Published : 25,Feb 2022 09:02 PM

மகளைப்பிரியும் தந்தை.. நேசம் கடந்த பாசம் - அன்பின் கணங்களால் நனையும் உக்ரைன் இதயங்கள்!

Ukrainian-Father-Says-Goodbye-To-Daughter-As-He-Stays-Behind-To-Fight-Against-Russia-Viral-Video

வெடித்துச்சிதறும் குண்டுகளிலிருந்து மேலெழும் ஒலி உக்ரைனில் உள்ள யாரோ ஒருவரின் பிரியத்தின் கணத்தை கூட்டுகிறது. குண்டுகள் வெடிக்கும்போது, பிரியமானவர்களின் நிலையை கண்டு பதறுகிறது அவர்களின் மனங்கள். பிரியங்கள் எப்போதும் பிரியாதவை. தேடும் கண்களுக்கு அகப்படாதவை. உண்மையில் பிரிதல் என்பது நினைவுகளை இறுக்கமாக்குகின்றன. உக்ரைனின் ஒருபுறம் குண்டுமழை பொழிந்துகொண்டிருக்க, மறுபுறம் அன்பு ஆறாய் பெருக்கெடுத்து ஓடுகிறது. காணும் காட்சிகள் மனதை உருக்குகின்றன. அந்த காட்சிகளின் தொகுப்புகளை பார்ப்போம்.

மகளைப்பிரியும் தந்தை!

அந்த வீடியோ தொடங்குவதற்கு சில நொடிகள் இருக்கலாம். முட்டி நிற்கிறது கண்ணீர். வெளிப்படுத்திவிடக்கூடாது என்ற அந்த குழந்தையின் போராட்டம் தோல்வியடைந்துவிடுகிறது. சரியா எழுதக்கூட தெரியாத அந்த வயதில் உலகின் உள்ள அனைத்து அன்பின் சொற்களையும் திரட்டி, தன் மனதைப்போல கசங்கி கிடக்கும் ஒரு காகிதத்தில் ஏதோ ஒன்றை எழுதி தந்தையிடம் கொடுக்கிறாள் அன்பு மகள். அதில், அவள் எதுவேண்டுமானாலும் எழுதியிருக்க கூடும். 'போகாதப்பா' அல்லது 'நானும் வரேன்பா' 'மிஸ் யூ பா' என ஏதோ ஒன்று இருக்கலாம். அன்பின் வார்த்தைகளுக்கு மொழிகள் ஒரு பொருட்டல்லவே!

Viral video shows Ukrainian dad saying goodbye to daughter

அதை வாங்கியதும் அதுவரை அமைதியாய் இருந்த தந்தை, வெடித்துச்சிதறும் தோட்டாவைப்போல தன் மனதில் அதுவரை தேக்கி வைத்திருந்த கண்ணீரை கொட்டிவிடுகிறார். களத்திற்கு செல்ல வேண்டிய தருணம் அது. மகளை பிரியும் அந்த நொடி அந்த தந்தைக்கு உலகின் எல்லா கணங்களையும் விட கனமானதாக இருக்கிறது. கட்டித்தழுவுகிறார். எல்லாமுமாய் இருக்கும் மகளை பிரிந்து களத்திற்கு செல்ல வேண்டும். தேசத்துக்காக போராடியாகவேண்டும். அன்பும், நாட்டுப்பற்றும் நிறைந்த அந்த காணொலி உண்மையில் நம்மை அழ வைத்துவிடுகிறது.

தேசங்களைக்கடந்த நேசம்!

மனிதனால் வரையப்பட்ட எல்லைக்கோடுகளை கடந்தது இந்த காதல்! எல்லைகள் குறித்தோ, இனங்கள் குறித்தோ, நாடுகள் குறித்து தெரியாத காற்றைப்போல, உலகின் அணுக்களில் நிறைந்திருக்கும் சக்திவாய்ந்தது. உக்ரைன் மீது ரஷ்யா வெறியாட்டம் நிகழ்த்திக்கொண்டிருக்கும் சூழலில், காதலுக்கு அது எதுவும் புலப்படவில்லை. இரு காதலர்கள் ரஷ்யா -உக்ரைன் கொடிகளை போர்த்திகொண்டு நின்றுகொண்டிருக்கிறார்கள். அங்கே வேற்றுமை வேடிக்கைப்பார்த்துகொண்டிருக்கிறது. எல்லைக்கோடுகள் அழிந்து கொண்டிருக்கின்றன.

image

போரின் வெப்பம் தணிந்துகொண்டிருக்கிறது. அவர்களுக்கு போருக்கான எந்த காரணமும் தேவைப்படவில்லை. பிரிவுக்கான எந்த தேவையும் எழுவில்லை. இரண்டு கொடிகளும் அவர்களுக்கு வெறும் அடையாளங்கள் தான். அவர்களைச்சுற்றி ஏவுகணைகள் கூட பறக்கலாம். அவர்களின் காதல் தேசப்பற்றை கடந்த நேசப்பற்று.

ஸ்டாப் வார்!

அதேபோல மற்றொரு ராணுவ வீரர் தனது களத்திற்கு செல்வதற்கும் முன் காதலியிடமிருந்து கண்ணீர் மல்க பிரியாவிடை பெறுகிறார். உக்ரைன் தலைநகர் கீவில் குண்டு வெடிப்பு சத்தத்தின் இடையே, காதல் ஜோடி ஒன்று திருமணம் செய்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு மே 6-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்த நிலையில், அது வரை உயிரோடு இருப்போமோ என்று தெரியாத அச்சத்தில் தற்போதே மணம் முடித்து கொண்டனர்.

image

போர்க்களத்தில் வளர்ப்புப் பிராணிகள் கூட பலியாகி விடக் கூடாது என்று, பூனைகளோடு புகலிடம் தேடுகின்றனர் உக்ரைன் நாட்டு மக்கள். காதலர்கள், போரை நிறுத்துங்கள் என்று மழலை ஏந்தும் பதாகைகள் என போர்க்களத்தில் பூத்த காட்சிகள் காண்போரை கண் கலங்க வைக்கின்றன.

image

இந்த அனைத்துக்காட்சிகளும் நமக்கு உரைப்பது ஒன்றே ஒன்று தான். அது 'மனித உயிர்களை பலிகேட்கும் போர் வேண்டாமே!'என்பது தான்.

போர்களை புறந்தள்ளி எல்லைகளைக்கடந்து அன்பால் மனிதநேயத்தை நனைப்போம்!

-கலிலுல்லா

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்