Published : 31,Aug 2017 05:20 PM
கோவையில் ப்ளூவேல் விளையாடிய மாணவர்: காவல்துறையினர் கவுன்சலிங்

கோவையில் 10 ஆம் வகுப்பு படித்து வரும் தனியார் பளளி மாணவர் ப்ளூவேல் விளையாடுவதை அறிந்த போலீஸார், அம்மாணவருக்கு உரிய அறிவுரைகள் வழங்கியதாகத் தெரிவித்தனர்.
கோவை மாநகர காவல்துறை சார்பில் செயல்படுத்தப்படும் ‘போலீஸை தெரிந்துகொள்ளுங்கள்’ எனும் திட்டத்தின்கீழ், ஆணையர் அலுவலகத்தைப் பார்வையிட வந்த மாணவர்களிடம் ப்ளூவேல் குறித்து போலீஸார் விசாரித்துள்ளனர். அப்போது அந்த விளையாட்டை கடந்த இரு வாரங்களாக விளையாடி வருவதாகக் கூறிய மாணவரின் செல்போன் எண்ணை தொடர்ந்து கண்காணித்தனர். அவர் விளையாடுவதை உறுதி செய்து கொண்ட போலீஸார், விளையாட்டை விட்டு வெளியேறும்படி அம்மாணவருக்கு கவுன்சலிங் வழங்கியுள்ளனர். அதே சமயம், அம்மாணவரின் பெயர் விவரங்களை வெளியிட போலீஸார் மறுத்துவிட்டனர்.