
உக்ரைனில் பயிலும் இந்திய மாணவர் ஒருவர், தனது செல்ல நாய் இல்லாமல் இந்தியா திரும்ப மறுத்து வருகிறார்.
உக்ரைனின் கார்கிவ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் மூன்றாமாண்டு படித்து வருபவர் ரிஷப் கவுசிக். ரஷ்ய படைகளின் தொடர் தாக்குதல் காரணமாக, அவரது வீட்டை விட்டு வெளியேறி அங்குள்ள சுரங்க அறையில் தங்கியுள்ளார். அவருடன் அவரது வளர்ப்பு நாயும் உள்ளது.
இந்நிலையில், இந்தியா திரும்புவதற்காக இன்று காலை அங்குள்ள விமான நிலையத்துக்கு கவுசிக் சென்றிருக்கிறார். அனைத்து ஆவணங்களையும் காண்பித்துவிட்டு, விமானம் ஏற சென்ற போது, அங்கிருந்த அதிகாரிகள் அவருடன் இருந்த செல்ல நாயை விமானத்தில் ஏற்ற மறுத்தனர். நாயை அழைத்து செல்வதற்கான ஆவணங்களை தரும்படி அவர்கள் கூறியுள்ளனர். உக்ரைனில் விமான நிலைய அலுவலகங்கள் ஏதும் செயல்படாத போது, தனது நாய்க்கு எவ்வாறு ஆவணங்களை பெற முடியும் என கவுசிக் வினவியிருக்கிறார். எனினும், அவரது வாதத்தை ஏற்க மறுத்த அதிகாரிகள், நாயை அங்கேயே விட்டுவிட்டு விமானம் ஏறுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால், தனது செல்ல நாயை ஆதரவின்றி விட்டுச் செல்ல மனம் வராத கவுசிக், விமானத்தில் ஏறாமல் மீண்டும் சுரங்க அறைக்கே திரும்பிவிட்டார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், "எனது செல்ல நாயை விமானத்தில் அழைத்து செல்வதற்கான ஆவணங்களை எங்கேயும் பெற முடியவில்லை. டெல்லியில் உள்ள விலங்கு நல வாரியத்திடமும், உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்திடமும் உதவி கேட்டு விட்டேன். ஆனால், எனக்கு உதவ அவர்கள் முன்வரவில்லை. என்ன நடந்தாலும், எனது நாய் இல்லாமல் இந்தியா திரும்ப மாட்டேன். எனக்கு இந்திய அரசாங்கம் தான் உதவி செய்ய வேண்டும்" எனக் கூறினார்.