Published : 18,Mar 2022 01:55 PM

"புடின் ஒரு கொலைக்காரர் பிறகு..." அடுக்கடுக்கான கடுமையான வார்த்தைகளை கூறி ஜோ பைடன் சாடல்

Russian-autocract-a-murderous-dictator-pure-thug-Biden-continues-his-verbal-attack-on-war-criminal-Vladimir-Putin-Top-developments

உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு நான்காவது வாரத்தை எட்டியுள்ளது. இப்போர் நிலவரம் பற்றிய சில அண்மைத் தகவல்கள் இதோ..

* உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி முழு வீச்சிலான போரை ஆரம்பித்தது. இது தொடர்பாக நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாத நிலையில் போர் 4-வது வாரமாகத் தொடர்கிறது.

* ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடினை போர் குற்றவாளி என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சித்திருந்த நிலையில், புதின் ஒரு கொலைகார சர்வாதிகாரி, மூர்க்கத்தனம் கொண்டவர் என மீண்டும் கடுமையான சொற்களால் விமர்சித்துள்ளார் ஜோ பைடன்.

* அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் கடுமையான விமர்சனத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள ரஷ்யா, 'பைடன் பேசியது மன்னிக்க முடியாத தவறான கருத்து. ஒரு நாட்டின் தலைவர் இப்படி பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. உங்கள் நாட்டின் (அமெரிக்கா) குண்டுகள் பல நாடுகளில் பல்லாயிரம் பேரை கொன்றுள்ளது என்பதை மறுக்க வேண்டாம்” என்று பதிலடி கொடுத்துள்ளது.

image

* ரஷ்யா மீது முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கடுமையான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து உள்ளதால் ரஷ்யா பொருளாதாரத்திற்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. போரை நிறுத்திக் கொள்ளாத பட்சத்தில் ரஷ்யாவுக்கு எதிராக இன்னும் பல கூடுதல் தடைகளை அறிவிக்கப்படும் என்று அமெரிக்கா வெளியுறவுத் துறை எச்சரித்துள்ளது.

* ரஷ்யாவுக்கு, உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. கீவ் நகரை கைப்பற்றுவதை இலக்காக கொண்டு முன்னேறும் ரஷ்ய வீரர்களை அவர்கள் தொடர்ந்து தாக்கி வருகின்றனர். இதனால் ரஷ்யா படை வீரர்களும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

* உக்ரைனில் உள்ள சுகாதார கட்டடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 34 பேர் காயமடைந்துள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

* ''சுகாதார கட்டங்கள் மீதான தாக்குதல்கள் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறுவதாகும். மக்களுக்கு எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் அவசர உதவிகள் மையங்களாக இருக்கும் சுகாதார கட்டடங்கள் மீதான தாக்குதல், ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள சுகாதார அமைப்புகளை மேலும் சிதைப்பதாக உள்ளது.  அதைத்தான் உக்ரைனில் நாங்கள் பார்த்து வருகிறோம்'' என உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானம் தெரிவித்துள்ளார்.   

image

* உக்ரைன் மீது தொடுத்துள்ள போரை நிறுத்த வேண்டும் என்று ஹாலிவுட் மூத்த நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர், ரஷ்யாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ''இது உங்கள் தாத்தா அல்லது உங்கள் பெரியப்பா போராடியது போல ரஷியாவைக் காப்பதற்கான போர் அல்ல. இது சட்ட விரோதமான போர்'' என அவர் விமர்சித்துள்ளார்.

* உக்ரைன் மீது படையெடுத்த விவகாரத்தில் நட்பு நாடான ரஷியாவை காப்பாற்ற சீனா முயற்சி செய்தால் அதற்கு விலை கொடுக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

* உக்ரைனில் கார்கிவ் நகருக்கு அருகே மெரேபாவில் உள்ள ஒரு பள்ளிக்கூடம், சமுதாய கூடம் மீது ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தியது. அந்த கட்டிடங்கள் மீது பீரங்கி தாக்குதல் தொடுக்கப்பட்டதில் தரைமட்டமானது. இந்த தாக்குதலில் 21 பொதுமக்கள் பலியாகி உள்ளனர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிக்க: 'அவர்கள் அப்படிதான் பயப்பட வேண்டாம்' கிரிமியாவுக்கு ஆறுதல் சொன்ன புடின்

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்