காமெடி நடிகர் டு பிரஸிடெண்ட் - யார் இந்த உக்ரைன் அதிபர் விளாடிமீர் ஜெலன்ஸ்கி?

காமெடி நடிகர் டு பிரஸிடெண்ட் - யார் இந்த உக்ரைன் அதிபர் விளாடிமீர் ஜெலன்ஸ்கி?
காமெடி நடிகர் டு பிரஸிடெண்ட் - யார் இந்த உக்ரைன் அதிபர் விளாடிமீர் ஜெலன்ஸ்கி?

உக்ரைனை சுற்றி வளைத்து குண்டு மழைகளை பொழிந்துக் கொண்டிருக்கிறது ரஷ்யா... எந்த வீட்டினை எந்த ஏவுகணை தாக்கும் எனத் தெரியாத சூழல்... எந்நேரம் வேண்டுமானாலும் ரஷ்ய படைகளிடம் உக்ரைன் தலைநகர் கீவ் வீழ்ந்து விடும் என்கின்ற நிலைமை... இத்தனை மோசமான சூழலை ஒரு நாடு எதிர்கொள்ளும் போது அங்குள்ள மக்களின் மனநிலை என்னவாக இருக்கும்? அச்சமும், உயிர் பயமும் தானே அவர்களை ஆட்கொண்டிருக்க வேண்டும்? ஆனால், உக்ரைனில் ஒருவருக்கு கூட ரஷ்ய படையெடுப்பு குறித்தோ, தங்களின் எதிர்காலம் குறித்தோ பயம் இல்லை. அவர்களின் பேச்சில் ரஷ்யா மீதான கோபமும், எதிர்ப்பும் தான் வெளிப்படுகிறதே தவிர துளியும் அச்சம் தெரியவில்லை. உக்ரைன் மக்களின் இந்த துணிச்சலுக்கும், நம்பிக்கைக்கும் பின்னால் இருப்பது என்னவோ ஒரே பெயர் தான். 'விளாடிமீர் ஜெலன்ஸ்கி'.

என்ன நடந்தாலும் உக்ரைனை அதிபர் விளடிமீர் ஜெலன்ஸ்கி மீட்டு விடுவார் என்ற அசாத்திய நம்பிக்கை உக்ரைன் மக்களுக்கு இன்றளவும் இருக்கிறது. இடைவிடாது கேட்டு வரும் பீரங்கி முழுக்கங்களுக்கு இடையிடையே, அவ்வப்போது தொலைக்காட்சியில் தோன்றி ஜெலன்ஸ்கி ஆற்றும் உரை தான், உக்ரைன் மக்களை வீறுகொண்டு எழச் செய்து வருகிறது.

"இன்று உக்ரைன் தாக்கப்படலாம்; பல பகுதிகளை எதிரிகள் சூறையாடலாம். ஆனால், இங்குள்ள ஒரு சிறு குழந்தையை கூட அவர்களால் அடிபணிய வைக்க முடியாது. ஏனென்றால் உக்ரேனிய இனத்துக்கே அடிபணிந்து பழக்கமில்லை" என ஜெலன்ஸ்கி நேற்று நள்ளிரவு பேசிய பேச்சு, ஒட்டுமொத்த உக்ரேனியர்களையும் கிளர்ந்தெழ செய்திருக்கிறது. ராணுவ வீரர்களுக்கு துணையாக ஒவ்வொரு வீட்டில் இருந்தும் ஆண்கள் புறப்பட்டு செல்லும் அளவுக்கு ஜெலன்ஸ்கியின் உரை இருந்திருக்கிறது.

இவ்வாறு எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும், உக்ரைன் மக்களுக்கு கதாநாயகனாகவும் இருக்கும் விளாடிமீர் ஜெலன்ஸ்கி, ஒருகாலத்தில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக அதாவது சிரிப்பு நாடகக் கலைஞராக இருந்தவர் என்றால் நம்மால் நம்ப முடிகிறதா.. ஆம். ஒருகாலத்தில் நாடக நடிகராக வாழ்க்கையை தொடங்கியவர் தான் விளாடிமீர் ஜெலன்ஸ்கி. பள்ளிப்படிப்பை முடித்த ஜெலன்ஸ்கிக்கு, முதலில் ஒரு வழக்கறிஞர் ஆக வேண்டும் என்பது தான் விருப்பமாக இருந்திருக்கிறது. அதற்காக கீவ் சட்டக்கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார். பின்னர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் சில காலம் பணியாற்றினார்.

