Published : 18,Mar 2022 11:36 AM
'எல்லோரும் வாங்க வீட்டை பாருங்க' தோனி எடுத்த திடீர் முடிவு - என்ன காரணம்?

ராஞ்சியின் புதல்வனான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு சொந்தமாக அந்த ஊரில் 43 ஏக்கர் பரப்பளவில் பண்ணை வீடு உள்ளது. அந்த வீட்டை ஹோலி பண்டிகை அன்று பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்க தோனி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தோனி தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் சூரத் நகரில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
17, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் பொது மக்கள் தங்களது பண்ணையை சுற்றி பார்க்கவும், அங்கு விளைவிக்கப்படும் காய்கறி மற்றும் பழங்களை வாங்கியும் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பண்ணை வீட்டில் தோனி ஸ்ட்ராபெரி, கொய்யா, பப்பாளி, தர்பூசணி, பட்டாணி, குடைமிளகாய், மீன் மற்றும் கோதுமை மாதிரியானவற்றை உற்பத்தி செய்து வருகிறார்.
ஓய்வு நேரங்களில் இந்த பண்ணையில் தனது நேரத்தை தோனி செலவிடுவது வழக்கம். இதுவரை தோனியின் நெருங்கிய நட்பு வட்டங்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கண்டுகளித்த பண்ணையை இப்போது பொது மக்களும் பார்க்க உள்ளனர். ஐபிஎல் அரங்கில் வெற்றிகளை குவித்து வரும் கேப்டன்களில் தோனி முதன்மையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.