
மத்திய அமைச்சரவையை மாற்றி அமைப்பதற்கு ஏதுவாக, 8 அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளனர். இவர்களது முடிவை பிரதமர் மோடி இதுவரை ஏற்கவில்லை எனத் தெரிகிறது.
திறன் மேம்பாட்டுத்துறை மற்றும் சிறுதொழில் முனைவோர் துறை இணை அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி, மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே ஆகிய இருவரும் தங்களது பதவி விலகல் கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி வைத்து விட்டனர். இதில் மகேந்திரநாத் பாண்டே, உத்தரப் பிரதேச பாரதிய ஜனதா தலைவராக நியமிக்கப்பட்டதால், மத்திய அமைச்சரவையிலிருந்து விலகியுள்ளார். இவர்கள் தவிர, மூத்தத் தலைவரும் சிறு குறு தொழில்துறை அமைச்சருமான கல்ராஜ் மிஸ்ரா, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி, வர்த்தகத் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன், நீர்வளத்துறை இணை அமைச்சர் சஞ்சீவ் பால்யான், மக்கள் நல்வாழ்வுத்துறை இணை அமைச்சர் ஃபகன் சிங் குலஸ்டே ஆகியோரும் பதவி விலக முன்வந்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 75 வயதுக்கு மேற்பட்டவர்களை மத்திய அமைச்சரவையிலிருந்து விடுவித்து விடுவது என்கிற அறிவிக்கப்படாத முடிவை பாரதிய ஜனதா மேற்கொண்டு வருவதால், கல்ராஜ் மிஸ்ரா பதவி விலகுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளையில், உமா பாரதி பதவி விலகுவதற்கு அவரது உடல்நலக் குறைபாடே காரணம் எனக் கூறப்படுகிறது. பதவி விலகும் அமைச்சர்கள் பலர் கட்சிப் பணிக்கு அனுப்பப்படுவார்கள் எனத் தெரிகிறது