ஆனால், உக்ரைன் மீது ரஷ்யா செலுத்தி வரும் ஆதிக்கத்தை கண்டு மனம் கொதித்த ஜெலன்ஸ்கி, உக்ரைனை யாருடைய கைப்பாவையாகவும் இல்லாமல் சுதந்திரமான நாடாக மாற்ற வேண்டும் என சபதம் ஏற்றார். இதற்கு என்ன செய்ய வேண்டும் என யோசித்த அவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து 1995-ம் ஆண்டு 'க்வார்ட்டல் 95' என்ற குழுவை தொடங்கினார். இந்தக் குழுவின் வேலையே, நாடு முழுவதும் பயணித்து உக்ரைனை அந்நிய ஆதிக்கத்தில் இருந்து விடுவிப்பது குறித்து பேசுவது தான். மேடை மேடையாக ஏறி, குரல் வளை கிழிய பேசினார் விளாடிமீர் ஜெலன்ஸ்கி. ஆனால், அவரது பேச்சை கேட்பதற்கு 20 பேர் கூட கூடவில்லை என்பது தான் நிஜம்.

ஒருகட்டத்தில் சோர்ந்து போன அவர், 'இனி மக்களிடம் பேசக் கூடாது. அவர்களை ஈர்க்க வேண்டும்' என்கின்ற உத்தியை கையில் எடுத்தார். பல ஆண்டு அடக்குமுறைகளை கண்டு இறுகிப் போயிருந்த உக்ரைன் மக்களை, 'சிரிப்பு' என்ற கருவியை பயன்படுத்தி அவர்களிடம் மாற்றத்தை கொண்டு வர முடிவெடுத்தார். அதன்படி, தனது குழுவை க்வார்ட்டல் நாடகக் குழுவாக மாற்றிய அவர், ஊர் ஊராக சென்று மேடை நாடகங்களை போட்டார். பின்னர் தொலைக்காட்சி நாடகமாக அதனை மெருகேற்றினார். அதுவரை நாடகத்தை இயக்கி மட்டுமே வந்த ஜெலன்ஸ்கி, தொலைக்காட்சி நாடகங்களில் பிரதான நகைச்சுவை நடிகராக, தானே நடிக்க தொடங்கினார். 

ஒரு நேர்மையான பள்ளி ஆசிரியர், உக்ரைன் அதிபராக பொறுப்பேற்றால் என்ன நடக்கும்?' என்பது தான் அவரது நாடகங்களின் மையக் கரு. அன்றைய காலக்கட்டங்களில், ஊழல்வாதிகளாக இருந்த அமைச்சர்களையும், அரசாங்கத்தையும் தனது நாடகங்களின் வாயிலாக தோலுரித்துக் காட்டினார் ஜெலன்ஸ்கி. ஜெலன்ஸ்கியின் நடிப்பும், நகைச்சுவை வசனங்களும் பட்டித்தொட்டி எங்கும் அவரை பிரபலமாக்கின. அவருக்கென தனியாகவே லட்சக்கணக்கான ரசிகர்களும் உருவாகினர். ஒருபுறம் ஜெலன்ஸ்கிக்கு ரசிகர்கள் ஆதரவு பெருக பெருக, மறுபுறம், அவருக்கு அரசியல்வாதிகளிடம் இருந்து வரும் கொலை மிரட்டல்களும் அதிகரித்தன. அவரது நாடகங்களுக்காக பல முறை அவர் மீது கொலை வெறி தாக்குதல்களும் நடத்தப்பட்டது உண்டு. ஆனால் அதை கண்டு அவர் பயப்படவில்லை. அச்சுறுத்தலுக்கும், மிரட்டலுக்கும் நையாண்டிகள் மூலமாகவே பதிலடி கொடுத்தார். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அரசாங்கம், அவரது நாடகங்களுக்கு தடை விதித்தது.

