Published : 18,Mar 2022 10:19 PM

மூளைக்காயம் என்றால் என்ன? எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும்? - விரிவான அலசல்

மூளைக்காயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் மார்ச் மாதம் இது. மூளைக்காயம் என்றால் என்ன? மூளைக்காயம் எத்தகைய தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தும்? மூளைக்காயம் ஏற்படாமல் எவ்வாறு காத்துக் கொள்ள முடியும்? என்று விரிவாக பார்க்கலாம்.

உலகம் முழுவதும் ஓர் ஆண்டில் உயிரிழக்கும் 1 லட்சம் பேரில் 200 பேர் மூளைக் காயத்தால் உயிரிழப்பதாகக் கூறுகிறது மருத்துவ உலகம். இது மட்டுமன்றி தீவிர உடல் குறைபாட்டை ஏற்படுத்தும் காரணிகளில் முதன்மையானதாகவும் மூளைக்காயமே உள்ளது. விபத்தால் தலைப்பகுதியில் ஏற்படும் அடியால் மூளை நரம்புகளில் பாதிப்பு ஏற்படுமாயின் அதுவே மூளைக்காயம் எனப்படுகிறது.

சாலை விபத்துகளால் மட்டுமல்ல. சாதாரணமாக வயதானோர் கீழே விழும்போதோ, குழந்தைகள் விளையாடும் போதோ, தொட்டிலில் இருந்து கீழே விழும் போதோ கூட லேசான மூளைக்காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சம் பேர் மூளைக் காயத்தால் பாதிக்கப்படுகின்றனர்.

image

குறிப்பாக 18- 44 வயதுக்குட்பட்ட ஆண்களே அதிகம் பாதிப்பை சந்தித்து உயிரிழக்கின்றனர் என்கிறது மூளை நரம்பியல் துறை. மூளைக்காயம் ஏற்படாமல் தடுக்க ஒரே வழி தலையில் அடிபடாமல் பார்த்துக் கொள்வதே என்கிறார்கள் மருத்துவர்கள். கோமா, கை கால்கள் செயலிழப்பு போன்ற தீவிர பாதிப்புகள் மட்டுமல்ல. கண்களில் இருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமாயின் கண் பார்வை முற்றிலும் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் கண் மருத்துவர்கள்.

image

லேசான தலைக்காயமாக இருந்தாலும் அதனை புறக்கணிக்கக்கூடாது. லேசான தலைக்காயத்திற்கு பின்பு குமட்டல் , வாந்தி , தலைவலி , காதில் ரத்தம் வருதல் , காதுக்குள் சத்தம் கேட்டல், மயக்கம் ஆகியவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும். குழந்தைகளாக இருக்கும்பட்சத்தில் தலையில் லேசான அடிபட்டபின் தொடர்ந்து அழுதாலோ, அசாதாரணமாக தென்பட்டாலோ உடனே மருத்துவர்களை அணுகுவதால் தொடக்கத்திலேயே பிரச்னைகளை சரிசெய்யலாம் என்பதும் மருத்துவர்கள் அறிவுரை.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்