப்மன் கில் ஆகிய மூவரையும் வாங்கி, அதிரடி ஆல்ரவுண்டரான பாண்டியாவை கேப்டனாக நியமித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. மும்பை இந்தியன்ஸ் அணியின் மேட்ச் வின்னராக ஜொலித்து வந்த பாண்டியாவின் கேப்டன்சியில் ஆடும் குஜராத் டைட்டன்ஸ் அணி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. குஜராத் அணி பெரிதும் நம்பிக்கை வைத்து பாண்ட்யாவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கியுள்ளது. இதனை அவர் சரியாக பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த அணியின் பயிற்சியாளர்களாக ஆஷிஸ் நெஹ்ரா, கேரி கிறிஸ்டன் ஆகியோர் இருப்பது பெரும் பலமாக அமையும்.  

image

லக்னோ அணியைப் போன்றே குஜராத் டைட்டன்ஸ் அணியிலும் ஆல்ரவுண்டர்கள் நிறைந்திருக்கின்றனர். குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஷுப்மன் கில் மற்றும் விருத்திமான் சாஹா ஆகிய இருவரும் இறங்குவார்கள். பேட்டிங்கில் இவ்விருவரும் பெரும்பாலும் திருப்திகரமான தொடக்கத்தை தந்துள்ளனர். நடப்பு ஐபிஎல் சீசனில் விலகுவதாக அறிவித்த ஜேசன் ராய்க்கு பதிலாக ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் இடம்பிடித்துள்ளார். 20 வயதாகும் ரஹ்மமுல்லா குர்பாஸ் வளர்ந்து வரும் டி20 ஸ்பெஷலிஸ்ட். மேலும் டி20 போட்டிகளில் 150-க்கும் மேல் ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார். கேரியர் டி20 தொடர்களில் 69 போட்டிகளில் விளையாடியுள்ள குர்பாஸ் 113 சிக்ஸர்களையும் விளாசியுள்ளார். அதுமட்டுமல்ல, குர்பாஸ் ஒரு விக்கெட் கீப்பராகவும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்.

சர்வதேச போட்டிகளில் விளையாடாத, பேட்டிங்கில் ஹிட்டர் ஆக அறியப்படும் அபினவ் சதராங்கனி இம்முறை ஐபிஎல்லில் ரன் மழை பொழிவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மெகா ஏலத்தில் அபினவ் சதராங்கனியின் அடிப்படை விலை ரூ.20 லட்சம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், கடும்போட்டி போட்டு குஜராத் அணி அவரை ரூ.2.60 கோடிக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.

image

மிடில் வரிசையில் ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர் ரன்வேட்டை நடத்தினால் குஜராத் அணியின் பேட்டிங் அசுர பலம் அடையும். முகமது ஷமி, ரஷித் கான், லாக்கி ஃபெர்குசன், அல்ஸாரி ஜோசஃப்  போன்ற உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் பவுலிங்கில் அமர்க்களப்படுத்த காத்திருக்கின்றனர்.  இவர்களுடன் கேப்டனான ஹர்திக் பாண்டியாவும் பந்து வீசுவார் என்று உறுதியாக நம்பலாம். சாய் கிஷோர், ஜெயந்த் யாதவ், ராகுல் டெவாட்டியா போன்ற சுழலில் அச்சுறுத்தக்கூடியவர்களும் குஜராத் அணிக்கு பக்கபலமாக இருக்கிறார்கள்.

பலவீனம்

டாப்-ஆர்டர் பேட்டிங் தான் குஜராத் அணிக்கு சற்று பலவீனமாக பார்க்கப்படுகிறது. தொடக்க ஆட்டக்காரராகவும், அதிரடி வீரராகவும் அறியப்பட்ட ஜேசன் ராய் விலகல் குஜராத் டைட்டன்ஸ்க்கு பின்னடைவாக கருதப்படுகிறது. ஷுப்மன் கில், விருத்திமான் சாஹா, அபினவ் சதராங்கனி என்று பேட்டிங் படையில் தொய்வு இருப்பது போல் தெரியவில்லை என்றாலும், ருத்ரதாண்டவமாடும் அளவிற்கு பெரிய ஹிட்டர் யாரும் இல்லை. எனவே டாப் ஆர்டர், மிடில் ஆர்டரில் நிலையான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் பேட்டிங் வரிசையை கட்டமைப்பது குஜராத் அணிக்கு சற்று சவாலாகவே இருக்கும். மேலும் பந்துவீச்சில் முகம்மது ஷமியை அந்த அணி மலைபோல் நம்பி இருக்கிறது. அவரைத் தவிர்த்து இறுதிக்கட்டத்தில் கச்சிதமாக பந்து வீசக்கூடிய பவுலர்கள் இல்லை. 

image


Advertisement

இந்திய கிரிக்கெட் அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக தற்போது மாற்று ஆல்ரவுண்டருக்கான தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் அவர் பந்துவீச்சு, பேட்டிங் இரண்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் பாண்டியா அசத்தும் பட்சத்தில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

image

குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்கள்: ஹர்திக் பாண்டியா, ரஷித் கான், ஷுப்மான் கில், முகமது ஷமி, லாக்கி பெர்குசன், அபினவ் சதராங்கனி, ராகுல் டெவாடியா, நூர் அகமது, ஆர் சாய் கிஷோர், டொமினிக் டிரேக்ஸ், ஜெயந்த் யாதவ், விஜய் சங்கர், தர்ஷன் நல்கண்டே, யாஷ் தயாள், அல்சார்ரி ஜோசப், பிரதீப் சங்வான் ஜோசப், மில்லர், விருத்திமான் சாஹா, மேத்யூ வேட், குர்கீரத் சிங், வருண் ஆரோன், பி சாய் சுதர்ஷன், ரஹ்மானுல்லா குர்பாஸ்.

இதையும் படிக்கலாம்: நெருங்கும் ஐபிஎல் 2022 : லக்னோ அணியின் பலம், பலவீனம் இதுதான் - ஒரு விரிவான அலசல்!

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close