'ஒரு நாடகமே அரசியல்வாதிகளுக்கு இந்த அளவுக்கு பயம் தருகிறது என்றால், நாம் ஏன் நேரடியாகவே அவர்களுடன் மோதக் கூடாது' என்ற முடிவுக்கு ஜெலன்ஸ்கி வந்ததும் அந்தக் காலக்கட்டத்தில் தான். நண்பர்களுடனும், தனது ரசிகர்களுடனும் ஆலோசனை நடத்தி தீவிர அரசியலில் குதித்தார் விளாடிமீர் ஜெலன்ஸ்கி. 'சர்வண்ட் ஆப் தி பீப்பிள்' என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். அதற்கு முன்னால் உக்ரைனில் இருந்த கட்சிகள், ஒன்று ரஷ்யாவுக்கு ஆதரவாக இருந்தன. இல்லையென்றால் எதிராக இருந்தன. ஆனால், ஜெலன்ஸ்கி இந்த இரண்டு கொள்கைகளையும் புறக்கணித்துவிட்டு மைய (நடுநிலை) அரசியலை கையில் எடுத்தார்.

'உக்ரைனுக்கு நல்லது செய்தால் ஆதரவு; ஆதிக்கம் செலுத்த நினைத்தால் எதிர்ப்பு'. இது ஒன்று மட்டுமே அவரது கட்சியின் கொள்கையாக இருந்தது. அதுவரை இதுபோன்ற மாற்று அரசியலை கண்டிராக உக்ரைன் மக்கள், விளாடிமீர் ஜெலன்ஸ்கிக்கு தங்களின் ஏகோபத்திய ஆதரவை வழங்கினர். முடிவு, 2019 அதிபர் தேர்தலில் மிக அதிகமான வாக்கு வித்தியாசத்தில் ஜெலன்ஸ்கி வெற்றி பெற்று உக்ரைன் அதிபராக பதவியேற்றார்.

ஆரம்பத்தில், ரஷ்யாவிடம் ஜெலன்ஸ்கி நெருங்கிய நட்பையே பேணி வந்தார். ஆனால் ரஷ்ய அதிபர் புதினோ, உக்ரைனை நட்பு நாடாகவோ, முழு சுதந்திர நாடாகவோ பார்க்க விரும்பவில்லை. மாறாக, தனது மறைமுக காலனியில் இருக்கும் நாடாகவே தான் பார்க்க விரும்பியது. விளாடிமீர் ஜெலன்ஸ்கி எவ்வளவு முயன்றும், உக்ரைன் மீது ஆதிக்கம் செலுத்தும் முயற்சியை ரஷ்யா கைவிட மறுத்தது. ஆகவே, ரஷ்யாவிடம் இருந்து சற்று விலகி நிற்பது தான் உக்ரைனுக்கு நல்லது என்ற முடிவுக்கு வந்தார் ஜெலன்ஸ்கி.

அதே சமயத்தில், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற ஐரோப்பிய நாடுகளுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டார். அந்த நாடுகளின் நிதியுதவியை உக்ரைனின் வளர்ச்சிக்காக முதலீடு செய்தார். கல்வித்துறையையும், மருத்துவத்துறையையும் சர்வதேச தரத்துக்கு உயர்த்தினார். உண்மையிலேயே, இதற்கு முன்பு உக்ரைனில் இருந்த அதிபர்களின் காலக்கட்டத்தை விட, விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஆட்சியில் இருந்த இந்த 3 ஆண்டுகள் தான், உக்ரைன் சீரான வளர்ச்சியை கண்டது. ஆனால், ஜெலன்ஸ்கியின் இந்தப் போக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு பிடிக்கவில்லை. இதுநாள் வரை, தனது காலடியில் மண்டியிட்டு கிடந்த உக்ரைன், இன்று மேற்கத்திய நாடுகளின் ஒத்துழைப்புடன் வேகமாக வளர்வது அவருக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. எல்லாவற்றுக்கும் மேலாக, நேட்டோ கூட்டணியில் இணையப் போகும் அளவுக்கு உக்ரைன் சென்றது புதினுக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தியது.

அதன் விளைவு தான், தற்போது உக்ரைன் போராக வெடித்திருக்கிறது. 'நாளை என்ன நடக்க போகிறது' என்ற மனநிலையில் தான் உக்ரைன் மக்களின் நாட்கள் இப்போது கழிந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அவர்களிடம் 'உயிர் பயம்' கொஞ்சமும் இல்லை. காரணம், விளாடிமீர் ஜெலன்ஸ்கி பல ஆண்டுகளாக தனது நாடகத்தின் மூலம் உக்ரைன் மக்கள் மனதில் பதிய செய்திருக்கும் தாரக மந்திரம், "பிறருக்கு மண்டியிட்டு வாழும் நூறாண்டுகளை விட, எதிர்த்து குரல் கொடுத்து சாகும் ஒரு நிமிடமே மேலானது' என்பது தான்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com