
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கிட்டத்தட்ட செத்துவிட்டது என்று கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா விமர்சித்துள்ளது.
மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் ஜூனியர் அமைச்சர்கள் 4 பேருக்கு கேபினட் அந்தஸ்தும், புதிதாக 9 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
அமைச்சரவை விரிவாக்கத்தில் ஐக்கிய ஜனதா தளம், அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. அதேபோல், கூட்டணி கட்சியான சிவசேனாவுக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரதமர் மோடி யாரும் எதிர்பார்க்காத வகையில் அமைச்சரவை விரிவாக்கம் செய்துள்ளார்.
இந்நிலையில், சிவசேனா கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் ராவுட் கூறுகையில், “பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி காகிதத்தில் மட்டும் தான் உள்ளது. எப்பொழுதெல்லாம் பாஜகவுக்கு ஆதரவு தேவையோ அப்பொழுதுதான் எங்களது ஞாபகம் வரும். கூட்டணி கட்சிகளின் கூட்டத்திற்கு மட்டும் கூடும் ஒன்றாக மாறிவிட்டது. அதிகாரத்துக்கோ, கேபினட் பதவிக்கோ நாங்கள் ஆசைப்படவில்லை. அமைச்சரவை விரிவாக்கம் அரசியல் காரணங்களை கருத்தில் கொண்டு மாற்றப்படுகிறது. உரிய நேரத்தில் உரிய முடிவை எடுப்போம்” என்றார்.