Published : 20,Mar 2022 07:31 AM
வங்கக் கடலில் உருவாகிறது அசானி புயல் - அந்தமான் நிகோபர் தீவுகளில் பலத்த மழை

வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, அந்தமான் நிகோபர் தீவுகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாகவும் வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு அசானி என பெயரிடப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் நிகோபர் தீவுகளை நோக்கி நகர்ந்து வருவதால், அங்கு பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால், மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறு, இந்திய கடலோர காவல்படையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். ஹெலிகாப்டர் மூலம் சென்று, நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களுக்கு அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.