Published : 19,Mar 2022 04:16 PM
வருகிறது 42 பில்லியன் டாலர் முதலீடு? - ஜப்பான் பிரதமரை இன்று சந்திக்கிறார் மோடி!

இந்தியா-ஜப்பான் உச்சிமாநாட்டிற்காக இன்று இந்தியா வருகை புரிந்துள்ள ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
14-வது இந்தியா-ஜப்பான் உச்சிமாநாடு இன்றும் நாளையும் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்ததை அடுத்து, இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா இந்தியா வந்துள்ளார். மோடி மற்றும் கிஷிடா ஆகிய இரு தலைவர்கள் நேருக்கு நேர் சந்திக்கும் முதல் மாநாடு இது. இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மறுபரிசீலனை செய்வதற்கும் வலுப்படுத்துவதற்கும், பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் இந்த உச்சிமாநாடு வாய்ப்பளிக்கும். இந்தியாவுடனான பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதை ஜப்பான் பிரதமர் கிஷிடா நோக்கமாகக் கொண்டுள்ளார் என்றும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் $42 பில்லியன் முதலீடு செய்யும் திட்டத்தை அவர் அறிவிப்பார் என்று ஜப்பான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவின் நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் அதிவேக ரயில்வேக்கு ஜப்பான் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் நிலையில் இன்று நடைபெற உள்ள சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது