
வரும் 4-ஆம் தேதி நடக்கும் கிரிக்கெட் போட்டி விராட் கோலிக்கு 100-வது டெஸ்ட் போட்டி ஆகும்.
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த 20 ஓவர் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி அபார பெற்றது. இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் வரும் 4-ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த போட்டி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு 100-வது டெஸ்ட் போட்டி ஆகும். 100-வது டெஸ்டில் விளையாடும் 12-வது இந்திய வீரர் கோலி ஆவார். இதற்கு முன்பு சச்சின் தெண்டுல்கர் (200 டெஸ்ட்), ராகுல் டிராவிட் (163), வி.வி.எஸ்.லட்சுமண் (134), கும்ப்ளே (132), கபில்தேவ் (131), கவாஸ்கர் (125), வெங்சர்க்கார் (116), கங்குலி (113), இஷாந்த் சர்மா (105), ஹர்பஜன் சிங் (103), வீரேந்திர ஷேவாக் (103) ஆகியோர் 100-க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருந்தனர்.
மேலும் இப்போட்டியில் விராட் கோலி 38 ரன்கள் அடிக்கும்பட்சத்தில் அவர் புதிய மைல்கல்லை எட்டுவார். கோலி 8,000 ரன்களை அடைய இன்னும் 38 ரன்கள் மட்டுமே தேவை. இதற்குமுன் இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கர், ஷேவாக், விவிஎஸ் லக்ஷ்மன் ஆகிய 5 பேர் மட்டுமே 8000 ரன்களை அடித்துள்ளனர்.
அதுமட்டுமல்ல, இந்த 38 ரன்களை முதல் இன்னிங்ஸிலேயே அடித்துவிட்டால், அதிவேகமாக டெஸ்டில் 8000 ரன்களை அடித்த 5ஆவது இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துவிடுவார். இதற்குமுன் சச்சின் 154 இன்னிங்ஸில் 8000 ரன்களை அடித்ததே சாதனையாக இருந்தது. டிராவிட் (158 இன்னிங்ஸ்), சேவாக் (160 இன்னிங்ஸ்), கவாஸ்கர் (166 இன்னிங்ஸ்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறார்கள். லக்ஷ்மனை பின்னுக்குத் தள்ளி கோலி (168 இன்னிங்ஸ்) ஐந்தாவது இடத்தைப் பிடித்து விடுவார்.
இதையும் படிக்க: தேனியில் கிரிக்கெட் ஆடிய தினேஷ் கார்த்திக் உற்சாகமுடன் பேட்டி