Published : 20,Mar 2022 02:51 PM

நெருங்கும் ஐபிஎல் 2022 : லக்னோ அணியின் பலம், பலவீனம் இதுதான் - ஒரு விரிவான அலசல்!

LSG-Team-Preview-IPL-2022-With-a-Bag-Full-of-All-rounders-Lucknow-Set-To-Begin-Their-IPL-Journey

கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் பலம் மற்றும் பலவீனம் உள்ளிட்ட முழு விவரத்தையும் பார்க்கலாம்.

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல்  தொடர் வரும் மார்ச் 26ம் தேதி தொடங்கவுள்ளது. இம்முறை 8 அணிகளுடன் புதிதாக 2 அணிகள் என மொத்தம் 10 அணிகள் களம் காண்கின்றன. அந்த வகையில் இந்த ஐபிஎல் தொடரில் புதிதாக விளையாடவுள்ள கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்  அணி மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. அதன்படி அந்த அணியின் முழு விவரத்தையும் பார்க்கலாம்.

image

பலம்

ஐபிஎல் மெகா ஏலத்தில் சிறப்பாக செயல்பட்டு சிறந்த வீரர்களை வாங்கி வலுவான அணியை கட்டமைத்ததில் முக்கியமான அணிகளில் ஒன்று லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ். கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ அணி, இந்த ஐபிஎல் தொடரில் பந்துவீச்சில் பலம் வாய்ந்த அணியாக வலம்வரும் என உறுதியாக தெரிகிறது. ரவி பிஷ்னோய், அவேஷ் கான்  உள்ளிட்ட பந்து வீச்சாளர்கள் எதிரணிகளுக்கு  சிம்ம சொப்பனமாய் திகழ்வார்கள். குறிப்பாக கடந்த ஐ.பி.எல்.லில் டிரெண்ட் ஆன அவேஷ் கானை லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் போட்டிப் போட்டு 10 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இளம் ரிஸ்ட் ஸ்பின்னரான ரவி பிஷ்னோயை ரூ.4 கோடிக்கும் வாங்கியிருக்கிறது லக்னோ அணி. இவர்களைத் தவிர துஷ்மந்த சமீரா, தீபக் ஹூடா, மயங்க் யாதவ், அங்கித் சிங் ராஜ்பூத், கரண் ஷர்மா ஆகியோரது பந்துவீச்சும் அணிக்கு அசுர பலமாக உள்ளது

மேலும் ஆல்-ரவுண்டர்கள் ஆதிக்கம் செலுத்தும் அணியாகவும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது லக்னோ அணி. ஜேசன் ஹோல்டர், க்ருனால் பாண்டியா, ஷாபாஸ் நதீம், கைல் மேயர்ஸ், மார்கஸ் ஸ்டோய்னிஸ் , கிருஷ்ணப்பா கவுதம் என சமகாலத்தின் சிறந்த ஆல்-ரவுண்டர்ககளுக்கு அந்த அணியில் பஞ்சமில்லை. குவிண்டன் டிகாக், மணிஷ் பாண்டே போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பதால் அந்த அணிக்கு கூடுதல் பலமாக அமைந்துவிட்டது. இதன் காரணமாக தனது முதல் தொடரிலேயே லக்னோ அணி ஐபிஎல் கோப்பையை தட்டித்தூக்கினால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

image

தவிர, ஐபிஎல் கோப்பையை 2 முறை கொல்கத்தா அணிக்கு வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் கவுதம் கம்பீர் தான், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் ஆலோசகராக செயல்படுகிறார். ஐ.பி.எல்.லில் கோப்பையை வெல்லும் வித்தையை அறிந்த கவுதம் கம்பீரின் இருப்பு லக்னோ அணிக்கு பெரும் பலமாக அமையும்.

பலவீனம்

லக்னோ அணியின் பவுலிங் வலுவாக இருந்தாலும், பேட்டிங்கில் பலவீனம் வெளிப்படலாம் எனத் தெரிகிறது. கே. எல். ராகுல், குயிண்டன் டி காக் தவிர பேட்டிங்கில் அனுபவசாலிகள் அதிகம் பேர் இல்லாத குறையை சரி செய்ய வேண்டியதே லக்னோ அணிக்கு உள்ள மிகப்பெரிய சவாலாகும். அவருக்குப் பின் எவின் லூயிஸ், மணீஷ் பாண்டே ஆகியோர் பேட்டிங்கில் சராசரியாகவே இருக்கிறார்கள். இவர்களுக்குப் பின் ஆல்-ரவுண்டர்களை தான் பேட்டிங்கில் மலைபோல் நம்பி இருக்கிறது லக்னோ அணி. மனன் வோஹ்ரா, மொஹ்சின் கான், ஆயுஷ் படோனி ஆகியோர் திறமையான பேட்டர்கள் என்றாலும் ஆட்டத்தை புரட்டிப்போடும் அளவிற்கு சக்தி படைத்தவர்கள் என்று சொல்ல முடியாது. இவை எல்லாம் அந்த அணியின் பலவீனமாக கருதப்படுகிறது. எனவே முன்வரிசை பேட்ஸ்மேன்கள் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமானதாகும்.
image


மெகா ஏலத்தில் 7.5 கோடி ரூபாய்க்கு லக்னோ அணி சார்பில் எடுக்கப்பட்ட இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். ஆடும் லெவனில் மார்க் வுட் சேர்க்கப்படலாம் என தகவல் வெளியான நிலையில், அவர் தற்போது விலகியுள்ளதால் அவருக்கு பதில் புதிதாக யாரையாவது லக்னோ அணி சேர்க்க வேண்டும். மார்க் வுட் விலகியது லக்னோ அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

லக்னோ அணி வீரர்கள்: கே.எல். ராகுல் (கேப்டன்), ரவி பிஷ்னோய், மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, ஜேசன் ஹோல்டர், மனிஷ் பாண்டே, குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), க்ருனால் பாண்டியா, அவேஷ் கான், அங்கித் சிங் ராஜ்பூத், கிருஷ்ணப்ப கவுதம், துஷ்மந்த சமீரா, ஷாபாஸ் நதீம், மனன் வோஹ்ரா, மொஹ்சின் கான், ஆயுஷ் படோனி, கைல் மேயர்ஸ், கரண் ஷர்மா, எவின் லூயிஸ், மயங்க் யாதவ்.

லக்னோ அணியின் போட்டி அட்டவணை இதோ..

image

இதையும் படிக்கலாம்: கோலி உடனான சண்டை ஏன்? மவுனம் கலைத்த கம்பீர்!


சற்று முன்எடிட்டர் சாய்ஸ்